நேற்று வெயில் கொடுமை காரணமாக வீட்டிலேயே தஞ்சம் அடைந்தேன். இருந்தாலும் மணி 3 போல கார்த்திக் வீட்டிற்கு வந்து விளையாட அழைத்தான்.சரி என்று புறப்பட்ட போது,"மச்சான் பந்து வாங்கணும் ஒரு 30 ரூபா உஷார் பண்ணுன்னு சொன்னான்".
அம்மாவின் பருப்பு டப்பாவிலிருந்து காசை எடுத்துக்கொண்டு விளையாடச் சென்றோம்.நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போது அசோக்கின் செருப்பு அறுந்து விட்டது. விளையாடும் இடம் முற்புதர்கள் நிறைந்த இடம் என்பதால் அறுந்த செருப்பை அணிந்து கொண்டு மிகவும் சிரமத்தோடு வீடு வரை சென்றான். வீட்டின் வெளியே உள்ள குப்பைத்தொட்டியில் செருப்பை வீசச் சென்ற போது கார்த்திக் தடுத்தான்.
"மச்சான் என்ன செய்ய போற, எனக்கு தெரிஞ்ச ஒரு தாத்தா இருக்காரு அவருக்கிட்ட போன உடனே தெச்சு குடுத்திருவரு" எனக் கூறினான்.
"வேணாம் மச்சான் புது செருப்பு வாங்கிக்கலாம் டா" என்று சொன்னான் அசோக்.
"பணம் இருக்குனு செலவு பண்ணனும் அவசியம் இல்லடா. நாம இந்த மாறிக் கஷ்டப்படும் ஆளுங்களுக்கு பண உதவி செய்ய முடியலனாலும் இந்த மாறி செருப்பு தெச்சு உதவலாமே" என்று சொன்னான் கார்த்திக்.
பின்னர் அங்கே சென்று செருப்பும் தெச்சாச்சு. அப்போது தான் எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது.
அண்ணா பல்கலைக்கழக விடுதியில் படிக்கும் நான், எத்தனையோ முறை இவ்வாறு ஆன போது புது செருப்பைத் தான் வாங்கி இருக்கிறேன். ஆனால் தினமும் மாலை என் விடுதியின் கீழே செருப்புத்தைக்கும் தாத்தா உட்காந்திருப்பார்; ஒருநாளும் நமக்கு இந்தச் சிந்தனை வரவில்லையே என்று வருந்தினேன்.
ஆதலால் அண்ணா பல்கலைக் கழக விடுதியில் தங்கி படிக்கும் மாணவராக நீங்கள் இருந்தால், இந்த கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் நபராக இருந்தால் போதுமான அளவு இந்த மாறி தொழிலாளர்களுக்கு உதவலாமே.நமக்கும் செலவு மிச்சம். அவர்களுக்கும் ஏதாவது வருவாய் வந்தது போலிருக்கும்.
---------------
இக்கட்டுரை எழுதியவரை ‘கேவீ’ எனச் சுருக்கி அழைப்பதால் இவரின் உண்மை பெயர் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.