Loading...

Articles.

Enjoy your read!

பிரான்சு தமிழ் சங்கம் - நேர்காணல்

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பிரான்சில் வசிக்கிறார்கள். தமிழர்கள் ஆங்கே குடிபெயர்ந்த வரலாறு பதினேழாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது. ஆங்கே வசிக்கும் தமிழர்களுக்கு மொழியின் பெருமையையும் கலாச்சாரத்தையும் பயிற்றுவிக்க பிரான்சு தமிழ் சங்கம் சிறந்த செயல்பாட்டில் உள்ளது. விடுமுறையில் ஆங்கே ஆராய்ச்சி பணி செய்ய சென்ற நம் கிண்டி டைம்ஸ் அணி சுபாஷ், பிரான்சு தமிழ் சங்க நிர்வாகிகளுடன் நிகழ்த்திய உரையாடல் இதோ: 

  1. பிரான்சு தமிழ் சங்கத்தின் தோற்றம், செயல்கள் மற்றும் சங்கத்தால் நடத்தப்படும் விழாக்கள் குறித்து விளக்கவும்.

பிரான்சு தமிழ் சங்கம், 1970-ல் கலைஞர் கருணாநிதி அவர்கள், காதலின்  நகரான பாரிஸில் நடைபெற்ற மூன்றாவது உலகத் தமிழாய்வு மாநாட்டில் கலந்துகொள்ள வந்த பொழுது, அவரின் முன்னிலையில் துவங்கப்பட்டது.  அதனுடைய முதல் பெயர், ‘பாரிஸ் தமிழ் மாணவர் சங்கம்’ என்பதாகும்.   பின்னர், 1973-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் பாரிஸ் வந்திருந்த பொழுது, அவருக்காகவே ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.  அப்பொழுது, ‘தமிழோசை’ என்ற மாதப்பத்திரிக்கை ‘Roneo’ என்ற பிரதி இயந்திரத்தின் மூலமாக நகல் எடுக்கப்பட்டு சங்கத்தால் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  ஆதலால், அந்த சிறப்புக் கூட்டத்தின் பொழுது, எம்.ஜி.ஆர் அவர்களிடம் ஒரு தமிழ் தட்டச்சு இயந்திரம் அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.  அதே போல், இரண்டே மாதங்களில், அவரால் இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டது.  இது நடந்த சமயம் தான் அவர் தனிக்கட்சி துவங்கினார்.    இதன் பின்னர், படிப்படியாக ‘பாரிஸ் தமிழ் மாணவர் சங்கம்’ வளர்ந்து, ‘பிரான்சு தமிழ் சங்கம்’ ஆனது.

பிரான்சில் உள்ள அனைத்து இந்திய தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் பணியையும், அவர்களுக்குத் தேவையான அமைப்பு சார்ந்த எல்லா உதவிகளையும் பிரான்சு தமிழ் சங்கம் செய்து வருகிறது.  மேலும் பிரான்சு வருபவர்கள் கேட்கும் அதிகாரப்பூர்வ உதவிகளையும், இது போன்ற பல பணிகளையும் செய்து வருகின்றது.  பிரான்சில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகளை மையப்புள்ளியாக இருந்து ஒருங்கிணைக்கும் முதன்மையான அமைப்பு, பிரான்சு தமிழ் சங்கம் ஆகும்.

விழாக்களைப் பொறுத்த மட்டில், பாரதியார் நூற்றாண்டு விழா UNESCO- விலும், பாரதிதாசன் நூற்றாண்டு விழா, கம்யூனிஸ்டு தலைவர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் இது போன்ற பல தமிழ் சார்ந்த விழாக்களை பிரான்சு தமிழ் சங்கம் கொண்டாடியுள்ளது. 
 

  1. பொதுப்பட்ட மக்களின் பார்வையில், வெளிநாடு சென்று குடியேறும் தமிழர்களின் வாரிசுகள், தமிழையும், அவர்களின் கலாச்சாரத்தையும் துறந்து, அந்தந்த நாட்டுக் கலாச்சாரத்தோடு தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர் என்றும், இதனால் அந்தத் தலைமுறையோடு, தமிழ் கலாச்சாரத் தொடர்பு துண்டிக்கப்படுகின்றது என்றும் ஒரு கருத்து நிலவுகின்ற்துஇதைப் பற்றிய தங்கள் சிந்தனை

இந்தக் காலாச்சாரத் தொடர்பு தலைமுறை தலைமுறையாகத் தொடர வேண்டியது, பெற்றோரின் கைகளில் தான் உள்ளது.  வெளிநாட்டில் பிறக்கும் தமிழ் பெற்றோரின் வாரிசுகள், அங்குள்ள சமூகக் கட்டமைப்புக்கான விடயங்களைக் கற்றுக்கொள்வது வாழ்விற்கு அத்தியாவசியமானது.  இதில் அந்த நாட்டு மொழி, கலாச்சாரம் ஆகியன அடக்கம்.  இருப்பினும் பெற்றோர்கள் வீட்டில் தமிழ் பேசுவது, குழந்தைகளுக்கு அவர்களின் சிறிய வயதிலேயே தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைக் கற்றுத்தருவது, வெளிநாடுகளில் நடக்கும் தமிழ் பண்டிகைகளுக்குக் குடும்பத்துடன் சென்று பங்கேற்பது போன்ற செயல்களைச் செய்வதன் மூலம், அடுத்த தலைமுறையும் தமிழ் கலாச்சாரத்தோடு வளரும். 

சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, New Island முதலிய இடங்களுக்கு பல தமிழர்கள் வேலைக்காக சென்றார்கள்.  இந்த விடயங்களை செய்யாத்தால் தற்பொழுது அங்கு தமிழ் அழிந்து விட்டது.  கடந்த ஒரு 20 வருடங்களாக சில நல்ல உள்ளங்களின் முயற்சியால் அங்கு மீண்டும் தமிழ் கலாச்சாரம் சிறிது சிறிதாக தழைத்தோங்கத் துவங்கி விட்டது.  இது ஒரு வரலாற்றுப் பாடம்.  ‘ஊருடன் ஒத்து வாழ்’ என்றும், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்றும் உரைத்ததே நம்மவர்கள் தான்.  ஆக, இது வெளிநாடுகளுக்கு சென்று குடியேறும் தமிழர்களுக்கு உள்ள ஒரு முக்கியமான பொறுப்பாகும். 
 

  1. நாளுக்கு நாள் மேலும் மேலும் ஆங்கில மயமாக்கப்பட்டு வரும் இவ்வுலகில், தமிழ் போன்ற சாமானிய மொழிகள் அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறதா?

முதலில், தமிழ்நாட்டிலேயே தமிழ் மெல்ல அழிந்துகொண்டு வருகிறது என்பதே, கசப்பான உண்மை.  இதில், வெளியுலகைப் பற்றி சொல்லத் தேவையில்லை.  குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கும் வழக்கம் கடந்த ஒரு 25 வருடமாக இருந்து வருகிறது.  பொருளாதார அடிப்படையில் மட்டுமே, ஒரு நாடும் மொழியும் வளர்ச்சி பெறுவதால், ஆங்கிலம் ஒரு அத்தியாவசிய மொழி ஆகிவிட்டது. அதேபோல், சீன மொழியை மற்ற நாட்டவர்கள் கற்றுக்கொள்ளும் வழக்கமும் கடந்த சில ஆண்டுகளாக உள்ளது.  இதுவும் பொருளாதார அடிப்படையின் விளைவே. 

தாய்மொழி வழிக்கல்வியை ஐரோப்பியர்கள் போல் நடைமுறைப்படுத்துவதன் மூலம், தமிழ் ஒரு சாமானிய மொழி பிம்பத்திலிருந்து விடுபடும்.  இதுவும் ஒரு முரண்பாடான விஷயமே.  ஏனெனில், கல்லூரியில் யாரும் தாய்மொழியை ஒரு பாடமாகப் படிப்பதே கிடையாது.  இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும், தன்னுடைய மொழிக்கு முன்னுரிமை கொடுத்து, மொழிக்கொள்கை ஒன்றை உருவாக்கி இருந்தால், இந்த பிரச்சனையே வந்திருக்காது.  இந்திய அளவில் பார்க்கும் பொழுது, ஆங்கிலமே தகவல் பரிமாற்றத்துக்குப் போதுமானதாக உள்ளது.  இந்தி மொழி, இந்தியாவின் பல இடங்களில் பேசப்படுவது இல்லை என்பதை கவனிக்கவும்.  இந்தி பிரச்சர சபாவுக்குக் கொடுக்கப்படும் மானியத்தைப் போல், வேறு எந்த மொழிவளர் சங்கத்துக்கும் கொடுக்கப்படுவதில்லை.  அது, மத்திய அரசாங்கத்தின்  முடிவு.  

இருப்பினும், ஒவ்வொரு மாநில அரசாங்கமும், தத்தம் மொழிகளை பயிற்று மொழிகளாக, பள்ளி, கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த ஒரு முயற்சி எடுத்தல், மொழிகளை வளர்க்கும்.  ஆனால், இதை எந்த அரசாங்கமும் செய்வதில்லை. 

ஆங்கில ஆதிக்க வரலாற்றைக் கொண்ட நம் நாட்டில், மாநிலம் விட்டு மாநிலம் வந்து வேலை செய்யும் ஒருவருக்கும், வேற்று நாட்டிற்கு சென்று வேலை செய்யும் ஒருவருக்கும், ஆங்கிலம் ஒரு ஆபத்பாந்தவனாக இருக்கிறது என்பதே உண்மை.  தாய்மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்தியிருக்கும் பிரான்சு நாட்டிலேயே, ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் தான் எழுதுகின்றனர். 

ஆக, ஆங்கிலம் ஒரு அத்தியாவசியமாக மாற்றப்பட்டதில், நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. 

மேலும் தாய்மொழியில் வல்லவனாக இருக்கும் ஒருவனால், மற்ற மொழிகளை எளிதில் கற்க முடியும்.  ஒருவனுடைய ஆழ்மனம், அவன் முதன் முதலில் நாவை அசைத்த மொழியிலே தான் பழக்கப்பட்டிருக்கும்.  இதனால், மற்ற மொழிகளை, தன் தாய்மொழியோடு ஒப்பிட்டு எளிதில் கற்க முடியும்.  மேலும், மற்ற மொழிகளையும், தன் தாய்மொழியிலேயே மொழிமாற்றம் செய்து புரிந்துகொள்ளும், நம் ஆழ்மனம். இதை ஆங்கிலத்தில், MTI (Mother tongue influence) என்று கூறுவர். 

தமிழ் படிப்பது பிரெஞ்சு மொழி கற்க ஒரு தடை என்றெண்ணி, பாண்டிச்சேரியில் பிரெஞ்சு மட்டும் கற்ற தமிழர்களை விட, சிறு வயதில் தமிழ் நன்றாகக் கற்று, பிறகு அதன் மூலமாக பிரெஞ்சு கற்றவர்கள் பிரெஞ்சு மொழியில் அதிகப் புலமை பெற்றிக்கிறார்கள் என்பதே உண்மை.   

எனவே, ஆங்கிலம் தமிழின் எதிரியல்ல.  ஆங்கிலத்தோடு, தமிழையும் கற்றுக்கொள்ள வேண்டும்.  மேலும் தமிழைக் கற்றுக்கொள்ளும் சூழலை நம் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுத்தால், இது தானாக நடக்கும். 

 

  1. பிரான்சு தமிழ் சங்கத்தை மேலும் விரிவுபடுத்தத் தங்களின் எதிர்காலத் திட்டங்கள் யாவை?

1970 களில் இருந்து 1974 வரை தமிழ் சங்கத்தால் பாரிஸில் தமிழ் படங்கள் திரையிடப்பட்டன.  வெகு தொலைவில் இருந்து வந்து படம் பார்ப்பார்கள்.  ஆனால் இப்பொழுது அதற்கு வாய்ப்பில்லை.  மேலும், இங்கு தமிழ் நாவல்கள் அவ்வளவாக கிடைக்கப்பெறாததால், தமிழ் புத்தகங்கள் வாசிப்போரின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் குறைந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.  ஆதலால் பாரிஸில் ஒரு பெரிய தமிழ் நூலகம் அமைப்பதற்கான திட்டத்தைத் தற்பொழுது மெல்ல மெல்ல செயல்படுத்தி வருகிறோம்.  கிண்டி கல்லூரி மாணவர்கள் தங்களின் பழைய தமிழ் புத்தகங்களை பாரிஸ் தமிழ் நூலகத்துக்குக் கொடையளிக்க விரும்பினால், +919003791767 என்ற எண்ணுக்கு Whatsapp மூலம் தொடர்பு கொள்ளவும்.  மேலும், சென்னையிலும், பாண்டிச்சேரியிலும் பழைய தமிழ் புத்தகங்களை சேகரிக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.  மேலும், பிரான்சில் வளரும் அடுத்த தலைமுறை குழந்தைகள் தமிழ் கற்க, Tamil Virtual Academy உடன் கைகோர்த்து, தமிழில் சான்றிதழ் வகுப்புகள் நடத்த உள்ளோம். 

 

  1.  எங்களைப் போன்ற மாணவர்களுக்குத் தங்களின் அறிவுரை.

முதலில் வேற்று மொழி கற்றுக்கொள்வது மிக நல்லது.  ஆனால், தமிழ் தான் பெரிது, மற்ற மொழிகளெல்லாம் சிறிது என்ற எண்ணம் அறவே கூடாது.  பல தமிழர்களிடையே இந்த மனப்பாங்கு உள்ளது.  இது நம் முன்னேற்றத்துக்கு ஒரு முட்டுக்கட்டை.  பாரதியாரே, ‘யாம் அறிந்த மொழிகளிலே’, என்று தமிழை உயர்த்தி மட்டும் சொன்னாரே தவிர, மற்ற மொழிகளை அவர் தாழ்த்திப் பேசவில்லை.  பாரதி, பிரெஞ்சு, ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி எனப் பல வேற்று மொழிகளை அறிந்தவர். இலக்கண, இலக்கியத்தில் இவ்வளவு தொன்மை இருந்தும் நம் ஊரிலேயே தமிழ் அழிந்துகொண்டு வருகிறதே, ஏன்?  ஏனெனில் நம் மொழியினுடைய வளங்களை நாம் உலகறியச் செய்யவில்லை.  மாறாக, நம்முள்ளேயே அதன் பெருமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.  தாகூர் நோபல் பரிசு வாங்கக் காரணமான கீதாஞ்சலி இலக்கியம் ஒருவேளை ஆங்கிலத்தில் எழுதப்படாமல், அவருடைய தாய்மொழியில் எழுதப்பட்டிருந்தால் என்னவாயிருக்கும்?  பல ஆராய்ச்சியாளர்களுக்கே, தமிழின் தொன்மை பற்றித் தெரியவில்லை.  ஆக, தமிழின் தொன்மையை உலகறியச் செய்ய தங்களாலான சிறிய முயற்சிகளை மாணவர்கள் எடுக்க வேண்டும்.

 

தங்களின் கருத்துகளை நேரம் ஒதுக்கி வெளிபடுத்தியதற்கு பிரான்சு தமிழ சங்கத்திடம் கிண்டி டைம்ஸ் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

Tagged in : பாரிஸ், தமிழ் சங்கம், பிரான்சு,

   

Similar Articles.