Loading...

Articles.

Enjoy your read!

நம்பிக்கை சிறகுகள் பறக்கட்டுமே...!

 மனிதர் ஒவ்வொருவரும் அவரது வாழ்க்கையில், வெற்றி என்னும் சிகரத்தைத் தொடுவதற்கு பலக் காரணங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால், அவற்றுள் மிகவும் உன்னதமான மற்றும் விலைமதிப்பில்லாத முக்கியக் காரணம், நம்பிக்கை என்னும் கருவி மட்டுமே ஆகும். 
 

ஒரு முறை போர் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது மாவீரர் அலெக்ஸாண்டர் பக்கம் கூட்டம் குறைய ஆரம்பித்தது. தோல்வி  அவரை நோக்கி அழையா விருந்தாளியாக வந்து  கொண்டிருந்த நேரம். அவருடைய தளபதி , “மன்னா எதிரிப் படைகளிடம் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள்” என்றார். ஆனால், மாவீரர் அலெக்சாண்டரோ சிரித்துக் கொண்டே “என்னைச் சேர்க்காமல் தானே சொல்கிறாய் !” என்றார். எண்ணிக்கையில் என்னையும் சேர்த்துக்கொள், போருக்குத் தயாராகுங்கள் என்றார். 50,000 பேருக்கு நிகரான வீரம் அவரிடம் உள்ளது என்று அவரது தன்னம்பிக்கை தானே இதிலிருந்து  நமக்குப் புலப்படுகிறது. 


 “ஓர் செயலைச் செய்து முடிக்க முடியும் என்ற கர்வம் உன் மீது இருந்தால், தோல்வி கூட உன்னை நெருங்க பயப்படும்! “ என்ற இவ்வரிகளின் மூலம், நமக்குள்ளே இருக்கும் வெற்றி  உணர்வை  வெளியே வரவழைக்கிறது. மேலும் கவிஞர் பாரதியார் கவிதை ஒன்றில், “நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு, அவற்றின் முக்கிய லட்சணம் என்னவென்றால் விடாமுயற்சி, அது மட்டுமல்லாமல்  மனத்திற்குள் நிலைத்த நம்பிக்கை இருந்தால் செய்கை தடைப்படுமா? “ என்ற வெற்றி அடைவதற்கு இன்றியமையாத பண்பையும் பயனையும் எடுத்துரைக்கின்றார். பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களின் திறனைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்தால், அது அவர்களது மன வலிமையை வலுப்படுத்துவதோடு, நாட்டின் பல வளர்ச்சித் திட்டங்களுக்கான வெற்றியை ஈட்டித் தரும்.  நம்பிக்கையைப் பற்றிச் சொல்லும் போது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கியக் கருத்து என்னவென்றால், “எதை நம்புவது ? எப்போது நம்புவது ? யாரை நம்புவது?” என்று புரிதல் வேண்டும். இதனைத் திருவள்ளுவர் சொல்லும் அழகான கருத்து, 
“தேரான் தெளிவும் தெளிந்தபின் ஐயுறவும் 
  தீரா  இடும்பை  தரும்.”


ஒன்றைப்பற்றிச் சரியாக தெரிந்து கொள்ளாமல் அதைப் புரிந்து கொள்வதும், நன்கு தெரிந்த உண்மையான ஒன்றைச் சந்தேகப் படுதலும் தீராத துன்பத்தைத் தரும் என்பதே இக்குறளின் கருத்து. எல்லோரையும் நம்புவது ஆபத்து , யாரையும் நம்பாதது பேராபத்து. எனவே, நாம் எந்த ஒரு விஷயத்திலும் நன்றாக யோசித்து, பிறகே அவற்றில் உறுதி கொள்ள வேண்டும். பிறகு அந்த நம்பிக்கையில் உறுதியாக இருந்தால், வெற்றி என்னும் கனியை நாம் எளிதாக சுவைக்க இயலும். மேலும், பூமி உருண்டையாக நம் கண்ணில் தென்படுவது இல்லை. இருப்பினும் சான்றுகளால் அதை முழுவதும் நம்புகிறோம். பார்ப்பனவற்றை நாம் நம்புவது இல்லை, ஏற்கனவே நம்புவதைத்தான் நாம் பார்க்கிறோம். அதேபோல் தான், நம்பிக்கை என்பது ஒருவர் மீது அல்லது நம் மீது நாம் கொண்டிருக்கின்ற நல்ல அபிமானம். அது எப்போதும் நேர்மறையானதாகவே இருக்கட்டும்.  வெற்றிக்கு மிகச் சிறந்த வழி எது வென்று சொன்னால், முடியும் என்ற தீவிரமான முடிவு  மட்டுமே. “நம்பிக்கையின் மீது மட்டும் நம்பிக்கை இழக்காதீர்கள் நம்பினோர் கெடுவதில்லை” என்பது நான்மறை தீர்ப்பு. இப்போதெல்லாம், மாணவர்கள் எழுதுகின்ற தேர்வில் தேர்ச்சி அடையாவிட்டால் மனச் சோர்வு அடைகின்றனர். அதனால் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அப்போது, மனதைத் தளரவிடாமல் தைரியமாக இருந்தால், தோல்வி ஒருபோதும் நம்மை நெருங்காது.  இவ்வாறு, ஒவ்வொரு கடினமான சூழ்நிலையும் நம்பிக்கையோடு இருந்தால் வெற்றியை எளிதாக அடைய முடியும். 


“ வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தால்,
 கஷ்டங்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கும் 
நிகழ்காலத்தில் நம்பிக்கை இழந்தால், 
எதிர்காலம் நம்மைப் பார்த்துச் சிரிக்கும் .
எதிலும், நம்பிக்கையோடு இருந்தால் 
வாழ்வில் வெற்றியே சிறக்கும். “ 
 

Tagged in : life, Courage, Confidence, success,

   

Similar Articles.