Loading...

Articles.

Enjoy your read!

ஆயிரத்தில் ஒருவன், ஒரு மறுக்கப்பட்ட காவியம்

கமலஹாசன், செல்வராகவன் போன்றோர் படங்களெல்லாம் வெளியான
சமயத்தில் வரவேற்பில்லை என்றாலும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து
ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்படுகின்றன. அதற்கு காரணம்
அதிலிருக்கும் முற்போக்கு சிந்தனையும், எந்த வித சமரசமுமின்றி
படமாக்கப்படும் விதமும் தான். அப்படி காலம் கடந்து நிற்கும் படங்களில்
ஒன்று தான் ஆயிரத்தில் ஒருவன்.
2010இல் சுமார் ஒரு மூன்று வருடம் பெரிய செலவில் எடுத்து வெளியான
படம். வெளியான காலக்கட்டத்தில் சொல்லிக்கொள்ளுமளவு ஓடவில்லை.
இப்பொழுதும் அதைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்; அதுவே
அப்படத்தின் வெற்றி.
சோழர்கள் பாண்டியர்களை வைத்து கற்பனையாய் ஒரு ஃபாண்டசி
முயற்சிக்கிறார் செல்வா. படத்தின் முதல் பாதி, இந்தியானா ஜோன்ஸ்
படங்கள் போல் நகர்கிறது. சோழ இலவரசன் சென்ற வழி இந்திய படை
ஒன்று தேடிச்செல்கிறது. இலக்கை அடைய நடுவில் வரும் ஏழு தடைகள்
திரைக்கதையை நகர்த்த பயன்படுகின்றன. முக்கியமாய் நடராசர் சிலையை
வைத்து எடுத்திருக்கும் காட்சி, ஒளிப்பதிவும் இசையும் பின்னியெடுக்கும்.
சரி, இலக்கை அடைந்தால், ஆங்கே உண்மையிலேயே சோழர்கள்
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதன்பின் நடப்பதே மீதிக்கதை.
இப்படத்தை ஆய்வுக்கட்டுரையாய் எழுத ஏகப்பட்டவை இருந்தாலும், ஒரு
காட்சியை மட்டும் விவரிக்க போகிறேன்.
படத்தில், வாழ்க்கையின் கொண்டாட்டம்(Celebration of Life) என்றொரு பாட்டு
வரும், வெறும் நடனத்தை வைத்தே பல கருத்துகள் கூறியிருப்பர்.

முதலில் ஆரம்பிக்கும்பொழுது, மக்களின் கவனத்தை மன்னர் ஈர்ப்பார். ஆதலால் கையை விரித்து நடனத்தை ஆரம்பிக்கிறார்.

அக்காலத்தில் சிவன்(அவர்கள் குலக்கடவுள்) அனைத்து செல்வங்களையும் தன் குலத்திற்கு வாரி இறைத்ததாக கூறுவார்.

இதனால் தம் முன்னோர் செழித்து வாழ்ந்ததாகவும் கூறுவார். இதையெல்லாம் நான் எப்போது பெறுவேனோ என்று ஏக்கத்தோடு கேட்பார்.

கவலை வேண்டாம் மன்னரே, நாம் எல்லோரும் தஞ்சை செல்லப்போகிறோம் என்று கார்த்தி ஆடத்துவங்குவார்.

தஞ்சை செல்வதை எல்லோரும் கொண்டாட ஆரம்பிப்பார்கள். இதுவே அப்பாடலில் சொல்ல வந்த கருத்து. அதை நடனத்தின் மூலமாகவே சொல்லியிருப்பார்கள்.

படத்தின் கடைசி பதினைந்து நிமிடங்களை ஈழத்தமிழர் பிரச்சனையுடன் ஒப்பிடலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஏனெனில் இராணுவம் சோழர்களை கொன்று குவப்பது போன்ற காட்சிகளும், பார்த்திபனின் “இந்த படைக்கலன் பற்றி தாங்கள் கூறவே இல்லையே? அச்ச படுவோம் என்றா?” என்ற வசனமும் அந்த ஒப்பனைக்கு வலுசேர்க்கின்றன,

”சோழனின் பயணம் தொடரும்.” என்று நம்பிக்கையோடு முடித்திருப்பார் செல்வா. அதை உடைத்த நாம் இப்போது அவரிடம் சென்று, “எப்போது இரண்டாம் பாகம்?” என்று கேட்டு வருகிறோம். அவரும் சிரித்து விட்டு நகர்கிறார். சோழன் கதை பாதியில் நிற்கிறது.

Tagged in : Tamil, புனீத்,

   

Similar Articles.