காலப் பயணம் செய்ய ‘கால இயந்திரம்’ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக நாம் வியூகித்துக்கொள்வோம். எனில், எந்தக் காலத்திற்குச் செல்ல நீங்கள் விரும்புகிறீர்கள்? சந்தேகமே வேண்டாம், நான் என் குழந்தைப் பருவத்திற்குச் செல்லவே ஆசை கொள்கிறேன்.
கடந்த காலத்தின் கஷ்டம் மறந்து
நிகழ்காலத்தின் நிதர்சனம் உணர்ந்து
வருங்காலத்தை வரவேற்பவர்கள் குழந்தைகளே !!!!
ஷேக்ஸ்பியர், பிறப்பு முதல் இறப்புவரை உள்ள காலத்தை ஏழு பருவங்களாகப் பிரிக்கிறார். அதன் முதல் பருவமே (குழந்தை பருவம்). நம் வாழ்வின் பொற்காலமாகும். சுதந்திரப் போராட்ட வீரரான கோபால கிருஷ்ண கோகுலேவும் இதையே குறிப்பிடுகிறார்.
அன்பை அருவியாய் வாரிவழங்கும் அம்மா உணவூட்டுவதன் ஆனந்தத்தைச் சொல்ல வார்த்தைகளில்லையே! மாலைப் பொழுதில் தந்தையோடு ஊரைச்சுற்றி வருவதன் உல்லாசத்தை எண்ணுகையில் "கடிகாரம் ஏன் சுற்றுகிறது?" என்ற சிந்தனை எழுகிறது. கேட்பதனைத்தையும் வாங்கித்தரும் தாத்தாவோடும், நாம் உறங்கும்வரை விழித்திருந்து, கதைகள் பலகூறும் பாட்டியோடும் என்றென்றும் இருக்க மனம் ஏக்கம் கொள்கிறது.
நம் சக வயது நண்பர்களோடு விளையாடாது, மூத்த அக்கா அண்ணாக்களோடு விளையாட அடம்பிடித்து செய்த குறும்புகள் என் மனதில் பசுமரத்தாணிபோல் இன்றும் பதிந்துள்ளன. வகுப்பில் நம் புத்தகப் பையையும், தண்ணீர் குடுவையையும் தொடுபவரை அடித்து, ஆசிரியரிடம் சிக்கி முழித்த அந்த குதூகலக்காட்சிகள் என் கண்களிற்கு நகைச்சுவைத் திரைப்படங்களாகத் தெரிகின்றன. இவ்வாறு நம் சிறுபிராய நினைவுகளை அடுக்கினால், அது இமயமலையை விட உயரமாய் வரும் என்பதில் ஐயமில்லை.
சிட்டி கூறுவதைப்போல பொறாமை,வஞ்சகம் போன்ற ‘ரெட் சிப்கள்’ ஏதுமின்றி மகிழ்ச்சி, நிறைவு போன்ற ‘க்ரீன் சிப்களைக்’ கொண்டு வசந்தமாய் வாழ்வது குழந்தைப் பருவத்தில் மட்டுமே!!!
குழந்தைப் பருவ நியாபகங்களோடு வாழ்ந்துவரும் அனைவருக்கும் இது சமர்ப்பணம்.