அன்புள்ள மானுடப்பெருமானே,
ஊர் மக்கள் ஒதுக்கியவற்றுள் நானும் ஒருவன்.
ஒதுக்கப்பட்டவனாயினும் இரு காரியங்களுக்குப் பெரும் வெகுமதிப்பினைப் பெற்றிருந்தேன்.
ஒன்று, பிறந்த பெண்குழந்தைகளுக்குத் தாய் பாலிற்கு முன்பாக என் பாலையே கொடுத்தனர்.
பிறிதொன்று , ஊர்க்கழிவுகளை ஏற்றுக் கொள்வது.
முதலாவது பாவச் செயலாக இருப்பினும்,
இரண்டாவதில் பரிகாரம் தேடிக் கொண்டு வாழ்ந்திருந்தேன்.
அன்றும் அப்படித் தான்.
குப்பைக் கொண்டு வந்தனர். பரிகாரம் தேடிக் கொள்வோம் என எத்தனித்திருந்தேன்.
அதிசயம்! கொண்டு வந்த பொருள் குப்பை அல்ல.
கொண்டு வந்தவர் தாம் குப்பை.
நால்வர். ஒருவன் நல்ல உயரம். மற்றவர் குட்டை, மாநிறம்.
பொருளை நோக்கினேன்.
ஆஹா! அது பொருளே அல்ல.
பிரம்மனின் படைப்பில் விளைந்த முத்து அவள்.
மயிலிறகின் மென்மையைத் தோற்கடித்திடும் மேனி அவளுடையது.
கோவைப் பழமே கடுஞ்சினம் கொண்டதுபோன்ற செவ்விதழ் அவளுடையது.
காதலனானேன் அந்நொடியிலே....
பம்பரமும் கோலியும் கூட்டான்சோறும் வைத்துச் சிலாகிக்கும் இவ்வயதில்,
இப்பாதக இடத்திலே கிடத்தப்பட்டிருக்கும் காரணம் என்னவோ?
கேள்வி வினவியது கேட்டது போலும்.
பதிலளிக்க நெருங்கினான் முதலாமவன்.
அவளைச் சீண்டினான், தீண்டினான் காட்டுச் சர்ப்பம் போல.
அடக்கித் தொலைய வேண்டிய வெறியில் அடங்கித் தான் போயிருந்தான் அக்கொடூரன்.
அடி கலங்கிப் போனேன் நான்.
அவ்வெறியனின் செயலில் என் முள்காம்பின் விளிம்பும் இளகிப் போயிருந்ததை அறிந்தேன்.
அடுத்து இரண்டாமவன்...முறை இருக்கும் போலும்.அதே செயல்....
அதே கொடூரம்.....அதே முனுகல்..
அவளின் மெல்லிய விம்மலில் அம்மயிலாளின் குரலை அறிந்து ஒருநொடிக் காதலனாக வெம்பினேன்...
அசைவற்று நிற்க தான் முடிந்ததே அன்றி, வெறுமையாய் நின்றேன்.
வெறி தீர்த்து என்னருகே அவளைக் கிடத்தின போது,
அவர்களின் காமக்கனல் தீண்டி நானே ஆட்டம்கண்டேன்.
மானுடப் பெருமானே! உம் சட்டத்தால் அவர்களைத் தண்டித்து விடு.
இல்லை, கொன்றாவது விடு.
அது முடியாவிடில், என் மேனியின் மீது கட்டிவிடு,
அழுந்த கட்டிவிடு.
என் முள்ளின் கூர்மையைக் கொண்டு கிழித்து எடுத்து விடுகிறேன் அவர்களின் குடல்களை..
பீறிட்டு எழும் குருதியினைப் பூசிக் கொண்டு "வாழிய பெண்ணினமே"
என்று கூக்குரலிட்டு என் வெறியைத் தீர்த்துக் கொள்கிறேன்.
செய்வீரா???
தங்களின் பதிலை எதிர்பார்த்து,
ஒரு நொடிக் காதலனாகிய
கள்ளிச்செடி.