சுரங்கத்தில் இருந்து நிலக்கரி, வெள்ளி, தங்கம், வைரம் போன்றவைகளை கண்டு தோண்டி எடுக்கிறோம் . அதே போன்று நமது மூளை ஒரு சுரங்கம், அதிலிருந்து பல அற்புதங்களைக் கண்டெடுக்கலாம் .
யானை ஒன்று ஐந்து மனிதர்களின் முன் நிறுத்திவைக்கப்பட்டது. அந்த ஐந்து மனிதர்களின் கண்களும் கட்டப்பட்டன. ஒருவர் வாலைப் பிடித்துக்கொண்டு அதை உலக்கை என்று எண்ணினார். இரண்டாவது மானிடர் அதன் வயிற்றைத் தடவி அதை ஒரு பெரிய பானை என்று எண்ணுகிறார். மூன்றாமவர் அதன் காலைத் தடவி பெரிய தூண் என்று நினைக்கிறார் . நான்காமவர் அதன் காதைத் தடவி பெரிய முறம் என்று எண்ணுகிறார். இறுதியில் நிற்பவரோ அதன் தும்பிக்கையைத் தடவ , யானை மேலும் கீழும் அசைகிறது . அவர் அதனை மரக்கிளை என்று நினைக்கிறார்.
ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு அனைவரின் கண்கட்டுகள் அவிழ்த்தப்படுகின்றன. ஐவரும் ஒரே விதமாக 'அட , இது யானை !! ...' என்கின்றனர். இதற்கு காரணம், கண்களிருந்தும் அவை கட்டப்பட்டு இருந்ததால் அவை என்னவென்று அவர்களால் உணர முடியவில்லை .
அதைப் போன்றதுதான் நம் மனம். தான் என்ன ஆக வேண்டும் என்று ஒருவர் எண்ணுகிறாரோ அதன்மீது பற்று அல்லது அதனை அடைய வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் அதில் வெற்றி அடைய முடியும். தாகமும், பற்றும் மட்டும் இருந்தால் போதாது, வேகம் இருக்க வேண்டும். அதாவது விரைந்து செயல்படுதல் வேண்டும். இவ்வாறு விரைந்து செயல்படுவதற்கு மிகவும் முக்கியமானது எது? அதுதான் மனம். மனம் ஒரு சுரங்கம்.
சுரங்கத்தைப் போன்றே மனதிலிருந்து பலவற்றைத் தோண்டி எடுக்கலாம். ஒன்று குணம், இரண்டாவது திறன், மூன்றாவது ஆற்றல். இவற்றை வெளிப்படுத்தி தான் மனிதன் சாதிக்கிறான். உதாரணத்திற்கு, நீர் கொதிக்கிறது. அந்த பாத்திரத்தின் மீது ஒரு மூடி வைக்கப்படுகிறது. வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாக மாறுகிறது, ஆவி மேலே உள்ள பாத்திரத்தை மேலே உயர தள்ளுகிறது. இதன் மூலம் நீராவிக்கு உந்து சக்தி உள்ளது என்பதை உணருகின்றோம் . ஆனால், அதனையே ஒருவர் உற்று கவனிக்கிறார். அதனையே பயன்படுத்தி என்ஜினை உற்பத்தி செய்து ஓடச் செய்கிறார். அவர் பெயர் ஸ்டீவன்சன்.
முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எந்தத் திறனையும் பெறலாம் என்பது அறிஞர்களின் வாய்மொழி . திறனைப் பெற்று , அதில் வளர்ச்சியுற்று , உயர்ந்த நிலையை அடைகின்ற போது, அதனை ஆற்றல் என்கிறோம். பாரதியார் ஒரு சிறந்த கவிஞர், ரவிவர்மா ஒரு சிறந்த ஓவியர், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி ஒரு சிறந்த பாடகர் என்கிறோம்.
எனவே, ஒருவர் உயர்வதற்கு திறன்கள் அவசியம். முயன்றால், விரும்பினால், பயிற்சியின் மூலம் தொடர்ந்து செயலாற்றி உயரிய நிலையினை அடையலாம். இன்று உலகெங்கும் ரயில்கள் ஓடுகின்றன. ஒன்றினை உருவாக்குவது என்பது கடினம். ஆனால் உருவாக்கவியலும் என்ற நம்பிக்கை இருந்தால் எதனையும் உருவாக்கிவிடலாம்.
மனப்போக்கு மாறினால் மலைச்சிகரத்திற்கே செல்லலாம் .
ஒரு விதை தான் , ஆனால் அது எவ்வளவு மரங்கள் உருவாவதற்குக் காரணமாக இருக்கின்றது. ஆகையால், நம் எண்ணங்களை நம் மனதில் விதையாக விதைப்போம். அது மரமாக வளரட்டும்.