Loading...

Articles.

Enjoy your read!

நெரித்த திரைக்கடலில் நின் முகம் கண்டேன்

ஏனோ காற்றின் அலை வரிசை கேட்க மனம் விழைந்தது. தனிமை அன்று அழகாகத் தெரிந்தது. எண்ணங்கள் மேலும் எழுவதற்குள் நான் கடற்கரையை அடைந்தேன்..

அது பொழுது சாயும் நேரம். அலைகளைக் காணும் முன் பறவைகளின் சங்கீதம், என் ஒளிக்கருவிகளைத் தோல்வியுறச் செய்தது. சில்லென்ற காற்று என் தலைமுடியைக் கோதியது. மனம் பாரம் இழந்தது போல் லேசாக புன்னகைத்தது. துப்பாக்கி, பலூன், பஞ்சு மிட்டாய், தர்பூசனி, மீனவ படகுகள், வலைகள், பல வண்ணக் குடைகள், மணல் சிற்பம் என என்னைச்சுற்றி இருப்பினும் இவற்றைப் பொருட்படுத்தாமல் நான் கரையொட்டி நடக்கத்தொடங்கினேன்.

அலைகள் போட்டியிட்டுக்கொண்டு என்னை நோக்கிப் பாய்ந்தன. கடைசி அலைக்குப் பின் நிழலற்றவன் நிலவுக்கு வழி கொடுத்துச் செல்வதைக் கண்டேன். அலைகள் வெண்நுரையாய் என் பாதங்களைக் கடந்தன. காற்று சற்று வேகமாய் வீசத்துவங்கியது. வானத்திற்கு யாரோ மெல்லிய கருப்பு வண்னம் அடித்தது போல், கருமேகங்கள் சூழ்ந்தன. பலத்த மழைக்கு அறிகுறியாய்க் கனத்த துளிகள் மேலிருந்து கடலின் நீர்ப்படுக்கையில் பட்டுத் தெறித்தன. சுற்றிலும் கூவி விற்ற கடைகள் வலுவிழந்தது. பொதுக்கூட்டம் கூழாங்கற்களும் சங்குகளும் தன் வழியைக் குறுக்கிட வேகமாக ஓடின. மீனவர்கள்  கடலின் கடைசியிலிருந்து கரையை வந்தடைந்தனர். அலைகளின் சக்தியை எதிர்க்கற்று குறைத்தது.

அப்போது சட்டென்று தலைவனும் தவைவியும் அலையிலிருந்து என் காலடியைச் சேர்ந்தனர். ஏதோ அவர்கள் தன் வரலாற்றை என்னிடம் கூறுவதைப் போல் அவர்களை நான் பார்க்கத்தொடங்கினேன். என் எண்ணங்கள் கற்பணையாய் உயர்ந்தன. கற்பணையால் எவ்வுயரங்களையும் அடையக்கூடுமோ ? என்று எனக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டேன்.

“பவளப்பாறைகள், பல வண்ண மீன்கள், அரிய அழகிய தாவரங்கள், வெண்மணல் என ஒரு முகமும், சுழல்களை எழுப்பும் கன நீர், கொடிய திமிங்கலங்கள், கூர்மையான கற்கள் என மறுமுகமும் உடைய ஆழ்கடலைத் தன் இருப்பிடமாய்க் கொண்டுள்ள தலைவன், தலைவியைத் தேடி மேலே வருகிறான். அச்சமயம் அழுத்தமிக்க கடல் காற்று உண்டாகி இருந்தது. இருண்ட வானம் தூரல்களைத் தூவியது. தலைவி தலைவனைக் கண்ட மகிழ்ச்சியில் அவனை அடைய விரைந்தாள்; தலைவனின் அகம் புகுந்தாள். தன்னகம் புகுந்தவளைப் பாதுகாக்க, அவளைத் தன்னுள் வைத்துக்கொண்டன் தலைவன். அவளுக்கு ஒரு ஓடாக இருந்து அவளுக்கு வந்த இடையூறுகள் அனைத்தையும் தாங்கிறான். தலைவனின் அகத்தில் வெகுநாட்கள் இருக்க தலைவி மெதுவாய் பக்குவமடைகிறாள். அழகிய தோற்றத்தையும் பெற்று விலைமதிப்பற்றவளாகிறாள் தலைவி. வெளியே பல இன்னல்களையும் இடையூறுகளையும் கடந்த தலைவன் கடின தோற்றத்தைப் பெறுகிறான்.“ இவ்வாறு என் கற்பணை முற்று பெற்றது.

சுற்றிப் பார்கின் கடற்கரையில் நான் தனியாய் நின்றிருந்தேன். பலத்த காற்று மழையை அப்புறம் கொண்டு சென்றது. தலைவனையும் தலைவியையும் அலைகளுடன் மீண்டும் அவர்கள் இருப்பிடத்திற்கே அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பி, சாலையை நோக்கி நடந்தேன். ஆனால் இவ்வழகிய தலைவன் மற்றும் தலைவி கடலணி வியாபாரிகளால் பிரிக்கப்படுவதை நினைத்துப் பார்க்கையில் ஒரு நிமிடம் என் மனக்கண்கள் அழுதன. என் கால்கள் முன்னே செல்ல, கண்கள் திரும்பி “அவர்களை வெளியே விடாதே” என்று கடலிடம் கூறியது. ஆழ்கடலில் இக்கடினத்தில் உருவாகி,  பின் பிரிக்கப்படும் முத்தும் சிப்பியுமே இக்கதையின் என் தலைவி மற்றும் தலைவன்...

Tagged in : இயற்கை, கடல்,

   

Similar Articles.