கிண்டி பொறியியல் கல்லூரயில் தமிழுக்கென்று உள்ள ஒரே இடம் மாதவம்.
உயிர்த் தமிழ் பயிர் செய்வோம் என்னும் குரலோடு இயங்கிக்கொண்டிருக்கும் மாதவம் கிண்டி பொறியியல் கல்லூரியின் ஒரு மாபெரும் தவத்தின் பயனே !
மாதவம் தமிழ் புத்தகங்கள் நிறைந்த நூலகம் ,தமிழ் ஒலிக்கும் இடம்.
மாதவத்தின் மிக முக்கியமான விழா தான் "முத்தமிழ் விழா".
இயல்,இசை,நாடகம் மூன்றையும் அடிப்படையாகக் கொண்ட இவ்விழா தனது இரண்டாவது வருடத்தில் இசைத்தமிழை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கிறது.
முத்தமிழின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சு.வெங்கடேசன் அவர்கள் வருகை தந்திருந்தார்.
தமிழின் தொன்மையையும் , பெருமைகளையும் பேசி அரங்கத்தை உறைய வைத்தார். பெண்மையை போற்றி வாழ்ந்த 2000 வருட தொன்மை மொழியின் பல்வேறு அழிக்க முடியாத வரலாற்று உண்மைகளை வரலாற்று பின்னணியுடன் விளக்கினார்.
அடுத்த நாள் (மார்ச்சு 11) மீண்டும் முத்தமிழ் விழா தொடங்கியது.
சப்தம் இசைக் குழுவினர்கள் பார்வையாளர்களைப் பாடியே மயக்கினர். 'சின்னஞ்சிறு கிளியே' எனும் பாரதியின் பாடலையும் நினைவுபடுத்தினர். மேலும்,புல்லாங்குழல்,
நடனம் என பாரம்பரிய கலைகளால் பட்டையைக் கிளப்பினர்.
அடுத்ததாக அனல் பறக்கும் பட்டிமன்றம் நடைபெற்றது.வாழ்வில் இன்பம் தருவது கனவான இலட்சியமா? நிறைவான பொருளாதாரமா? அரங்கமே கரவொலிகளால் எதிரொளித்தது.
இப்படியாக காலைப் பிரிவை கூழ் கொடுத்து முடித்து வைத்தனர்.
லயித்திடு லகரத்தோடு !
இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த இசைத்தமிழ் பயிலரங்கத்திற்கு வெயில்,அங்காடி தெரு, காவியத்தலைவன் போன்ற திரையுலகில் தவிர்க்க முடியாத படங்களின் இயக்குநரான வசந்தபாலன் வருகை புரிந்தார். கவிதைகளில் கொட்டிக்கிடக்கும் இன்பத்தை காதல் மொழிகளால் எடுத்துரைத்து அவையில் இருந்தோரின் மனம் கவர்ந்தார் !
" வெறும் அன்போடு அல்ல ! பேரன்போடு உலகை எதிர்கொள்ளுங்கள் "
என்று இந்த கவிதை உலகில் காதலே பிரதானம் என்றும் அந்த காதலாலே உலகை வசப்படுத்துங்கள் என்றும் பேசிய பேச்சில் மயங்காதவர்கள் எவரும் இருந்திருக்க முடியாது.
அடுத்ததாக கல்கி சுப்ரமணியம்
ஒடுக்கப்படுவதன் வலியை இவரது வார்த்தைகள் வலியோடும் , வலிமையோடும் சொல்லின ! இதுவரை மூன்றாம் பாலினத்தவரைத் தவறாக சித்தரித்த சமூகத்தின் மீதான கோபத்தை தன் கவிதை என்னும் அம்பு கொண்டு வீழ்த்திய இவரின் ஒரே வேண்டுகோள் "எங்களுக்கு நீங்கள் தரும் சலுகைகளை விட, எங்களையும் உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்று தரும் அரவணைப்பு தான் எங்களுக்கு தேவையாக உள்ளது என்னும் வார்த்தைகள் அனைவரையும் நிசப்தத்தில் ஆழ்த்தியது. இன்று பிச்சையெடுப்பவர்களாக, பாலியல் தொழிலாளியாக, பயமுறுத்தி காசு பறிப்பவர்களாக என நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு திருநங்கையும், எங்களை நீங்கள் ஒதுக்கி வைத்ததன் வெளிப்பாடே என்னும் வார்த்தைகள் எல்லோர் மனதிலும் குற்ற உணர்ச்சியை விதைத்ததைப் பார்க்க முடிந்தது. திருநங்கைகளின் வாழ்க்கை முறையை கவிதைகள் வாயிலாக எடுத்துரைத்தார் , கண்ணீர் பெருக வைத்தார். காரசாரமாக நடைபெற்ற
கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இறுதியாக மாதவத்தின் மாணவர்களால் முத்தமிழ் விழா முழுமை பெற்றது.
இது தமிழை வளர்ப்பதற்கான மன்றம் மட்டும் அல்ல. தமிழால் வளர்வதற்கான மன்றம் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்து சென்றிருக்கிறது மாதவத்தின் முத்தமிழ் விழா!