Loading...

Articles.

Enjoy your read!

வாலிபம்

வாலிபம், இது குழப்பங்களின் புகலிடம். களியாட்டுகளின் கல்விக்கூடம்.


புதிய வாழ்க்கைப் பாடங்களின் வகுப்பறை. அட! என்ன வாழ்க்கைடா இது என்று சொல்லி தலையில் தட்ட வைக்கும். மறுநாளே இதுவல்லவோ வாழ்க்கை என்று வானில் முட்ட வைக்கும். இச்சூழ்ச்சிக்கார சூழ்நிலையில் கவனமுடன் பயணிக்க வேண்டும்.

குறிக்கோள் இல்லாமல் உன் காலை மண்ணில் ஊன்றாதே. வெற்றியின் மீது தீரா பசி கொள். இது சிந்திக்க வேண்டிய நேரமில்லை. சிந்தித்து செயல்படவேண்டிய நேரம்ஒருபோதும் பணத்திற்காக மட்டும் உழைக்காதே. 

அது ஒரு நாள் உன்னை நிச்சயம் சோர்ந்து போகச் செய்யும். உனக்கென்று இருக்கும் மரியாதையையும் உனக்குள் இருக்கும் சுயமரியாதையையும் புதுப்பிக்க வெற்றிகளின் பின்னால் ஓடு.

சாதித்த ஒவ்வொருவரின் வாழ்க்கை பக்கங்களை திரும்பி பார். அவர்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்ற ஏணிகளை கவனித்துப் பார். அவை அனைத்தும் அவர்கள் தாமே பழுதுபார்த்த ஏணிகள். வெற்றி ஏணியின் படிக்கட்டுகள் உன் சூழ்நிலைகளால் வீசிய சூறாவளியில் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலும் முயற்சி என்னும் முதல் படியை சரிசெய்து அதன் மேல் ஊன்றி நில். ஒவ்வொரு படியாக கவனமாக செப்பனிட்டு மேலே ஏறு. இச்சைகளிடம் சற்று பொறுத்திரு என்று கட்டளையிடு.

என்னால் முடியவில்லை என்று நீ சோர்ந்து பூமியில் விழும்போதெல்லாம் உன்னை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியை நினைத்து பொறுமை கொள்.திரும்ப முயற்சி செய்.நினைவில் கொள் .நீ தோற்றுவிட்டு சொல்லும் எந்த காரணத்துக்கும் இந்த உலகம் காது கொடுக்காது.மாறாக நீ ஜெயித்து விட்ட பிறகு உன் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையும் பிறருக்கு தாரக மந்திரம் ஆகும் .

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, மறுபுறம் நீ சிந்திக்க வேறு சில இருக்கின்றன.முதலில் உன் குடும்பம் ,பணம் ஒருபோதும் உன் கண்ணீரை துடைக்க முடியாது .உன் தாயின் முந்தானையால் மட்டுமே அது முடியும் .உன் குடும்பத்தை  நேசி .இம்மட்டும் வளர்த்த குடும்பத்தை இளமையில் நீ மறக்கலாமா? உன் குடும்பம் எவ்வாறு நடக்கிறது என்று கவனி ,தேவையில்லாதவற்றில் மூக்கை நுழைக்காதே.மாறாக சற்று தூர நின்று அனைவரது பங்களிப்பையும் பார்த்து பாராட்டு .குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்று ஆசீர்வாதங்களை அள்ளு ! அவை உனக்கு எப்போதும்  ஒரு பெரிய பாதுகாப்பு.

அடுத்து நட்பு .இளமையின் ஆறுதல் .நண்பர்களுக்காக உயிரையும் கொடு்க்கும் அளவிற்க்கு அவர்களை நேசி.உண்மையான நட்புகளை அறிந்து கொள் .நீ இருட்டில் செய்யும் தவறுகளை ஒருபோதும் நல்ல நட்பு பாராட்டாது.மாறாக தீமைகளை இருட்டில் விட்டு உன்னை மாத்திரம் வெளிச்சத்திற்கு கொண்டு வர போராடும் .நண்பர்களுக்கு எப்போதும் நேரம் ஒதுக்குங்கள் .மனதின் மகிழ்ச்சிக்கு வாய்க்கால் வெட்டுங்கள் .இளமை சிரித்து வாழ ஏற்ற தருணம் .அதற்கு வழிவிடுங்கள்.சேர்ந்திருக்கும் சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துங்கள்.

காதல் வெற்றிக்கு முன் கட்டிய தடுப்புச்சுவர் என்று யாரேனும் உங்களிடம் சொன்னால் அவரை பார்த்து நகைத்து விட்டு வாருங்கள் .விஷயம் தெரிந்த யாரும் அவ்வாறு ஒருபோதும் சொல்ல மாட்டார்கள் .கல்லூரிக்கு வந்தால் கட்டாயம் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் மாற வேண்டும். இவன்தான் இவள்தான் என்று உங்கள் ஆழ்மனது தலையசைக்கும் வரை பொறுத்திருங்கள். சமயம் வாய்த்தால் நிச்சயம் காதல் செய்யுங்கள் .அது உங்கள் மனிதத்திற்கு அர்த்தம் கொடுக்கும்.எதுவாயினும் அது உங்களை முன்னேற்ற பாதையில் நடத்துகிறதா என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

அன்பு ,தன்னம்பிக்கை,சுயமரியாதை இவற்றை உன் வாலிபத்தில் பயிர் செய்து, நீ பறிக்கும் ஒவ்வொரு மலரும் உன் வெற்றி மாலையில் சேரும்.வரலாற்றின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் வாழ்ந்துகாட்டுங்கள்!

Tagged in : Tamil, ராஜ் பிரியங்கா .ரா,

   

Similar Articles.