Loading...

Articles.

Enjoy your read!

கதைக்காடு!

கதை. “ ஓ  கதையைப் பற்றிய கட்டுரையா ? ” இல்லை கதையைப் பற்றிய கதை. “ கட்டுரை இல்லையா ? “ கட்டுரையும்தான், எது தான் கதை இல்லை.

தமிழ் சிறுகதைஉலகம், தன் சகல வாளிப்பையும் இழுத்துப் போர்த்திக்கொண்டு ஓயாது நுரைக்கும் கடலாய்க் கிடக்கும் தவறை ஒருபோதும் செய்ததில்லை. மாறாக, தமிழ் சிறுகதைஉலகம் ஒரு காடு. தனது அனைத்து ஏற்ற இறக்கங்களையும் வளைவுகளையும் கறவாது அள்ளி இறைத்து நிச்சலனமாய் நிற்கும் காடுதான் தமிழ் சிறுகதைஉலகம். மேகத்திற்கு டாட்டா காட்டிநிற்கும் நீர்மருதும், வேர்க்கை கோர்த்து நிற்கும் மலைவேம்பு ஜோடியும், உருகும் ஐஸ்க்குச்சியாய் நிற்கும் சவுக்கும்,உருகாமல் நிற்கும் கருவாகையும், இழந்த  இலைகளை அரவணைக்க வளைந்து நிற்கும் சாரகொன்னையும், அவற்றை இலாவகமாகத் தன்  குடைக்குள் அடக்கும் நோனியுமாய் வேற்றுமையின் ஓரங்கநாடகமே காடு. அந்தக் காடுதான் தமிழ் சிறுகதைஉலகம்.அந்தக் காட்டிற்குள் இழுத்துச் செல்லும் ஒற்றையடிப்பாதையின் ஒரு கீற்று இந்தக் கட்டுரை; வழிநெடுக வரும் மரங்கள் சிலவற்றை ஸ்பரிசிக்க இந்தப் பாதை உதவும் என்ற சபலத்தின் சாட்சிதான் கீழுள்ள அனைத்தும்.

தமிழ் சிறுகதைக்கு இதுதான் தொடக்கப்புள்ளி என்று வரையறுத்துவிட முடியாது காட்டைப் போலதான்; எனக்குத் தெரிந்த புள்ளியிலிருந்து தொடங்குகிறேன். 
தமிழ் சிறுகதை உலகில் கருத்து மட்டுமே உயிர்நாடியாய் துடிக்கும் இடங்கள் பல.
இந்த வித கதைகள் நம் காலத்திற்குச் சற்று முந்தையது. மு.வ வின் கதைகளே இதற்கு அடையாளமாய், மாணாக்கரின் பாடப்புத்தகங்களில் அரைநூற்றாண்டுக்கு மேலும் வாழ்ந்து வருகிறது. மு.வ வின் “ கட்டாயம் வேண்டும் “  “ தேங்காய்த் துண்டுகள் “ போன்ற கதைகளே இதற்கு ஆதாரம். இந்த வித கதைகள் முழுக்க முழுக்க அறத்தைச் சார்ந்தே புனையப்படுபவை; புனையப்படுபவை என்பதை விட அறிவுறுத்தப்படுபவை என்பதே பொருந்தும். இவ்வித கதைகள் இந்தக் காலத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று எதுவும் கிடையாது. இது பாடப்புத்தகங்களில் கதைகளைப் பாடமாக வைக்கும் வழக்கம் இருக்கும் வரை அதன் பக்கங்களை நிரப்ப நிர்பந்திக்கப் பட்ட கதைகள். அச்சில் பதியும் வல்லமை கொண்ட இக்கதைகள் அவ்வளவாக மனத்தில் பதிவதில்லை. பெரும்பாலும் இவ்வித கதைகள் ஒரே வரியில் அதன் சாரத்தைச் சொல்லும்படியாக எழுதப்படுபவை. அந்த ஒரு வரி அக்கதையின் ஏனைய வரிகளை விஞ்ச முற்பட்டு அதிலேயே கரைந்து கலைந்த கதைகள் சில. ஆனால் அந்த ஒருவரி ஏனைய வரிகளை விஞ்சி நிற்கும் கதைகள் பல. இதற்கு அடையாளமாக நிற்பது ஜெயகாந்தனின் கதைகள். இப்பாணியில் எழுதப்படும் கதைகள் அதன் கதாபாத்திரத்திற்கோ அழகியலிற்கோ முடிசூட்டுவதில்லை. இவ்வித கதைகள் இறுதியில் வரும் ஒரே ஒரு வரிக்காக மட்டுமே எழுதப்படுபவை. ஜெயகாந்தனின் “ சட்டை “ , “ பாவம் பக்தர் தானே  “,  “ தவறுகள் குற்றங்கள் அல்ல ”, “ புதிய வார்ப்புகள் “ போன்ற கதைகளின் தலைப்பும் கதாபாத்திரங்களும் அவற்றின் சுபாவமும் கதைச்சூழலும் அதன் காலமும் மறதிக்கு உட்படுத்தப்படுபவை, அதில் எந்தவித மறுப்பும் இருக்கமுடியாது. ஆனால் “ இந்த உடம்பே ஒரு சட்டைதானே அதற்கு மேல் எந்தச் சட்டையைப் போட்டால் என்ன ? ” என்ற ஜெயகாந்தனின் ஒற்றை வரி பேனா கீரல் மட்டும் மனத்தில் என்றுமே வடுவாய் இழையோடி நிற்கும். ஜெயகாந்தனின் கதைகளைத் தாண்டி இப்பாணியில் எழுதப்படும் கதைகள் பல, ஒரு கட்டத்தில் தமிழ் சிறுகதைகள்  இப்பாணியில் மட்டுமே எழுதப்படுகின்றன என்று சொல்லும் அளவிற்குச் சிறுகதைகள் தெவிட்டுகின்றன. பிரபஞ்சனின் “ மரி என்னும் ஆட்டுக்குட்டி “, “ ஒரு மனுசி “, “ பசி ”, “ இரண்டாயிரம்  வருடத்து மனிதர்கள் “ .  சிவசங்கரியின் “ வெளிச்சம் வெளியே இல்லை “, “ புளியந்தளிர் ” , “ வெள்ளிக்கிழமை அவள் செத்துப்போனாள் “, சூடாமணியின் “ செந்திரு ஆகிவிட்டாள் “ , “ உதயப் படிவம் ” , “ அடிக்கடி வருகிறான் “ போன்ற பிற எழுத்தாளர்களின் கதைகளே இப்பாணியின் பெரும்பங்கை வகிக்கிறது. இக்கதைகள் இக்காட்டின் நெல்லிமரங்கள், இதன் இலைகளும் பூக்களும் பிரம்மாண்டமும் மறதிக்கு உட்பட்டவை, ஆனால், இதன் புளிப்பு இந்தக் காட்டைக்  கடந்தும் நம்முள் ஏதோ ஒரு மூலையில் என்றுமே எஞ்சி, அம்மரங்களுக்குச் சாட்சி சொல்லும். 

 

தமிழ் சிறுகதைகளில் வேறொரு நிகழ்வை மேற்கோள் காட்டியோ அல்லது வேறொரு நிகழ்வை ஆதாரமாக வைத்தோ புனையப்படும் கதைகள் வானமாகப் பெரும்பங்கை வகிக்கவில்லை என்றாலும் நட்சத்திரங்களாய்த் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஜெயகாந்தனின் “ அக்னிப்பிரவேசம் “ அதற்குக் கலங்கரைவிளக்கமாக நின்றிருக்கிறது. தமிழ் வாசக உலகத்தையே உலுக்கிய கதை அக்னிப்பிரவேசம், அது அக்கதையை ஜெயகாந்தன் கையாண்ட விதத்தால் விளைந்தது. இராமாயணத்தின் சிக்கலான ஒரு நிகழ்வை ஆதாரமாக வைத்து அந்நிகழ்வே நிராதாரமாக, ஜெயகாந்தன் மீட்டிய சிறுகதை. இதே போன்று ஜெயகாந்தன் எழுதிய “ சீசர் “ , சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்ற உண்மை சம்பவத்தின் பொருளை நேர்மாறாக வரும்படி புனைந்தது அவரது  திறன். புதுமைப்பித்தனின் “ அகல்யை “ அய்க்கனின்  “ ஓர் அகலிகையின் மகள் “ என கதையின் மூலநிகழ்வை நிர்மூலமாக்க எழுதிய கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொழில்கிறது. இவற்றைத் தவிர மேற்கோளை எதிர்க்காமல்   விஸ்தரிக்கும் கதைகளும் உண்டு, புதுமைப்பித்தனின்  “ அன்று இரவு “ ஜெயமோகனின் “ தம்பி ” , “ ஓலைச்சிலுவை “ , “ நற்றுணை “ போன்ற கதைகள் இதற்குள் அடக்கம். பெரும்பாலும் மேற்கோளே இக்கதைகளுக்குத்  தலைப்பாக அமைதலாதலால், எப்பொழுதும் பின்தொடரும் நிலவாக காட்டின் எல்லா மூலைகளுக்கும் தொடர்ந்து வரும் மேட்டில் வேரூன்றிய சாமன் மரத்தை போன்றவை இக்கதைகள். அதன் தலை(தலைப்பு) அதன் கிளைகளுக்கும் வேர்களுக்கும் அத்தாட்சி.  

தமிழ் சிறுகதைகளில் எழுத்தாளன் ஓர்  உணர்வை வாசகனுக்குக் கடத்தற்பொருட்டு எழுதிய கதைகள் ஏராளம். “ கடை விரித்தேன் கொள்ளவாரில்லை “ என்பதற்கேற்ப, அவற்றைக் கொண்டாடக்கூடிய வாசகர்கள் ஏராளம் இல்லை. உணர்வை கடத்தக்கூடிய கதைகளை வாசிப்பது நம்மையே பந்தயமாக வைத்து விளையாடக்கூடிய தாயவிளையாட்டு, அதில் வாசகனால் ஒரு முறைகூட ஜெயித்துவிட இயலாது, இக்கதை எழுத்தாளர்களின் தாயம் ஒரு போதும் அவர்களை மீறுவதில்லை. பவா செல்லதுரையின் கதைகள் இதில் பெரும்பங்கை வகிக்குறது “ சத்ரு “ , “ வலி “,  “ ஏழுமலை ஜமா “ “ வேட்டை “, “ மண்டித்தெரு பரோட்டா சால்னா “. கி.ரா வின்  “ கதவு “. சுந்தர இராமசாமியின்  “ விகாசம் “. ஜெயமோகனின்  “ நூறு நாற்காலிகள் “, “ பெருவலி “, “ பிறசண்டு “. கோணங்கியின்  “ கருப்பு ரயில் “, அசோகமித்திரனின் “ புலிக்கலைஞன்  “. போகன் சங்கரின் “ மீட்பு “, வேல ராமமூர்த்தியின்  “ கோட்டைக் கிணறு ”, “ இருளப்பசாமியும் 21 கிடாயும் “. கண்களைக் கிடுக்கிக்கொண்டு அதற்கே நம்மை முழுமையாகச்  சரண்கொடுத்து அதன் போக்கிலே கடந்து செல்லும் முட்புதர்கள் இக்கதைகள்; இந்தக் காட்டை நாம் கடந்து, இந்தக் காடே அழிந்தாலும் கூட இக்கதைகளின் தடயங்களை நாம் இறுதிவரை சுமந்தாக வேண்டும்.


தமிழ் சிறுகதைஉலகின் விஸ்தாரத்தை மற்றையவரிடம் பிரஸ்தாபிக்க நான் கையில் எடுக்கும்  பிரம்மாஸ்திரம் கீழுள்ள கதைகள், பிரம்மாஸ்திரத்தை முதலிலேயே எடுத்துவிட முடியாது. ஏனைய அஸ்திரமும் பலனிழந்த பின் எடுப்பதே உசிதம். ஏனைய அஸ்திரத்திற்கும் இதற்கும் வித்தியாசம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை; ஜெபிக்கும் சொற்களைத் தவிற. இவ்வித கதைகளுக்கும் ஏனைய கதைகளுக்கும் இடையே கோடுகிழிக்கும் வித்தியாசமும் அதே சொற்கள்தான்; சொற்கள் மட்டும்தான். சொற்கள் மட்டும்தான் இக்கதைகளே. எந்தவித ஸ்தூல பற்றுக்கோளும் இன்றி  அனாயசமாகக் காலோடு மட்டுமே உறவாடித் திரியும் காய்வெடிப் பஞ்சாய் எழுத்தாளன் திரிகையில் மட்டுமே இக்கதைகள் பிறக்கின்றன. இவ்வித கதைகளில் பெரும்பங்கை வகிப்பது லா.ச.ரா வின் கதைகள்தான். “அபஸ்வரம் “ , “ அபூர்வ ராகம் “ , “ பச்சைக்கனவு ”, “ தாக்ஷயணி “. எஸ்.ராமகிருஷ்ணனின் “ புத்தனின் கார்ட்டூன் மொழி “, “ கடவுளின் குரலில் பேசி “ ,  “ புலனி “ , “ ஆதாமின் பாஷை “, “ கல்யாணி  இருந்த வீடு “. ஜெயமோகனின் 
 “ நாகம் “.  இக்கதைகளை அவற்றின் கடைசி வார்த்தைவரை வாசித்தும், அதில் என்ன வாசித்தோம் என்பதை அறியவிடாமல் நம்மை சூன்யத்தில் ஆழ்த்துவதே இக்கதைகளின் குறியீடு. இவற்றைத் தவிற, கதையின் கருத்தை அக்கதையில் வரும் பாத்திரம் விஞ்சி நிற்கும் வகையில் புனைவது வேறு விதம். அம்பையின் கதைகள் இதில் பெரும்பங்கு வகிக்கிறது, “ அம்மா ஒரு கொலை செய்தாள்  “, “வாகனம் “ , “ பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்.. “ , “ வாமனன் “.   “ அம்மா ஒரு கொலை செய்தாள்  “ கதையின் கத்திரிப்பூ ஸாடின் பாவாடை அக்கதையின் கதாபாத்திரங்களையும், கருத்தையும் உதாசீனத்திற்கு உட்படுத்துகிறது. இவ்வித கதைகள் இக்காட்டின் மரங்களல்ல; இவை இக்காட்டின் பச்சைவீச்சம்.இவை இக்காட்டின்  ஸ்தூலரூபமல்ல; சூக்ஷமம் மட்டும்தான்.  அசூன்யமாய் சூன்யத்தில் உறைந்து அலைகின்றன.

இக்காட்டில் ஒற்றையடிப்பாதையின் ஒருகீற்றில் நான்கு அடிகளுக்குள்ளாகவே  இக்காட்டு மரங்களின் வேர்களும் கொடிகளும் என் உடல்முழுக்கப் படர்ந்து கனத்து உள்ளிழுக்கிறது. வாசகர்களே, இனிமேலும் என்னால் உங்களுடன் வரஇயலாது, செல்லுங்கள் இக்காடு விரித்திருக்கும் பச்சைக் கம்பளத்தில் நடந்து செல்லுங்கள்.
வழியிலே ஹாஸ்யத்துடன் கைகாட்டும் கருவாகையிடமோ பூவரசனிடமோ வாதுமையிடமோ இலந்தையிடமோ தூங்குவாகையிடமோ உங்களைச்  சமர்ப்பித்து அவற்றின் வேர்கள் உங்களைச் சுவீகரித்துத் தனக்குள் ஒரு அங்கமாக்க அனுமதியுங்கள். அது ஒன்றுதான் இக்காட்டை விட்டு வெளியேறும் வழி. சென்றுவாருங்கள் வாசகர்களே!

Tagged in : Kavidhai, life, FICTION, Sirukadhai, Short stories, Books,

   

Similar Articles.