"வாழா என் வாழ்வை வாழவே! தாளாமல் மேலே போகிறேன்! தீர உள் ஊற்றை தீண்டவே! இன்றே இங்கே மீள்கிறேன்" - பாட்டு.
அவன் போன் இப்ப அடிக்கிறது ஒன்பதாவது தடவ. மேனேஜர் அவனுக்கு கொடுத்த ப்ரொஜெக்ட இன்னும் அவன் முடிக்கல. டெட் லைன் முடிஞ்சு ரெண்டு நாள் ஆகிடுச்சு. கிட்டத்தட்ட ஒரு வாரமா செம வேல அவன் ஆபீஸ்ல. அவனுக்கு எங்கேயாச்சு ஓடணும் போல இருந்தது. அவன் ஆபீஸ்ல தலைவலின்னு கூட வேல செய்றவங்க கிட்ட பொய் சொல்லிட்டு, மேனேஜர் கிட்ட கூட சொல்லாம மத்தியானம் வண்டி எடுத்திட்டு கெளம்பி வந்துட்டான். வர வழியில இந்த பீச்ச பார்த்தான். அவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல, இதோ இப்ப இந்த கடற்கரையிலே ஒக்காந்திட்டிருக்கான். பயங்கரமான வெயில்ல ஓடிட்டு ஒரு ஆலமர நிழல்ல ஒதுங்குனது போல அவன் மனசுக்குள்ள ஒரு நிம்மதி. அடுத்து என்ன பண்ண போறோம், எப்படி சமாளிக்க போறோம் அதெல்லாம் அவனுக்கு தெரியல. மணி சாயங்காலம் 4-4.30 இருக்கும். இந்த நேரத்துல தான் ஒரு குதிரைக்காரன் வந்தான்.
"குதிர....... குதிர! சார் ரைடு சார்! வாங்க சார்! வாங்க சார்!" அவன் அப்போ அத பெருசா கண்டுக்கல. குதிரை கொஞ்ச தூரம் போச்சு, அப்பதான் அவனுக்கு அது நியாபகமே வந்தது. "அட! நாம வாழ்க்கையில ஒரு தடவ கூட குதிரை சவாரியே போனதில்லையேனு". சின்ன வயசுல அவன் அப்பா கிட்ட கேட்டிருக்கான். முடியாதுனு சொல்லிட்டாரு. அடுத்து வளந்ததுக்கு அப்புறம் குதிரை சவாரி மேல அவனுக்கு ஆர்வமே இல்லாம போயிடிச்சு. இப்போ ரொம்ப நாள் கழிச்சு அவனுக்கு குதிர சவாரி போகணும்னு ஆச. இத விட்டா அவனுக்கு வேற சமயமும் கிடைக்காது. கூப்பிட்டான் "அண்ணோவ் !" கொஞ்ச அடி தள்ளி இருந்த சவாரிக்காரர் அவனைப் பார்த்தார்.
இப்போ குதிரைக்கு மேல ஒக்காந்திட்டிருந்தான் . "எப்படின்னா ஓட்டுறது! நீங்க கூட வரலியா?"
"நா பின்னாடி நடந்து வருவேன்! சிம்பிள்தான்பா சொல்றத கேளு. காரு பைக் மாறி தான்! இதோ இருக்கு பாரு இந்த கயிறு, இத இடது பக்கம் இழுத்தா அந்த பக்கம் ஓடும், வலது பக்கம் இழுத்தா இந்த பக்கம் நகரும், பின்னாடி இழுத்தா பிரேக் மாறி...... நின்னிடும் புரிஞ்சுதா?"
"சரி நா"
"அப்புறம் சொல்ல மறந்துட்டேன், கொஞ்சம் வேகமா போகணும்னா இந்த வயித்துல ஒதைக்கணும். அசிலரேட்டர் மாதரி"
"ஒகே நா"
"ஹோய்.......ஹோய்......இஃர்ர்ர்....இக்கிரர்..." அவரது சத்தத்தை கேட்டதும் குதிரை கொஞ்சம் ஓட ஆரம்பிச்சது.
"இந்தப்பக்கம் திருப்புப்பா! ". கயித்த திருப்பினான். குதிரையும் திரும்பியது. உடனே சட்டுனு அதுக்கு எதிர் திசையுல கயித்த திருப்புனான். குதிரையும் திரும்பிட்டே "ஓ ஓ ஓ" னு கனச்சு ஓடினது . ஏன்னு தெரியல திடீர்னு அந்த சத்தம் அவன் மனசுல ரொம்பநாளா ஓட்டிட்டிருக்க ஒரு வெறுமைய தட்டி தூறு வாருச்சு.
நாம இந்த குதிரைக்கு மேல ஒக்காந்திட்டிருக்கறது இதுக்கு புடிக்கலைனு தெரிஞ்சது. முன்னாடி கொஞ்சம் தல சாய்த்து பார்த்தான். அந்த கயிறு அந்த குதிரையோட மூக்குல கட்டியிருந்தது. அது பேரு கடிவாளம்னு நினைக்குறேன்.
"ஏம்பா..........நல்லா இழுப்பா" - அந்த அண்ணனோட குரல்.
அவனோட கையால இப்போ நல்ல புடிச்சு இழுக்க முடியல. மனசுல எதோ ஒன்னு தடுத்துட்டிருந்தது. குதிரை அதன் பாட்டுல மெதுவா போய்ட்டிருந்தது. திடீருனு பின்னாடி இருந்து "பொட்"னு சவுக்கால ஒரு அடி. அவனுக்கும் சேர்த்து உடம்பெல்லாம் நடுங்குனது. அவரு அடிச்சதுக்கு அப்புறம் அந்த குதிரை இன்னும் நல்ல கனச்சு வேகமா ஓட ஆரம்பிச்சது. சொல்லி வச்சாப்போல ஒரு இடத்துக்கு மேல குதிர நகுரல. கொஞ்ச தூரம் போன விட்டானே அமைதியா நின்னுடுச்சு. ட்ரெயின் பன்னிருப்பாங்க போல. இவன் கீழ இருங்குனான். சவாரி அண்ணாவும் வந்தாரு.
"100 ரூபா கொடுப்பா." அவன் பாக்கெட்டிலிருந்து நீட்டி கொடுத்திட்டு அந்த குதிரையை ஏக்கமா பாத்திட்டு மௌனமா நடந்து போனான். போகிற வழியில "சே! இவன் எவ்வுளோ சுயநலமானவன். அவனோட தேவைக்காக, சௌகரியத்துக்காக இந்த குதிரையை அடிச்சு வேல வாங்கி அதோட அறியாமைய பயன்படுத்திக்குறானே" னு மனசுக்குள்ள பேசிக்கிட்டான்.
அந்த குதிரையை நெனச்சா அவனுக்கு இன்னும் பாவமா இருந்தது. நாம யாருக்கு வேல செய்ரோம்னே தெரியாம, கடிவாளம் கட்டி சாப்பாட்டுக்காக அவன்கிட்ட இப்படி வாழ்க்க பூரா அது அடிவாங்கிட்டிருக்கேனு தோனிச்சு .
இப்போ அவன் கடற்கரையிலே இருந்து நடந்து ரோட்டுக்கு நடந்து வந்தான். இப்போ அவனோட போன்ல இருந்து பத்தாவது முறையா அந்த கால் வந்தது..."மேனேஜர்". அவனோட கை நடுங்க ஆரம்பிச்சது. கால எடுத்தான்.
"சார்......சார்..... வெரி சாரி சார்....ப்ளீஸ்... ஃபர்கிவ் மீ!" கெஞ்சினான்.
அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு "சார் ! ஐ வில் பீ தேர் இன் 5 மினிட்ஸ்" னு போன வச்சிட்டான். பதட்டமா வண்டிகிட்ட போய் ஸ்டார்ட் பண்ணிட்டு நேரா வண்டிய ஆபீஸ்க்கு விட்டான்.