Loading...

Articles.

Enjoy your read!

டேஸ்டி டீயே

முதலாமாண்டு செம்பருத்தி விடுதியில், தினமும் இரவு பதினோரு மணிக்கு ஒரு குரல் ஒலிக்கும். இருக்கும் சில்லறையெல்லாம் பொறுக்கிக் கொண்டு வாசலில் காத்திருப்போம். அந்த குரல் தான், “டேஸ்டி டீயே!”

விடுதியின் நாலா பக்கமும் ஒருவர் சுற்றிச் சுற்றி வந்து கூவிக்கொண்டே இருப்பார். எங்கள் இரவுபசியை போக்க வந்திருக்கும் குரலது. அந்த நேரத்தில் போட்டியே இல்லாததால் அவருக்கு வியாபாரமும், எங்களுக்கு அந்த நேரத்தில் வெளியே செல்லமுடியாததால் கிடைக்கும் டீயும்; இருவருக்கும் Win-Win Situation அது.

ஆரம்பத்தில் அவர் என்னவென்று கூவுகிறார் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி யூகம் செய்தனர். சிலர், “டீ சர் டீயே” என்றார்கள். வேறு சிலர், “கேஸ்கே டீயே” என்றார்கள். அந்த சிதம்பர ரகசியத்தை கண்டுபிடிக்கக் கிட்டத்தட்ட எங்களுக்கு ஒரு வருடமாகியது.

அவர் என்ன கூச்சலிட்டால் என்ன? அவர் கொண்டு வரும் பொருட்கள் தான் முக்கியமானவை. ஒரு டீ ஒரு பிஸ்கேட், நச்சென்று பத்து ரூபாயில் வயிறு நிறையும். பணவசதி அதிகமாய் இருந்தால் சிலர் ஏழு ரூபாய்க்கு கேக் வாங்கி சாப்பிடுவார்கள். கார விரும்பிகளுக்கு, லேஸ் பாக்கேட்டைவிட குறைவாய் இருக்கும் மிக்சர் மற்றும் கடலை இருக்கும்.

இதையெல்லாம் அனுமதிக்கும் அந்த காவலருக்கு ஒரு டீ இலவசம். இங்கு டீ கூட லஞ்சமாகத் தரலாம் போல! அவ்வப்பொழுது ஆர்.சியும் வாங்கிகுடிப்பார். அஸ்ஸெஸ்மண்ட், செமஸ்டர் நேரங்களில் டீ வியாபாரம் உச்சம் தொடும். அதிலிருந்து தேவை மற்றும் அளிப்பு (Supply and Demand) கொள்கைகளைக்கூடக் கற்றுக்கொள்ளலாம்.

இந்த டீயை வைத்து பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

சம்பவம் 1:

எனக்குத் தெரிந்த பையன் (Acquaintance) ஒருவன் என்னோடு தினமும் டீ குடிக்க வருவான். ’சரி நம்ம பையனாச்சே’ என்று தினமும் நான் தான் காசு போடுவேன். இதே போல அவன் எல்லா இடங்களில் செய்துகொண்டிருந்தான். வெளியே எங்கு சென்றாலும் நாங்கள் அவனுக்கு செலவு செய்ய வேண்டியதாய் இருந்தது. இதை நண்பர்கள் நாங்கலெல்லாம் கவனிக்க ஆரம்பித்தோம். ”சரி, அவன் என்ன ஏழ்மையான குடும்பமா?” என்றால் அதுவும் இல்லை. வடிகட்டுன கஞ்சனாக இருந்தான்.

ஒரு நாள் பதினோரு மணிக்கு, “டேஸ்டி டீயே” என்ற குரல் ஒலிக்க, அவன் டான்னு என் அறைக்கு வந்தான். “வாடா டீ சாப்ட போலாம்” என்றான். நான் இதான் சந்தர்ப்பமென, “நா வரலடா, நீ வேணா போ” என்றேன். அதற்கு அவன் தலையைச் சொரிந்து, “நீ வர்லயா? சரி பர்ஸ் எங்க இருக்குனாவது சொல்லு. நான் எடுத்துக்குறேன்” என்றான்!

சம்பவம் 2:

இது என் நண்பனுக்கு நிகழ்ந்தது. இவன் பக்கத்து அறை பையன் ஒருவன் ஒரு டீ ரெண்டு கேக் வாங்கியிருந்தான். இவனைக் கண்டதும் அவன், “எடுத்துக்கோடா!” என்றான். சரி கொடுக்கிறானே என்று இவனும் மேலிருந்த கேக்கை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான். அதற்கு அவன், “ஏன் டா மேல இருக்க கேக்க எடுத்த? கீழ இருக்க கேக் தான சின்னதா இருக்கு. எனக்கு வேற பசிக்குது” என்றான்.

 

சம்பவம் 3:

முதல் வருடத்தில், டிசம்பர் 31அன்று யாரும் வெளியே செல்லக்கூடாது என்ற அறிவிப்பு வந்தது, வார்டனும் டீனும் அன்றிரவு ரவுண்ட்ஸில் இருந்தார்கள். அந்நேரத்தில் சரியாய் டேஸ்டி டீ அண்ணன் வர, இருவரும் சேர்ந்து அவரை விசாரித்து, வண்டி சாவியை பிடுங்கி எங்கள் விடுதி முன் வண்டியை நிப்பாட்டி வைத்தார்கள்.

இதை என் நண்பனிடம் போய் சொன்னேன். “டேய் அவர டீனும் வார்டனும் புடிச்சுட்டாங்க டா!”

“என்னாச்சு டா”

“ஆமா டா, வண்டி சாவிய பிடுங்கி வெச்சுக்கிட்டாங்க. வண்டி கீழ தான் நிக்குது.”

அதற்கு அவன்,

“ஓ… அந்த டீக்கு என்னடா ஆச்சு?”

Tagged in : செம்பருத்தி, தேநீர், விடுதி,

   

Similar Articles.