மாதவம் (மாணவர் தமிழ் வளர் மன்றம்) நடத்திக் கொண்டிருக்கும் பல நிகழ்வுகளில் ஒன்று, ‘அரசியல் பேசுவோம்’. தமிழகமறிந்த அறிஞர்களை மாணவர்களோடு கலந்துரையாட செய்வது தான் இந்த நிகழ்வின் நோக்கம். முன்னதாகத் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் பங்கேற்ற இதே நிகழ்ச்சியில் தற்பொழுது ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரைகளுக்குச் சொந்தக்காரரான, திரு. சமஸ் அவர்கள் பங்கேற்றார். இவர் போன்ற பிரசித்திபெற்ற, முன்னனி நாளிதழின் நடுப்பக்க எழுத்தாளர், சற்று ஆடம்பரமாகத் தான் இருப்பார் என அனைவரும் நினைத்திருக்க, மிகவும் எளிமையான மனிதராக இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
‘பத்திரிக்கையாளனாக நான்’ என்ற தலைப்பில் “மாணவர்களிடம் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் உள்ளேன்” என அவர் கூறிய மறு நிமிடமே நம் மாணவர்கள் பல கேள்விகளைத் தொடுக்க, சமஸ் அவர்களும், அனைத்து வினாக்களுக்கும், விலாவாரியாகப் பதில் அளித்தார். அவருடைய பெரும்பாலான பதில்களில் மகாத்மா காந்தியைக் குறிப்பிட காரணம் கேட்டதற்கு, மகாத்மா அவர்களின் மீது கொண்ட அதீத பற்று என்றவர், “காந்தியை முழுமையாக தெரியாமல் நிறையபேர் சாடிக்கொண்டிருக்கின்றனர்”, எனஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பின்னர், ஆயுதப்படை சட்டங்களின் அடிப்படைகளைத் தெளிவாக விவரித்தார்.
“ஒரு மனிதன் எப்போது முழுமை பெறுகிறான்?” என்ற கேள்விக்கு, “சாகும் வரை மனிதன் வளர்ச்சியடைந்து கொண்டு தான் இருக்கிறான். முழு மனிதன் என்று ஒருவன் இல்லை”, என்ற அவரது பதில் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. “ஊடகங்கள் வெளிப்படையாக இருப்பதில்லை எனக் கூறுவது அறியாமை. எந்த ஓர் ஊடகமும் அரசாங்கத்தைப் பகைத்துக்கொள்வது என்பது இயலாது. அத்தகைய சூழலில், தற்போதைய வெளிப்படைத்தன்மை என்பதே யூகித்துப் பார்க்க முடியாத ஒன்று.” என்று ஊடக வெளிப்படைத் தன்மை பற்றி வெளிப்படையாக விடையளித்தார். “தங்கள் பொறுப்புக்களை, அவர்களிடம் இருக்கும் அதிகாரம் எனத் தவறாக புரிந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளுமே பல சமூகக் குழப்பங்களுக்குக் காரணம்”, எனக் கூறினார். இட ஒதுக்கீ்டு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் சிறிது நேரம் விவரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இறுதியாக,” நாம் நம்மை வரலாற்றோடு பொறுத்திப் பார்க்க வேண்டும். சுய மரியாதை என்ற ஒன்றை எப்பொழுதும் இழக்கக் கூடாது”, எனக் கூறி முடிக்கக் கரகோஷங்கள் வலுத்தது. அவருக்கு நினைவுப் பரிசாக, மரக் கன்று வழங்கிய தமிழ் வளர் மன்றத்தின் சிந்தனை பாராட்டிற்குரியது.