1. தங்களைப் பற்றியும், தங்களின் தமிழார்வத்தைப் பற்றியும் கூறவும்.
நான் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவன். இராமகிருஷ்ண மிசன் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் பள்ளிக் கல்வியை முடித்தபின், கொழும்புக்கு அண்மையில் உள்ள மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டிடக் கலைஞராகப் பட்டம் பெற்றேன். இலங்கையில் 17 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், 1993 ஆம் ஆண்டில் தொழில் நிமித்தமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றேன். இருபத்து மூன்று (23) ஆண்டுகள் அந்நாட்டில் பணியாற்றியபின்னர் ஓய்வு பெற்றுக்கொண்டு இப்போது மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்து எனக்கு ஆர்வமுள்ள துறைகளில் ஆய்வுகள் செய்வது உட்படச் சமூகத்துக்கு நன்மை பயக்கும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன்.
அமீரகத்தில் பணியாற்றிய காலத்தில் 2003 ஆம் ஆண்டில் பல மொழிகளில் கலைக்களஞ்சியங்களை உருவாக்கும் விக்கிப்பீடியாத் திட்டம் பற்றி அறியும் வாய்ப்புக் கிடைத்தது. அக்காலத்தில் விக்கிப்பீடியா தமிழில் இருக்கவில்லை. பல்வேறு அறிவுத் துறைகள் சார்ந்த விடயங்களைத் தமிழில் கொண்டுவருவதற்கு உதவும் என்ற எண்ணத்திலேயே தமிழில் விக்கிப்பீடியாவைக் கொண்டு வருவதற்கான தொடக்க வேலைகளில் ஈடுபட்டேன். முதல் ஒன்பது மாதங்கள் வரை நான் ஏறத்தாழத் தனியாகவே இயங்கி வந்தேன்.அதன் பின்னரே இந்தத் திட்டத்தைப் பற்றி அறிந்துகொண்டு படிப்படியாகப் பலர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பங்களிப்புச் செய்யத் தொடங்கினர். கடந்த பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்புச் செய்துவரும் நான் இது வரை 4500க்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன் மேலும் சில ஆயிரம் கட்டுரைகளை விரிவாக்கியும் உள்ளேன்.
என்னுடைய இந்தப் பங்களிப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மதிப்புக்குரிய சில நிறுவனங்கள் எனக்கு விருதுகளை வழங்கியுள்ளன. கனடாவில் இருந்து இயங்கும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், அவர்கள் பல ஆண்டுகளாக வழங்கிவரும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான "இயல் விருதை" 21016 ஆம் ஆண்டில் எனக்கு வழங்கினர். தொடர்ந்து அதே ஆண்டில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இடம்பெற்ற அதன் தமிழ் விழாவில் என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்துக் கௌரவித்தனர். தமிழ்நாட்டின் பிரபல சஞ்சிகையான ஆனந்தவிகடன் 2016 ஆம் ஆண்டுக்கான அதன் நம்பிக்கை விருகளுக்காக "சிறந்த பத்து மனிதர்"களில் ஒருவராக என்னைத் தெரிவு செய்து எனக்கு மதிப்பளித்தது. தமிழ் விக்கிப்பீடியா தொடர்பில் எனக்குக் கிடைத்த இந்தக் கௌரவங்கள் அனைத்தும் அதன் வளர்ச்சிக்காக உழைத்துவரும் ஒட்டுமொத்த தமிழ் விக்கிப்பீடியா சமூகத்துக்கு உரியது.
2. தமிழ் விக்கிபீடியாவில் தங்களின் பங்களிப்பில் மறக்கவியலா கட்டுரைகள்.
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் உருவாக்கத்தில் பயனர்களின் பங்களிப்புப் பல்வேறு வழிகளில் இடம்பெறுகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை மொழி பெயர்த்தல், தமிழ் விக்கிப்பீடியாவுக்கெனப் புதிதாகக் கட்டுரைகளை எழுதுதல், இவ்விரண்டு வழிகளிலும் ஏற்கெனவே பிறர் எழுதிய சிறிய கட்டுரைகளை விரிவாக்குதல் என்பன இவற்றுள் முக்கியமானவை. இவற்றுள் ஏதாவது ஒரு வகையில் சில கட்டுரைப் பங்களிப்பின்போது திருப்தி உண்டாகும். சில வேளைகளில் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற தூண்டல்கள் எழும். இது பெரும்பாலும் அந்தந்த நேரத்து ஆர்வங்களையும், சிலவேளைகளில் பிற பயனர்கள் தரும் ஊக்கத்தையும் பொறுத்தது. பெரிய கட்டுரைகள்தான் இவ்வாறான திருப்தியையும், தூண்டல்களையும் உருவாக்கும் என்றில்லை. பல சந்தர்ப்பங்களில் சிறிய கட்டுரைகளில்கூட இவ்வாறான உணர்வுகள் ஏற்பட்டதுண்டு. இது தற்சார்பான (subjective) ஒரு உணர்வுதான். தமிழ் விக்கிப்பீடியாவில் 14 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எனது பங்களிப்புக் காலத்தில் இவ்வாறான திருப்தியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்திய கட்டுரைகள் உள்ளன. குறிப்பாக ஒன்றிரண்டைச் சொல்லலாம்.
முதலாவது, "100 பொருட்களில் உலக வரலாறு" என்னும் கட்டுரை. இது உண்மையில் ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரையின் மொழி பெயர்ப்பாகவே எழுதப்பட்டது. இது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு காலகட்டங்களுக்குரிய வரலாற்று முக்கியத்துவம் கொண்ட அரும்பொருட்களின் அட்டவணை. எனினும், இதில் உள்ள பெரும்பாலான அரும்பொருட்கள் சார்ந்த கட்டுரைகளும் இக்கட்டுரையுடன் சேர்த்துத் தனித்தனிக் கட்டுரைகளாக எழுதப்பட்டன. எனக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானிய அருங்காட்சியகத்துக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. அங்கே இக்கட்டுரையின் தலைப்புக் கொண்ட ஒரு நூல் இருந்தது. அதில் நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி உலக வரலாற்றின் முக்கியமான 100 பொருட்கள் பற்றிய விபரங்கள் இருந்தன. இந்தப் பொருட்களில் பலவற்றை நான் நேரில் பார்க்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்ததால் இது தொடர்பாக ஆர்வம் உண்டானது. இப்பொருட்கள் தொடர்பில் கட்டுரைகளைத் தமிழில் எழுத எண்ணியபோதுதான் ஆங்கில விக்கிப்பீடியாவில் இத்தலைப்பில் கட்டுரை இருந்ததைக் கண்டு அதை மொழிபெயர்த்ததுடன், அக்கட்டுரை குறிக்கும் 100 பொருட்களில் ஏறத்தாழ 60 க்கு மேற்பட்ட பொருட்கள் பற்றிய கட்டுரைகளையும் மொழி பெயர்த்தேன்.இது என்னுடைய நேரடி அனுபவத்துடனும் தொடர்புபட்டிருந்ததால் இது என்மனதில் நிலைத்திருக்கக்கூடிய கட்டுரைகளின் தொகுதி எனலாம். இது தவிர, "யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கு" என்னும் கட்டுரையும் எனக்கு ஆர்வத்தை உண்டாக்கிய இன்னொரு கட்டுரை.
3. தமிழ் விக்கிபீடியாவிற்குப் பணியாற்றுகையில் தாங்கள் எதிர்கொண்ட சுவாரசியமான பாரட்டுக்கள், எதிர்ப்புகள்?
தமிழ் மொழி, தமிழ் பண்பாடு போன்றவற்றின் வளர்ச்சிக்காக உழைப்பது தொடர்பில் வழங்கப்படும் பாராட்டுக்கள் பொதுவாக இலக்கியம், மரபுவழியான மொழி சார்ந்த செயற்பாடுகள் போன்றவை தொடர்பிலேயே வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இணையம் வழியான தமிழ் விக்கிப்பீடியாவுக்கான பங்களிப்புக்கு அங்கீகாரம் அளித்துப் பல நிறுவனங்கள் பாராட்டிக் கௌரவித்தது முக்கியமான ஒன்று.
பல ஆண்டுகள் உழைப்புக்குப் பின்னரே இவ்வாறான விருதுகள் ஒருவருக்குக் கிடைக்கின்றன. இதுவே அவற்றுக்கான பெறுமதியும் கூட. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதிக்கொண்டிருக்கும்போதே உடன் பங்களிப்பவர்கள் வழங்கும் பாராட்டுக்கள், இணையவழிப் பதக்கங்கள் என்பனவும் பங்களிப்பின் பல்வேறு கட்டங்களில் அவர்களிடமிருந்து கிடைக்கும் வாழ்த்துக்களும் நம்மைத் தொடர்ச்சியான ஊக்க நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமான விடயம்.
எதிர்ப்பு என்று எதுவும் இல்லை. ஆனாலும், எனது விக்கிப்பீடியாப் பங்களிப்பின் தொடக்க காலங்களில் எதிர் கொண்ட சில சுவாரசியமான விடயங்கள் உள்ளன. தமிழ் நாட்டுத் தமிழுக்கும், இலங்கைத் தமிழுக்கும் இடையில் பேச்சுவழக்கில் வேறுபாடுகள் இருப்பதைப் பலர் அறிவர். அதுபோல், எழுத்து வழக்கிலும் சில வேறுபாடுகள் உள்ளன. பொதுவான விடயங்களை எழுதும்போதும் இந்த வேறுபாடுகள் ஓரளவுக்கு இருந்தாலும், அறிவுத்துறைகள் சார்ந்து எழுதும்போது இந்த வேறுபாடுகள் மேலும் துலக்கமாகத் தெரியும். தொடக்கத்தில் நான் மட்டும் பங்களிப்புச் செய்த காலத்திலும், பின்னர் சில காலம் பங்களிப்பவர்களில் கூடிய வீதத்தினர் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழராக இருந்த காலத்திலும், தமிழ் விக்கிப்பீடியாவில் "இலங்கைத் தமிழ் வாசனை" கூடுதலாக இருப்பதாகச் சில முறைப்பாடுகள் இருந்தன. காலப்போக்கில், கூடிய எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் இருந்து கூடுதலானோர் பங்களிப்புச் செய்ய முன்வந்தபோது நிலைமை சீராகி விட்டது. எனினும், கலைச்சொல் வேறுபாட்டுப் பிரச்சினை தீர்ந்ததாகக் கொள்ள முடியாது.. ஆனால், இது தமிழ் விக்கிப்பீடியாவுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை அல்ல. பன்னாட்டுத் தமிழ்க் கல்வியாளர்களும், அறிஞர்களும் இது குறித்துச் சிந்திக்கவேண்டும்.
4. ஹார்வார்டு தமிழ் இருக்கை அமைப்பின் முயற்சி, நிச்சயமாக தமிழின் வளர்ச்சிக்கு ஓர் வித்து. அதைப் பற்றி தங்கள் கருத்து.
தமிழ் தொடர்பான ஆய்வுகளை உலக மட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உலகின் புகழ் பெற்ற நிறுவனங்களில் தமிழ் ஆய்வு நடைபெறுவது அவசியமானது. தமிழ்நாட்டிலும், இலங்கையிலும், தமிழ் வழங்கும் பிற நாடுகளிலும் இடம்பெறும் பல தமிழாய்வுகள் உலகத் தரம் கொண்டவை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், இந்த ஆய்வுகள், உலக அளவில் அறியப்படுவதிலும், அங்கீகரிக்கப்படுவதிலும் பல பிரச்சினைகள் உள்ளன. உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களில் தமிழாய்வுக்கு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் தமிழர் தாயகப் பகுதிகளில் இடம் பெறும் தரமான ஆய்வுகளுக்கும்கூட உலக அளவிலான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புக்கள் ஏற்படும். ஹாவார்டில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியையும் இவ்வாறான கண்ணோட்டத்திலேயே பார்க்கவேண்டும். உள்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது பெருந்தொகைப் பணத்தை வெளிநாட்டில் கொட்டவேண்டுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வறுமை, அடிப்படைக் கல்வி வசதி இன்மை, வேலை வாய்ப்பின்மை போன்ற பெருமளவு பிரச்சினைகள் உள்நாட்டில் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால், ஒரு சமூகத்தின் பன்முகப்பட்ட வளர்ச்சியையும், நலன்களையும் கையாளும்போது, "ஆறு முற்றாக வற்றியபின் கடக்கலாம்" என்ற சிந்தனைப் போக்கில் செயற்பட முடியாது. இது நம்மை வரலாற்றுப் போக்கில் பின்தள்ளிவிடும். எல்லா விடயங்களையும் இணையாக முன்னகர்த்திச் செல்வதே உசிதமானது. எவ்வாறெனினும், நமது சமூகத்தின் முதலீடு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்யவேண்டியதும் முக்கியம். எனவே, ஹாவார்டு தமிழ் இருக்கை தொடர்பிலான ஒருங்கிணைப்பாளர்கள் இது குறித்துக் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
5. இன்றைய தலைமுறையினரிடம் தமிழ் வாசிப்புப் பழக்கம் மிகக் குறைந்துள்ளது. அதை மேம்படுத்த தங்கள் யோசனை..
வாசிப்புப் பழக்கம் குறைந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், இதற்கான தீர்வுகள் குறித்துச் சிந்திக்கும்போது இவ்விடயத்தைச் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். தகவல்களையும், உணர்வுகளையும் பேசுவதன் மூலம் இன்னொருவருக்கு உணர்த்திவந்த மனிதர், அவற்றை எழுத்து மூலம் உணர்த்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டபோது அதனோடிணைந்து வாசிப்பும் உருவானது. பல தலைமுறைகளுக்கு முன்னர் எழுதப்பட்டவற்றையும், உலகின் பல்வேறு பகுதிகளில் எழுதப்படுவனவற்றையும் நாம் இன்று நமதாக்கிக் கொள்கிறோம் என்றால் அது வாசிப்பினாலேயே என்பதில் ஐயமில்லை. காலத்தையும் தூரத்தையும் கடந்து அறிவைப் பெற்றுக்கொள்வது பல ஆயிரம் ஆண்டுகளாக வாசிப்பின் மூலமே சாத்தியமானது. வாசிப்புப் பழக்கம் இன்று குறைகிறது என்றால் அதற்கான காரணம் என்ன என்று அறியவேண்டும். அறிவை வாசிப்புத் தவிர்ந்த வேறு வழிகளில் பெற்றுக்கொள்ள முடிகிறதா, பல விடயங்களையும் வாசித்து மூளையில் சேமித்து வைத்துக் கொள்ளவேண்டிய தேவை குறைந்துவிட்டதா அல்லதுஇன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைக்கும் வசதிகள் மக்களை அறிவுத்தேடலில் இருந்து திசை திருப்புகின்றனவா? உண்மையில் வாசிப்புப் பழக்கம் குறைவதற்கு இவை மூன்றுமே வெவ்வேறு அளவுகளில் காரணமாக இருக்கின்றன என்றுதான் கூற வேண்டும்.
வாசிப்பினால் பெற்றுக்கொள்ளக்கூடிய பயன்களைக் காட்சி, கேள்விப் புலன்களிலூடாக இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வசதி தற்காலத்தில் ஏற்பட்டுள்ளது. "யூடியூப்" போன்ற இணையத்தளங்கள் இவ்வாறான வசதிகளை வழங்குகின்றன. வாசிப்பதில் உள்ளதைப் போன்றே ஒருவர் விரும்பியதை விரும்பிய நேரத்தில் விரும்பும் இடத்திலிருந்தே பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வசதி இவற்றில் உண்டு. அது மட்டுமன்றி எதையும் நேரில் பார்த்து அறிந்துகொள்வது போன்ற வசதியையும் இந்த ஊடகம் வழங்குவதால் வாசிப்பைவிடச் சில வேளைகளில் சிறப்பாகவே இவை பயன்படுகின்றன. எனவே இந்த வழியூடாக வாசிப்புக் குறைகிறது என்பது கவலைக்குரிய விடயம் அல்ல. இது அறிவைப் பெற்றுக்கொள்வதிலான அடுத்தகட்ட வளர்ச்சியே. ஒரு காலத்தில் பல விடயங்களை வாசித்து, தேவைப்படும்போது எழுதுவதற்கும், பேசுவதற்குமாக மனனம் செய்து வைத்துக்கொண்டனர். அது நூல்கள் எல்லோருக்கும் இலகுவாகக் கிடைக்காத காலம். இன்றைக்கு அவ்வாறான தேவை வெகுவாகக் குறைந்துவிட்டது. தேவைப்படும்போது இருந்த இடத்தில், உடனடியாகவே வேண்டிய தகவல்களைக் கண்முன் நிறுத்துவதற்கான வசதிகள் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன. இதுவும் வாசிப்புக்கான தேவையை குறைக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறான நிலையில், முக்கியமான தேவை அறிவும், தகவல்களும் உரியவர்களை இலகுவாகச் சென்றடைவதற்கு உகந்த ஊடகங்களினூடாக அவற்றை வெளிக்கொண்டு வருவதே.
இவ்வாறு கூறுவதால், வாசிப்புக்கான தேவை இப்போது இல்லாமல் போய்விட்டது என்பது பொருளல்ல. இன்றைக்கும், பெருமளவு அறிவும், தகவல்களும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஆய்விதழ்கள், நூல்கள் போன்ற வாசிப்புக்கான ஊடகங்களிலூடாகவே கடத்தப்படுகின்றன. எனவே, வாசிப்பின் முக்கியத்துவம் இன்னும் குறைவடையவில்லை. இவ்வாறான சூழலில், பரீட்சைப் போட்டியை மையமாகக் கொண்ட கல்வி முறையின் நெருக்கடியாலும்; சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள், சமூக வலைத்தளங்கள், கைப்பேசிகள் சார்ந்த அளவு மீறிய ஈடுபாடுகளின் திசை திருப்பல்களினாலும் பரந்துபட்ட துறைகளிலான வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவது கவலைக்கு உரியதே. சிறு வயதிலிருந்தே மாணவர்களை, வாசிப்பின் தேவையை உணர்ந்துகொள்ளக்கூடிய வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது முக்கியம். கல்வித் திட்டங்களிலும் இதற்கான வழி முறைகள் உள்ளடக்கப்பட வேண்டும்.
6. தமிழ் விக்கிபீடியாவில் எழுதும் மற்ற எழுத்தாளர்களைப் பற்றி கூறுங்கள்..
தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை 1200க்கும் மேற்பட்டவர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். இவர்களுள் ஒரு பகுதியினர் நீண்ட காலமாகத் தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் பங்களிப்புச் செய்து வருபவர்கள். வேறு சிலர் காத்திரமான பங்களிப்புகளுக்குப் பின் பல்வேறு காரணங்களால் நிறுத்திக்கொண்டவர்கள். சிலர் மிகக் குறைந்த அளவில் பங்களிப்புச் செய்தவர்கள். இவர்கள் அனைவருக்குமே தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கு உண்டு. குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்புச் செய்தவர்களைப் பட்டியிலிட்டால்கூட அது நூற்றுக்கணக்கில் நீளும். இவர்களுள் மிக முக்கியமான பங்களிப்புக்களைச் செய்தவர்கள் எனக் குறிப்பிடத்தக்கவர்கள், என்னுடைய மனதுக்கு நெருக்கமானவர்கள் சிலர் இருக்கின்றனர். யாரையாவது கூறாமல் விட்டுவிடுவதால் ஏற்படக்கூடிய மன உழைச்சலைத் தவிர்ப்பதற்காகப் பெயர்களைக் குறிப்பிடுவதைத் தவிர்க்க எண்ணுகிறேன். தமிழ் விக்கிப்பீடியர்களின் பல்வகைமைத் தன்மை முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. 10 வயதில் தொடங்கியவர்களும், 80 வயதுக்கு மேலும் பங்களிப்புச் செய்தவர்களும் உள்ளனர். இடையில் பெருமளவு துடிப்பான இளைஞர்களும், நடு வயதினரும் உள்ளனர். பல பெண்களும் முனைப்பான பங்களிப்பாளர்களாக உள்ளனர். பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை பல்வேறு கல்வித் தகைமைகளைக் கொண்டோர் ஒன்றிணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை வளர்ப்பதில் ஈடுபடுகின்றனர். இவர்களைத் தவிர சில அரச உயரதிகாரிகள் உட்படப் பல நலம் விரும்பிகளும் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு உதவுகின்றனர். இது, தமிழ் விக்கிப்பீடியா நீண்டகாலம் துடிப்புடன் இயங்குவதற்கான வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.
7. எங்கள் கல்லூரியின் மாணவர்களுக்காக சில வார்த்தைகள்..
பல்வேறு அறிவுத்துறைகளையும் கையாள்வதற்கு ஏற்ற மொழியாகத் தமிழை வளர்த்தெடுப்பதில் தமிழ் விக்கிப்பீடியா சிறப்பாகப் பயன்படக்கூடியது. பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆழமான கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதன் மூலம் அத்துறைகளில் தமிழ் மேம்பாடடைவதற்கு வழியேற்படும். வேறெவரையும் விட மாணவர்களுக்கு, குறிப்பாகப் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்து ஒரு விடயத்தைக் கையில் எடுத்து வெற்றி பெறவைக்கும் வாய்ப்பு உண்டு என்பதால், இதில் பல்கலைக் கழகங்களையும், கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. நவீன அறிவுத் துறைகளில் வளர்ச்சியடைந்த மொழிகளுக்கு இணையாகத் தமிழையும் வளர்த்தெடுக்கும் முயற்சியில் மாணவர்கள் முன்னணியில் நின்று செய்து காட்ட வேண்டும் .
Thumbnail used from https://commons.wikimedia.org/wiki/File%3ANohat-logo-X-ta_new.png