Loading...

Articles.

Enjoy your read!

மகாத்மா காந்திஜியின் கடைசி நாள்

ஜனவரி 30, 1948. வெள்ளிக்கிழமை. அன்றைய பொழுதுதான் அவரின் இறுதிப்பொழுது என்பது அவருக்குத் தெரிந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

கல்கத்தாவில் நடந்த மதக்கலவரங்களை தன் அதிசயத்தால் கட்டுக்குள் கொண்டு வந்த காந்தியடிகள், புதிதாக சுதந்திரம் அடைந்த இந்தியாவின் தலைநகருக்கு வந்தபோதிலிருந்து அங்கும் மதக்கலவரங்கள்தான். இதனால் மிகுந்த வேதனையிலிருந்தார் காந்திஜி.

ஜனவரி 30ம் தேதியன்று, அவருக்கு 78 வயதாகி நான்கு மாதங்கள் நிறைவடைந்திருந்தது. டில்லியில் சண்டையிட்ட இரு மதத்தினரையும் ஒற்றுமைப்படுத்த 10 நாள் உண்ணாவிரதம் இருந்த காந்திஜி, அந்த விரதத்தை முடித்து 12 நாட்கள்தான் ஆகியிருந்தது.
காந்தியை சந்திக்க சர்தார் வல்லபாய் படேல் மற்றும் அவர் மகள் மணி வருகின்றனர். அப்போதுதான் காந்தி எழுந்து கழிவறை செல்கிறார். சிறிது நேரம் காத்திருந்தவர்களை, காந்தி சந்திக்கிறார். படேல் அல்லது நேரு, அமைச்சரவையிலிருந்து விலக வேண்டும் என்று காந்தி சொல்கிறார். இதை நான் மாலை இறை வணக்கத்திற்குப் பிறகு அறிவிக்கப் போகிறேன் என்று கூறுகிறார். விவாதம் நீண்டுகொண்டே செல்கிறது.

நாதுராம் விநாயக் கோட்ஸே, 37 வயது ஹிந்து தீவிரவாதி. பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷனில் தங்கியிருந்த கோட்சே, வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே எழுந்து விடுகிறான். இன்றுதான் அவன் காந்தியை கொல்ல உள்ளான். 

மாலை 5 மணி. பிர்லா மந்திர் உள்ளே கோட்சே கும்பல் நுழைந்துவிட்டது. சீருடை மற்றும் சீருடை அணியாத போலீசார் ஏராளமானோர் அங்கே இருக்கின்றனர். எனினும், யாரும் யாரையும் சோதனையிடவில்லை. திருப்தி அடைந்த அந்த கும்பல், இறைவணக்கத்திற்காக கூடியிருப்பவர்களுடன் கலந்துவிட்டது.

மாலை 5 மணிதான் இறைவணக்கத்திற்கான நேரம். வழக்கமாக காலம் தவறாத காந்தி. அன்று 5.10 மணியாகியும், சர்தார் படேலுடன்தான் பேசிக் கொண்டிருந்தார். இறைவணக்கத்திற்கு நேரமாகிவிட்டது என்பதை உணர்ந்த மனு, கடிகாரத்தை காண்பிக்கிறார். புரிந்து கொண்ட காந்திஜி, ‘நான் உங்களிடமிருந்து இப்போது விடைபெறுகிறேன்’ என்று கூறியபடி, கதகதப்பிற்காக ஷால் ஒன்றை போர்த்திக் கொண்டு வெளியே வருகிறார். 
  
பிரார்த்தனை நடக்கும் பகுதிக்கு காந்தி நடந்து சென்று கொண்டிருக்கிறார். 200 அடி தூரம்தான்  இருக்கிறது. இத்தனை வயதில் எத்தனை தூரம்நடந்திருப்பார். எவ்வளவு இடங்களைச் சுற்றியிருப்பார். இப்போது 200 அடி இறுதி தூரத்தில் நடந்து கொண்டிருக்கிறார்.

போர்பந்தரில் துவங்கிய அவரின் பயணம் அப்படியே, பாம்பே, டர்பன், பீட்டர்மரிட்ஸ்பெர்க், ஜோகன்னஸ்பர்க், பீனிக்ஸ் செட்டில்மென்ட், டால்ஸ்டாய் பார்ம், சாம்பரான், சபர்மதி, எரவாடா, தண்டி, கின்ஸ்லே ஹால், செயின்ட் தாமஸ் அரண்மனை, சேவாகிராமம், ஆகாகான் அரண்மனை, நோகாலி, கல்கத்தா, டில்லி, இப்போது டில்லியில் உள்ள பிர்லா ஹவுசில் அவரின் பயணம் நிறைவடையப் போகிறது.

திடீரென அவர் எதிரில் தோன்றுகிறான் கோட்சே. காந்தியை தூரத்திலிருந்து சுடப் போவதாகத்தான் திட்டம். அதை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்ட கோட்சே, காந்திக்கு எதிராக வருகிறான். அவனுக்கும் காந்திக்கும் இடையே ஒன்றிரண்டு அடி தூரம்தான்இருந்தது. காந்தியின் காலைத் தொடுவது போல கீழே குனிந்து, நமஸ்தே காந்திஜி என்கிறான். பதிலுக்கு கைகளைக்கூப்பி நமஸ்தே என்று சொல்கிறார். பேத்தி மனு, கோட்சேவை, தூரச் செல்லுங்கள். ஏற்கனவே காந்திக்கு நேரமாகிவிட்டது என்று கோட்சே தோளைப் பிடித்து தள்ளுகிறாள். அவளை தள்ளிவிட்டு குனிந்து எழுந்த கோட்சேயின் கைகளில் இத்தாலி தயாரிப்பான பெரட்டா பிஸ்டல். என்ன நடக்கிறது என்று யாரும் அறிவதற்கு முன்னதாக, துப்பாக்கியின் விசையை அழுத்தி, மார்பு மற்றும் அடிவயிற்றில் குண்டுகளைப் பாய்ச்சுகிறான். மூன்று குண்டுகளைத் தாங்கிக் கொண்டு, ஹே ராம், ஹே ராம் என்கிறார். ரத்தம் பீறிட்டு அடிக்கிறது. நின்றவாறே ஒன்றிரண்டு வினாடிகளில் இறந்துவிட்டார். உயிரற்ற காந்தி மடாரென கீழே விழுகிறார். ரத்தம் பீறிட்டு பாய்கிறது. இந்த தேசத்தின் தந்தை, இறந்துவிட்டார். அவர் தலையை தங்கள் மடியில் கிடத்தியபடி பேத்திகள் இருவரும் கதறுகின்றனர். கதை முடிந்துவிட்டது. உலகம் முழுவதும் ஏராளமான நண்பர்களைப் பெற்றிருந்த காந்திக்கு, ஒரு எதிரியும் இருந்திருக்கிறான்.

காந்தி சுடப்பட்டார் என்ற தகவல், உடனடியாக காட்டுத்தீ போல பரவுகிறது. உலக ஜோதி அணைந்துவிட்டது!

Tagged in : காந்தி, இந்தியா, கொலை, கி. விக்னேஷ்வரன்,

   

Similar Articles.