Loading...

Articles.

Enjoy your read!

பாரதம் பண்பாடும் கலாச்சாரமும்

பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு என்பது வெறும் வார்த்தை அலங்காரங்கள் அல்ல. பழம் பெரும் பாரதத்தின் பார் போற்றும் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவைக்கு ஈடு வேறு எங்குமே காண முடியாத ஒன்று என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இந்தியாவில் உயர்ந்து நிற்பது இமயம் மட்டுமல்ல. நம்முடைய கலாச்சாரம் மற்றும் பண்பாடும் தான். ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி பண்பாடு மற்றும் கலாச்சாரம் இருப்பது இயற்கையே. ஆனால் இந்தியாவின் கலாச்சாரமும் பண்பாடும் அவைகளிலிருந்து வேறுபட்டே காணப்படுகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை

130 கோடி மக்கள் தொகை கொண்ட நமது இந்திய தீபகற்பம் ஒரு துணைக் கண்டம். பல மதத்தவர் வாழ்ந்தாலும் பல இனத்தவர் வாழ்ந்தாலும் வேற்றுமைகள் பல இருந்தாலும் அந்த வேற்றுமையிலும் ஒற்றுமையைக் கண்டு, ஒற்றுமை கொண்டு வாழ்வது தான் இந்தியர்களின் பண்பாடு. பல மாநிலங்கள், மாநிலங்களுக்கென்று தனி மொழிகள், பல இனங்கள் ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனி பண்பாடுகள் பழக்கவழக்கங்கள் என்று பல இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து நாம் இந்தியர்கள் என்ற உணர்வோடு எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள் என்ற ஒற்றுமையைக் கட்டிக் காப்பதில் இருக்கிறது நமது பண்பாடு.

மதத்தைக் கடந்த மனிதம்

இந்தியாவின் பிரதான மதமாக இந்து மதம் இருந்தாலும், புத்த மதம், சமண மதம், சீக்கிய மதம் போன்ற இந்தியாவில் தோன்றிய மதங்கள் வளர்ந்தாலும், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்த மதங்கள் சிறந்தாலும் எல்லா மதத்தினரின் உணர்வுகளுக்கும், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வாழ்த்துகள் பங்கு வைத்து அனைவரும் ஒன்றாக ஒன்று போல் வாழ்கின்ற இந்தப் பண்பாடு, மதத்தை விட மனிதத்திற்கு முக்கியத்துவம் அளித்து செயல்புரிகின்ற செயல்பாடு, அது இந்தியர்களை உயர்த்துகின்ற பண்பின் வெளிப்பாடு.

குடும்பம் என்ற கதம்பம்

இந்தியர்கள் போற்றிப் பாதுகாக்கின்ற குடும்ப வாழ்க்கை, பாரம்பரியம் மறக்காத பண்பாடு, உலக மக்கள் வியந்து பார்க்கும் ஓர் அதிசயம். கூட்டுக் குடும்பமாக வாழ்வது, பெரியவர்களை மதிப்பது, பாட்டி தாத்தா முதல் பேரக் குழந்தைகள் வரை ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்வது, எப்படியும் வாழலாம் என்று அல்லாது இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது என பிறருக்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்ற கூட்டுக் குடும்ப வாழ்க்கை அது இந்தியாவின் மிகச் சிறந்த பண்பாடுகளுள் ஒன்று.

விருந்தோம்பல் மற்றும் திருவிழாக்கள்

திருவிழாக்கள் பெருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்ற நாடு நம் நாடு. அது கோவில் திருவிழாக்களாக இருந்தாலும் சரி பண்டிகைகளாக இருந்தாலும் சரி. தொலைவில் வாழும் உறவுகளும் ஊருக்குள் ஒன்று கூடி உறவுகளோடும் நட்புகளோடும் அளவளாவி மகிழ்ந்து, விளையாடிக் களித்து, கதைபேசிச் சிரித்துக் கொண்டாடுகின்ற கலாச்சாரம் இன்னும் முழுதும் அழிந்து போகாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

நடை, உடை, உணவுகள்

இயற்கையோடு இயைந்த உணவுகளை உண்பதும், காலத்திற்கு ஒத்த உடைகளை அணிவதும், தனக்கென்று ஒரு தனித்தன்மையைக் காப்பதும் ஒவ்வொரு பகுதி மக்களும் தமது இயல்புக்குத் தகுந்தபடி இருந்தாலும் மற்றவர்களோடு ஒத்து வாழ்வதும், இதுவன்றோ நாகரீகம் என்று மேற்கத்தியர்கள் வியக்கும் வண்ணம் தங்கள் கலாச்சாரத்தைக் காத்துக் கொண்டிருந்ததும், காத்துக் கொண்டிருப்பதும், இனியும் காப்பார்கள் என்ற நம்பிக்கையும் தான் இந்தியாவை மற்ற நாடுகள் முன் வித்தியாசப் படுத்திக் காட்டுகிறது. பழமையை மறவாமலும், புதுமையைத் தவிர்க்காமலும் இரண்டையும் தராசின் இரு தட்டுகள் போல் இணைத்துக் கொண்டு செல்கிற பண்பு நமது கலாச்சாரம் தந்த படிப்பினையே.

கால மாற்றத்தால், அயல் நாட்டு மோகத்தால் பல மாறுதல்கள் வந்தாலும் பண்பாட்டில், கலாச்சாரத்தில் சில கீறல்கள் விழுந்தாலும் நாமெல்லாம் நாமே, நமதெல்லாம் நமதே என்ற கொள்கைப் பிடிப்போடும், கடமை உணர்வோடும், நேற்றுகள் எல்லாம் முடிந்தவை அல்ல, இன்றுகள் எல்லாம் முடிவதும் அல்ல நாளையோடு முடியப்போவதுமில்லை என்ற நம்பிக்கையோடு தொடர்வதே என்றும் நமது பெருமையை நிலை நிறுத்துவதாக அமையும்‌ என்ற உறுதியோடு வாழ்வோம், வளர்வோம் வாழவைத்து உயர்வோம்.

Tagged in : UNITY, culture, India,

   

Similar Articles.