Loading...

Articles.

Enjoy your read!

தாயம்

          அக்னி நட்சத்திரம் வெயில் சுட்டெரித்த மாதம் அது.  நான் எப்போதும் பள்ளி விடுமுறையில் என் பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம்.   இந்த முறை என் உறவினர்களும் (பெரியம்மா பிள்ளைகள்,  சித்தி பிள்ளைகள்)  என்னுடன் வந்திருந்தார்கள்.  கலகலவென கல்யாண வீடு போல இருந்தது.   காலையும் மாலையும் பொழுதுபோக்குக்குப் பஞ்சம் இல்லை என்று நினைத்திருந்தேன்.   ஆனால்,  கோடை வெயிலில் வெளியே கூடச் செல்ல முடியவில்லை.  அதுவும் 90-களில் பிறந்த எங்களுக்குக் கிராமத்தில் நெல் அடிக்கும் களம் முதல் வேப்பமர நிழல் வரை அனைத்தும்  விளையாட்டுத் திடல்கள் தான்.

          மதிய வெயிலில் எங்களை எப்படி வீட்டில் உட்கார வைப்பது என்பது என் பாட்டி தாத்தாவிற்கு  எப்போதுமே பெரிய சவால் தான்!  அதற்கு என் பாட்டி கண்டு பிடித்த தீர்வு தான்,  சேலையில் தொட்டில் கட்டி அதில் ஆடவிடுவது.  நாங்கள் ஐந்து பேர் ஆளுக்குப் பத்து முறை என சண்டை போட்டுக்கொண்டு அதில் ஆடுவோம்.   குட்டி குட்டி சண்டைகள்;  சண்டையினால்  சேலை கிழிந்து கீழே விழுவது என ஒரே விளையாட்டாக இருக்கும்.   அப்படி ஒருமுறை விளையாடிக் கொண்டிருந்த போது  "பேருந்தில் வந்து ஏறுபவர்களெல்லாம் ஏறுங்கள்"  என்று என் பெரியம்மா மகள் கூற, நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்து, சேலை கிழிந்து  அனைவரும் கீழே விழுந்தோம்.   அதை என் தாத்தா பார்த்துவிட்டார்.   எனக்கு தாத்தா என்றாலே ஒரு சிறு பயம் மனதில் எப்போதும் இருக்கும்.  அதிகம் சேட்டை செய்தால் கோபம் வந்துவிடும் அவருக்கு!  பல முறை அடி வாங்கியதுண்டு!

          இனிமேல் உங்களுக்கு ஊஞ்சலே கிடையாது என்று சேலையை அவிழ்த்து வைத்துவிட்டார்,  தாத்தா.  எங்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கும் போனது.  சிறிது நேரம் கழித்த உடனேவே,  நான்  கீழே விழுந்ததைக் கூட மறந்துவிட்டு அடுத்து என்ன விளையாடலாம் என யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். 

          அந்த நேரம் பார்த்து,  பாட்டியின் பழைய தாயக்கட்டை  என் கையில் சிக்கியது. உடனே சாக் பீஸை எடுத்து தரையில் கோடு கிழித்தேன்.   பாட்டிக்கு தெரியாமல் சமையல் அறைக்குச் சென்று  புளியங்கொட்டைகளை எடுத்துவந்தாள், என் தங்கை.  பாட்டி "என்ன உள்ளே அங்க சத்தம்?"  என்றார்.  "ஒன்னும் இல்ல, பாட்டி"  என்று சொல்லிவிட்டு ஆட்டத்தைத் தொடங்கினோம்.   முதலில் யாருக்கும் தாயமே விழவில்லை.   சற்றுநேரம் கழித்து, ஆட்டம் விறுவிறுப்பாய் ஆனது.  என் தங்கையின் இரண்டு  காய்களை நான்  வெட்டிவிட்டேன்.  அந்த கோபத்தில் விளையாடிய அவள் திடீரென காய்களைக் கலைத்து விட்டு,  "எனக்கு இது பிடிக்கவில்லை"  என்று சொல்லிவிட்டு எழுந்து ஒடிச் சென்றுவிட்டாள். நாங்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்த அந்த நாட்கள் இன்னும் என் கண்களில் நிற்கிறது.   அரைமணி நேரம் கழித்து வந்து,  "திரும்பவும் விளையாடலாமா ?  இந்த முறை நான்தான் ஜெயிப்பேன்"  என்று கூறிய அவள் பாவமான குழந்தைமுகம் எனக்கு நினைவில் வருகிறது.   இப்போது ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊர்களில் இருக்கிறோம். நினைத்தாலும் பார்க்க முடிவதில்லை.  எப்போவாவது வாட்சப் வீடியோ கால்களில் சந்தித்துக் கொள்வதோடு சரி!  அப்படியே பாட்டி வீட்டில் சந்தித்தாலும்  போன் உலகில் எல்லோரும் மூழ்கியிருப்பார்கள்.   என்ன தான் பப்ஜி (PUBG) யும்  கேன்டி கிரஷ் (Candy crush)-ம் வந்தாலும்  அந்த காலத்து விளையாட்டுகள் போல வராது,அல்லவா?  எல்லாம் மாறிவிட்டது!  இருந்தும்   அதேபோல் ஒருநாள்  அனைவரும் பாட்டி வீட்டில் ஒன்றுகூட மாட்டோமா என்று இன்றும் மனம் ஏங்குகிறது!

Tagged in : games, nostalgia,

   

Similar Articles.