எல்லோரும் ஒரே உலகில் இருந்தாலும், எல்லோரும் வெவ்வேறு உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் தேவைகளை தேடித் தேடி பூர்த்தி செய்கிறோம்.
சில மாதங்களுக்கு முன், ஒரு புத்தக நிலையத்தில் நடைபெற்ற காடுகள் பற்றிய படங்களின் திரையிடல் விழாவிற்கு நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றிருந்தார். அன்று, ‘Honeyline of Kurumba’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. நீலகிரி மலைத்தொடரில் வசிக்கும் குரும்பர் என்றழைக்கப்படும் பழங்குடியின மக்களைப் பற்றிய படம். அந்த மக்களின் வாழ்வியலை மிக அழகாக ஆவணப்படுத்தியிருந்தார், அந்த இயக்குநர். அவரவர் வேலைகளை அவர்களே செய்து கொண்டும்; வேட்டையாடுதல், தேனெடுத்தல் போன்ற வேலைகளைச் செய்து கொண்டும் இருக்கின்றனர். இயற்கை மீது அலாதி பிரியத்தோடு இருக்கின்றனர். அவர்களின் முன்னோர்கள் விட்டுச்சென்ற சம்பிரதாயங்களையும் கலைகளையும் இன்றும் பின்பற்றிவருகின்றனர். அவற்றுள் முக்கியமான ஒன்று, ஓவியக்கலை. முக்கோணம், வட்டம் போன்ற எளிய வடிவங்களைக் கொண்டு இவர்கள் செய்யும் ஓவியங்கள் புதுமையாகவும், மிக நேர்த்தியாகவும் இருந்தன.
இவர்களுக்கு நிறைய பிரச்சனைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. காட்டில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவது தான் இந்த விழாவின் நோக்கம் என்றார்கள். ஏறக்குறைய அனைத்து திணைகளும் பணமும், பணம் சார்ந்த நிலமுமாக மாறிக்கொண்டிருக்கையில், குறிஞ்சித் திணை மட்டுமாவது அழியாமல் இருப்பதற்கு மற்றவர்கள் போராடுவதை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருந்தது.
படம் முடிந்த பின் நடந்த கலந்துரையாடலில் இயக்குநர் திருமதி. கீதா அவர்கள் பேசும்போது, “நுட்பமாக வரையப்படும் அவர்களின் ஓவியங்களை ஐம்பதாயிரத்திலிருந்து எழுபதாயிரம் வரை விலை கொடுத்து வாங்க ஆட்கள் தயாராக உள்ளனர். இருப்பினும், ‘எங்களுக்குத் தோன்றும்போதுதான் வரைவோம். பணம் எங்களுக்கு ஒரு பொருட்டில்லை’ எனக் கூறிவிட்டு புன்னகையோடு செல்வதைக் கண்டபோது ஆச்சர்யமாக இருந்தது. வாழ்க்கையை இனிமையாக வாழ்ந்து வருகின்றனர். பொறுமையுடனும், நேர்த்தியுடனும் எல்லா வேலைகளையும் செய்கின்றனர்” எனக் குறிப்பிட்டார்.
இதனைக் கேட்டபோது இன்னும் இதுபோன்றதொரு வாழ்க்கைமுறை அழியாமல் இருப்பதை நினைத்து சந்தோஷமும், சற்று பொறாமையும் வந்தது. தற்போதைய நிலையில், நமக்கும் இயற்கைக்குமான தொடர்பு எவ்வளவு பலவீனமாகிவிட்டது, என்று தோன்றியது. வாழ்க்கைமுறையில் மட்டுமல்ல உணவுப்பழக்கத்திலும் நிறைய மாற்றங்கள்.
துரித உணவு கலாச்சாரம் பெருகிவருகிறது. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் ‘நேரமின்மை’ என்றதொரு காரணத்தினாலும், குறைவான பணத்திற்குக் கிடைப்பதாலும், எங்கு பார்த்தாலும் உணவகங்கள் இருக்கின்ற காரணத்தினாலும், (முன்பெல்லாம், சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் தான் இந்த நிலை. ஆனால், இப்போது தென்மாவட்டங்களிலும் எங்கு பார்த்தாலும் உணவகங்கள்!), குழந்தைகளை சுவையை மட்டும் பிரதானப்படுத்தியதொரு உணவுப் பழக்கத்திற்கு பழக்கியதாலும் இந்த நிலை வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களை முதல் தரத்தில் அனுப்பிடும் நாம், நம் நாட்டு மக்கள் சாப்பிடும் பொருள்களின் தரத்தைப் பற்றி கவலை கொள்வதே இல்லை.
பரிணாம வளர்ச்சியில், வெளித்தோற்றங்களுக்கு மதிப்பளிக்கத் தொடங்கியது எவ்வளவு பெரிய தவறோ, அதேபோன்றதொரு தவறு தான், சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததும். விலை, நேரம் மற்றும் சுவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு துரித உணவுகள் சாப்பிட ஆரம்பித்தற்கு அதுவும் ஒரு காரணம். இந்த நிலைதான், வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதறக்காக நிறமூட்டிகளையும், சுவையூட்டிகளையும் உணவுகளில் சேர்க்க ஆரம்பித்ததன் ஆரம்பம். சிறுவயதிலேயே புற்றுநோய், நீரிழிவு போன்ற நோய்கள் வர காரணமாக இவையெல்லாம் இருக்கின்றன.
ஏதோ ஒன்றை நியாயப்படுத்த எதற்கு ஓடுகின்றோம் என்றுகூடத் தெரியாமல் பணத்தின் பின்னால் நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். இன்னும் ஐந்தே வருடங்களில் நிச்சயம் ஏதாவது சாதித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு உழன்று கொண்டிருக்கிறோம். ‘சாதிக்க வேண்டுமா?’ ‘வெற்றி உன்வசம்’ போன்ற தலைப்புகளில் ஒரே கருத்துகளைக் கூறும் புத்தகங்கள் விற்க காரணாமகவும் இருந்து வருகிறோம்.
பொருளாதார ரீதியான உயர்வுகளை மட்டுமே உயர்வெனக் கருதிக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பதைக் காண்கையில் ஆதங்கம் தான் வருகிறது. குறுகிய காலத்தில் பலன் தருபவற்றை மட்டுமே போற்றிக் கொண்டிருக்கிறோம். இதன் விளைவால் ஆரோக்கியம், உடற்பயிற்சி, உணவின் முக்கியத்துவம் போன்றவற்றைக் கண்டுகொள்ளாத வண்ணம் ஒரு தலைமுறையே உருவாக்கிவிட்டோம்.
இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, தொழிலாளர்களைப் பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு, அந்தத் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இருக்காது. அதுபோல, நாக்கை மட்டுமே கருத்தில் கொண்டு பிற உறுப்புகளைப் பற்றி கவலைப்படாமல் உண்ணும் போது, உடல் உங்களுக்கு ஒத்துழைக்காது.
சித்த வைத்தியர் திரு, கு. சிவராமன் அவர்கள் கூறுகையில், “உணவுப் பழக்கத்தில் மாற்றம் கொண்டுவராவிட்டால், அடுத்த தலைமுறையின் அழிவை கண்கூடாகப் பார்க்கும் தலைமுறை நம் தலைமுறையாகத் தான் இருக்கும்” எனக் கூறுகிறார்.
இப்போதிருக்கும் நிலையில், குரும்பர் இன மக்களைப் போல் வாழ்வது சாத்தியம் இல்லை என்றாலும் கூட; உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவும், சரியான முறையில் உடலையும் இயற்கையையும் பாதுக்காக்க நம்மால் முடியும். நம்மால் முடிந்தவரை நாமும், நம்மைச் சுற்றியிருப்பவர்கள் ஆரோக்கியமான உணவைத் தான் உண்கிறார்களா? என்பதை உறுதி செய்வது, நம் கடமை.
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?
…..
இனியொரு விதி செய்வோம் – அதை
எந்த நாளும் காப்போம்.
தனியொருவனுக்கு ‘நல்ல’உணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்…!