Loading...

Articles.

Enjoy your read!

நம்பிக்கை, அதானே எல்லாம்..!

"மனிதர்கள்  பல  வண்ணங்களிலும்  வடிவங்களிலும்  படைக்கப்பட்டாலும்,
அவர்களுள்  நல்ல  எண்ணங்களும்  தன்னம்பிக்கையும்  உள்ளவர்களே  அழகானவர்கள்;   
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை , நம் மன எண்ணங்களிலே!"

 ஆம்!  ஒருவரின்  தோற்றம்  அவரின்  வாழ்வை  முடிவு  செய்வதில்லை. இக்கூற்றிற்குப்  பலர்  எடுத்துக்காட்டாய்  இருப்பினும்  அவர்களுள்  உயர்ந்து  தன்  குறைகளையும்  மீறி நிறைவான  வாழ்வை  வாழ்ந்து  வரும்  நிக் வுஜிசிக்  நம்மை  வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும்  மாமனிதராய்  விளங்குகிறார்.  

 சுவாரசியங்களும்  சிக்கல்களும்  நிறைந்த  தம்  வாழ்க்கையில்,  தமக்குக்  கிடைக்கும் சந்தர்ப்பங்களைப்  பயன்படுத்திச்  சாதிக்க  முயலும்  நிக் வுஜிசிக்  என்ற  'நிக்கோலஸ் சேம்சு வுஜிசிக்'  ஒரு  உணர்ச்சிமயமான  ஆஸ்திரேலியப்  பேச்சாளர்.  செருபிய  இனத்தைச் சேர்ந்த  இவர்,   ஆஸ்திரேலியாவில்  உள்ள  மெல்பேன்(Melbourne)   என்னுமிடத்தில் பிறந்தவர்.  இவர்  பிறவியிலேயே  டெட்ரா-அமெலியா சிண்ட்ரோம் (tetra amelia syndrome) என்னும்  நோயால்  பாதிக்கப்பட்டவர் (இரு கைகளும் கால்களும் இல்லாதவர்).  இவரின் இக்குறைபாட்டினால்  குழந்தைப் பருவத்திலேயே  பல  இன்னல்களுக்கு  ஆளானார்.

இவருக்குப்   படிப்பில்  ஏற்பட்ட  ஆர்வத்தினால்  பாடசாலைக்குச்  செல்ல விரும்பினார்.  ஆரம்பத்தில்,  இவருடைய  ஊனத்தின்  காரணமாகக்   கல்வி  நிறுவனங்களின் அனுமதி  மறுக்கப்பட்டது.   பிறகு,  சட்டத்தில்  ஏற்பட்ட  மாறுதல்கள்  காரணமாக இவர் மனநலம்  குன்றியவர்களோடு  இணைந்து  படிக்கும்  சூழல்  ஏற்பட்டது.  அங்கே  சக மாணவர்கள்  இவரை  ஒரு  தீண்டத்தகாத  பொருளாக  நடத்த  ஆரம்பித்தனர்.

தனிமை  தீயினால்  வாடிய  நிக்,  அளவுகடந்த  மன அழுத்தத்தினால்  தமது பத்தாம் அகவையில்  தற்கொலை  முயற்சி  செய்தார்.  மரணப்  படுக்கையிலிருந்து  தம்  பெற்றோரின்  கவனிப்பால்  மீண்டார்.  தன் தாயின் வேதனையை உணர்ந்த  நிக்,   இனி இவ்வாறான  முடிவை  மேற்கொள்வதில்லை  என  உறுதிக்  கொண்டார்.

அவருடைய தாயார்,  செய்தித்தாளில்  வெளியான  அவரைப்  போன்ற மாற்றுத்திறனாளியின்  வாழ்க்கையைப்  பற்றிக்  காட்டினார்.  இது அவருக்கு நம்பிக்கையை  ஊட்டியது. 

  " நடந்து போகப்  பாதை  இல்லை  என்று  வருத்தப்படாதே....
  நீ  நடந்தால்  அதுவே  ஒரு  பாதையாக  மாறும் !"

         
நிக்  பல  இன்னல்களையும்  தாண்டி  தனக்கென்று  ஒரு  பாதையை உருவாக்கினார்.  ஒரு  சாதாரண  மனிதனனைப்   போலத்  தானும்  வாழவேண்டும்  என்று வைராக்கியம் கொண்டார்.  தன்னுடைய   அனைத்துப் பணிகளையும்  பிறரின்  உதவி இல்லாமல் தானாகவே  செய்யக்   கற்றுக்  கொண்டார்.  பின்  எழுதவும்  கற்றுக் கொண்டார்.  பிறகு  கணினியில்  வேலை  செய்வது,  டம்ளரில்  தண்ணீர்  ஊற்றிக்  குடிக்க,  தலை வாரிக்கொள்ள,   பல்  துலக்க,  முகச்சவரம்  செய்துகொள்ள  மற்றும்  தொலைபேசியைப் பயன்படுத்தவும்  கற்றுக்கொண்டார்.  இவையில்லாமல் நீச்சல், கோல்ப், கால்ப்பந்து, நீர்ச்சறுக்கு  போன்ற  பலவற்றையும் கற்றுத் தேறினார்.  இவை  அனைத்தையும்  தன்  சிறு பாதத்துண்டின்  உதவியால்  செய்வார்.      

' முயன்றால் முடியாதது எதுவுமில்லை'  என்பதை  நிக்   உணர்ந்தார்.  'கஷ்டத்தில் வாடுபவர்களைக்   காக்கவே  இறைவன் தம்மைப் படைத்திருப்பதாய்'   எண்ணினார்.  தனது 17ம் அகவையில்  'லைப் வித் அவுட் லிம்ப்ஸ்'. (LIFE WITHOUT LIMBS)   என்ற  இலாப நோக்கற்ற  நிறுவனத்தைத்  தொடங்கினார்.  இவர்  21-ம் அகவையில் கிரிபித் பல்கலைக்கழகத்தில்  கணக்கியல்  மற்றும்  நிதியியல் திட்டமிடலை  இரட்டைப்  பட்டமாக முடித்தார்.

தன்னம்பிக்கைப்  பேச்சாளராய்  உறுமாறினார்.   'இரு  கைகளும்  கால்களும் இல்லாத  ஒருவர்  வாழ்க்கையின்  மீது  கொண்ட  தன்னம்பிக்கை'  அனைவரையும் வியப்பில்  ஆழ்த்தியது.  பல  மேடைகளில்  பேசி  அவையில்  இருப்பவரின்  உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார்.  மிகப்பிரபலமான  உணர்ச்சிமயமான  பேச்சாளராய்  வளர்ந்து  வரும்  இவர்,  சுமார்  24 நாடுகளில்  மூன்று மில்லியனுக்கும்  அதிகமானவர்களுடன் உரையாற்றியுள்ளார்.

இவரின்  முதல்  புத்தகமான   'லைப் வித்தவுட் லிம்ப்ஸ்' (LIFE WITHOUT LIMBS: Inspiration for a ridiculously good life)  2010-ம் ஆண்டு வெளியானது.  இதுமட்டுமின்றி 'Believe Belong Become'  ,  ' The power of Unstoppable faith'  , ' Stand Strong' , 'Be the hands and feet' போன்ற  பல  புத்தகங்களையும் எழுதி உள்ளார்.  2005- ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின்  சிறந்த  நபருக்கான விருது பெற்றார்.

மேலும்  தனது  தினசரி  வாழ்க்கையில்  செய்யும்  செயல்களை   'லைப் இஸ் க்ரேட்டர் பர்பஸ்' (Life's greater purpose)  என்னும் குறும்படத்தின்  மூலமாக  வெளியிட்டார். இளைஞர்களுக்காக  'நோ ஆர்ம்ஸ், நோ லெக்ஸ், நோ வொர்ரீஸ்'  ( No arms, No legs, No worries- youth version) என்ற தொகுப்பினையும்  வெளியிட்டார்.  'தி  பட்டர்பிளை சர்க்கஸ்'(The Butterfly Circus),  ' தி லாஸ்ட் ஷீப்' ( The Last Sheep)  முதலிய குறும்படங்களிலும்  நடித்துள்ளார். 'சம்திங்க் மோர்' (SOMETHING MORE) என்னும்  காணொளியினையும்  யூடியூபில் வெளியிட்டார்.

" முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறை பிடிக்கும்; 
  எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்!!"

இக்கூற்றிற்கு மிகவும் பொருத்தமாய் இவர் தம் வாழ்க்கையை வாழுகிறார்.

தன்னம்பிக்கையின்  சிகரமாய்  விளங்கும்  'நிக் வுஜிசிக்'   தனது  வாழ்வினை  வாழும் முறையும், தனது  வாழ்வின்  மீது  கொண்ட  கண்ணோட்டமும், சவால்களை  எதிர்கொள்ளும்  அவரின்  துணிச்சலும்  நம்மை  வியப்பில்  ஆழ்த்தி,  நம்மை  ஊக்குவிக்கும்  மருந்தாய்த்  திகழ்ந்து,  நமது  இயலாமையை  விரட்டி  அடிக்கிறது.    

ஒருவர்  தம்  வாழ்க்கையில்  சாதிக்க , தோற்றம்  இடையூராய்  இராது,  இருத்தல் கூடாது.   நம்  வாழ்வினில்  நாம்  எதிர்கொள்ளும்  சிக்கல்களும்  சவால்களும்  வலியனதான்.  இருப்பினும்  அதனை  எதிர்கொள்ளும்  மனிதனின்   தன்னம்பிக்கையோ அதினும் வலிமைவாய்ந்தது.

" உங்கள் வாழ்வில் எந்த அதிசியமும் நிகழவில்லையெனில் ....
கடவுள் உங்களையே ஒரு அதிசியமாக அனுப்பியுள்ளார் என்பதே பொருள்" 
                                                                                                   - நிக் வுஜிசிக்.

Tagged in : life, Inspiration, Self confidence, story,

   

Similar Articles.