காலையில் கல்லூரிக்கு செல்ல பேருந்து ஏறியபோது, நடத்துனர் பயணச்சீட்டு விலை 15 ரூபாய் என்று கூறினார். என்னிடம் இருந்த இருபது ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். நடத்துனரோ "5 Rupees change இருக்கா மா?" என்று கேட்க, சட்டென்று உரைத்தது எனக்கு. அதை "ஐந்து ரூபாய்" என்று கூறலாமே "five rupees" என்று ஏன் கூறினார் என்ற கேள்வி எழுந்தது.
அவர் மட்டுமல்ல நாம் எல்லோருமே ஏதோ பல இடங்களில் தமிழை மறந்து கொண்டிருக்கிறோம். நம்மில் பலரால் பயிற்சி எடுக்காமல் ஐந்து நிமிடங்கள் கூட தமிழில் தொடர்ந்து பேசமுடியவில்லை. குழந்தை இருக்கும் வீட்டில் தாலாட்டு பாடல்களை கேட்கமுடியவில்லை. ஆறு மாதங்கள் கூட ஆகாத குழந்தைக்கு ஆங்கில மொழி 'rhymes' பாடல்களைத் திணிக்கிறார்கள். குழந்தை பேச தொடங்கும் போது "அத்தை" என்ற சொல்லை நம் பாட்டன் காலத்தில் முதற்சொல்லாக கற்றுக்கொடுத்தனர். அந்நியர்களையும் அத்தையாக எண்ணி அழைக்க வேண்டும் என்பதே அச்செயலின் நோக்கமாக இருந்தது. ஆனால் இன்றோ அத்தை 'aunty' ஆகிவிட்டது. அம்மா, அப்பா 'mummy' ' daddy' ஆகிவிட்டன.
குழந்தை பருவம் முடிந்து பள்ளிக்குச் செல்லும் போது, பல ஆங்கில வழி பள்ளிகளில், "தமிழ் பேசக் கூடாது" என்பதே முதல் விதியாக இருக்கும். பிறந்த நாள் வாழ்த்து கூட ஆங்கிலத்தில் தான் பாடப்படும். இவை அனைத்தையும் கடந்து ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, சுற்றியிருக்கும் உறவினரும் நண்பர்களும் பெற்றோரையும் மாணவனையும் "தமிழ் எடுக்காதடா! கஷ்டம்! பிரஞ்சு இல்லன்னா சமஸ்கிருதம் எடுத்துக்க" என்று குழப்புவார்கள். மாணவனும் "இவர்களுக்கெல்லாம் ரொம்ப நல்ல மனசு!நம்ம முன்னேற்றத்துக்குத் தான் சொல்றாங்க" என்று எண்ணி, மற்ற மொழிகள் எடுத்து, புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் 190 க்கு மேல் மதிப்பெண் பெற்று விடுவான். தமிழ் எடுத்து 185 எடுத்த மாணவனைப் பார்த்து ஒரு கேலி சிரிப்பும் சிரிப்பான்.
அடுத்து கல்லூரியில் நுழைந்த பிறகு, ஏதோ ஒருநாள் அம்மா இதழை எடுத்து 10 வது பக்கத்தைப் படி என்று கூறுவாள். அப்போது, அவன் இரண்டு வருடம் தமிழ் பயிற்சி இல்லாததால் ஒவ்வொரு எழுத்தாய்க் கூட்டி படிப்பதற்குள் விடிந்துவிடும். அப்போது அவன் சிரித்த சிரிப்பு அவனை நோக்கி சிரிக்கும். இவையெல்லாம் நினைத்து தமிழை மீண்டும் கற்று, அதன் அருமை புரிந்து தமிழில் சரியாக பேச தொடங்குவான்.
ஒருநாள் உணவகத்திற்கு சென்று தமிழில் பேசுவான். அங்கு இருப்பவர்கள் இவனை ஒருமாதிரி பார்ப்பார்கள். இவனது நண்பன் வந்தவுடன் "Hi! Good morning!" என்று கூறுவான். அதற்கு மாறாக இவன் வணக்கம் என்று சொல்ல அவன் நண்பன் பார்க்கும் தோரணையில் இவன் முயற்சிகள் அனைத்தையும் கைவிடுவான்.
இதுதான் இன்றைய காலத்தில் நடக்கிறது. பரதநாட்டியத்தை வெறுப்புடன் பார்ப்பவர்கள், western dance ஐ ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். Shape of you கேட்பவனுக்கு ஒரு பாரதியார் பாட்டும் தெரியவில்லை என்று கூறுகிறான். மற்ற கலைகளையும் மொழிகளையும் மதிக்காதீர்கள் என்று கூறவில்லை. நம் கலையை மொழியை மிதிக்காதீர்கள் என்று கூறுகிறேன்.
தமிழன் என்று அவ்வப்போது மார்பு தட்டிக் கொள்ளும் நாம், நம் அடையாளத்திற்குக் காரணம் நாம் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதனாலே என்பதை ஏன் உணரவில்லை? ஒரு பகுதியினர் தமிழ் படிக்க தெரியவில்லை என்று கூறுவதும், ஒரு பகுதியினர் படித்தாலும் புரியவில்லை என்று கூறுவதும் நமக்கு இழிவே!உணர்வோம்!செயல்படுவோம்!