Loading...

Articles.

Enjoy your read!

கோவிட் - 19 அத்தியாயம்-1

இந்நோய் ஒ‌ன்றரை ஆ‌ண்டுகளாக இவ்வுலகில் உலாவருகிறது. ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாம் அத்தியாயத்தில் நாம் பார்க்க இருக்கும் கதை, பன்னிரெண்டாம் வகுப்புப் பயிலும் ஜேம்ஸின் கதை. வீட்டிற்கு ஒரே மகன் ஜேம்ஸ். பல குழந்தைகளைப் போல, கனவுகளைச் சுமந்து தனது வாழ்க்கையில் பயணிக்கிறான்.

நன்றாகப் படித்து இந்தியாவின் முதன்மை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கணினி பொறியியல் கற்க வேண்டும் என்பது அவனது கனவு. நுழைவுத்தேர்வுக்கு ஒன்பதாம் வகுப்பிலிருந்து தயாராகிறான். பதினொன்றாம் வகுப்புவரை பயிற்சி நன்றாகச் சென்றது. பன்னிரெண்டாம் வகுப்பில் வீட்டில் இருந்து படிக்க பிடிக்கவில்லை. அவனது தாத்தா முதலாம் அலையில் இயற்கை எய்தினார். ஆசை ஆசையாய் அவன் கேட்கும் பாடல்களைப் பாடியவர்,  அவன் ரசிக்கும் நகைச்சுவையில் நடித்தவர்,  அவனுக்கு மிகவும் பிடித்த இயக்குநர்நெருங்கியவர்கள் எனப்பலரும் உயிர் நீத்தனர். மிகவும் மனமுடைந்த நிலையில் வகுப்புகளைக் கவனிக்கிறான். பாடங்களும் முழுமையாகப் புரியவில்லை. அவனது நண்பர்கள், பாடம் சம்பந்தப்பட்டக் கேள்விகளைக் கேட்டால், " டேய் சும்மா இர்ரா,  நானே நொந்து போயிருக்கேன்" என்று கூறி அழைப்பை அனைத்துவிடுவான்.

" கோவிட்-19யின் இரண்டாம் அலையின் தாக்கம் மிகுதியாகவே இருக்கும், அனைவரும் வீட்டில் இருங்க" என ஊர் முழுவதும் தண்டோரா. அவன் பெற்றோர் அவனுக்குக் கல்விக் கட்டணம் செலுத்தவும், குடும்பச் செலவுக்காகவும் வேலைக்குச் சென்றே ஆகவேண்டும். சில நாட்களுக்குப் பிறகு ஜேம்ஸின் தாய்க்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். ஜேம்ஸிற்கு மிகுந்த கவலை. இவ்வளவு நாட்களுக்கு அவன் தாயை விட்டுப் பிரிந்து இருந்தது இல்லை. ஒரு பக்கம் சோகம், மறு பக்கம் இயற்பியல் இரண்டாம் பாகம். கணக்கு வகுப்பில் கணக்காசிரியர் ஒரு கேள்வி கேட்டார். (இந்த ஆசிரியர் நன்றாகக் கற்றுத்தருபவர், இன்னும் ஓராண்டில் ஓய்வு பெறப் போகிறார். கரும்பலகைக்கு முன் இருக்கும் அவரது வீரம், கணினி முன் தென்படவில்லை. இருப்பினும் இயன்றவரை கணினி முன் அமர்ந்து, ஆராய்ந்து ஓராண்டு காலமாக மாணாக்கர்களுக்கு இல்லத்திலிருந்தே கற்பித்து வருகிறார்). ஜேம்ஸிற்குப் பதில் தெரியும் , இருப்பினும் அவன் பதிலைக் கூறாமல் ஆவேசப்பட்டு ஆசிரியரிடம் கோபப்பட்டான். கண்ணீர் வடித்து வகுப்பில் கவலைகளைக் கூறினான், ஜேம்ஸ். அவனது ஆசிரியர் எதுவும் கூறவில்லை. வகுப்பை முடித்தார்.

ஜேம்ஸ் தன் தந்தையிடம், " நான் இன்று அம்மாவைப் பார்க்க வரலாமா? " என்று வினவினான். கண்ணாடி முன் தலைவாரிக்கொண்டு, "உன்னை உள்ளே விடுவார்களா எனத் தெரியவில்லை, இது சாதாரணமான காலம் இல்லை ஜேம்ஸ்" என்றார் தந்தை. ஜேம்ஸின் முகம் இன்னும் வாடியது. " சரி வாப்போகலாம். நம்மைச் சுற்றி என்னவெல்லாம் நடக்குதுன்னுப் பார்", என்றார் தந்தை. அவர்கள் முகக்கவசம் அணிந்து, உணவை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்.

மருத்துவமனைக்கு 500மீட்டர் தொலைவில் நோயாளர் ஊர்தி நோயாளிகளுடன் நின்று கொண்டிருந்தது. ஜேம்ஸ் நினைத்தான், சென்ற ஆண்டு இந்தக் கூட்டம் தண்ணீர்(மது) வாங்க காத்திருந்தது, தற்பொழுது உயிர்வெளி(ஆக்ஸிசன்) கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறது. "இத பாத்தியா, அம்மாவுக்குப் பெட் கிடைச்சது பெரிய விஷயம்", என்றார் ஜேம்ஸின் தந்தை. வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்கள், ஜேம்ஸை அனுமதிக்கவில்லை. அவனது தந்தையும் பார்க்க இயலாது என்று கூறியதால் , உணவை நர்ஸிடம் குடுத்துவிட்டு, திரும்பி வந்தார். மனமுடைந்த ஜேம்ஸ் தனது வாகனத்திற்குச் செல்லலாம் என நடந்தான். எங்குப் பார்த்தாலும் பந்தலில் நோயாளிகள், நோயாளி ஊர்தியின் ஒலி. அவன் நடந்து செல்லும்போது ஒரு பெரிய மனிதர், கண்ணாடி அணிந்திருந்தார் கண்கள் சிவந்து, ஆழ்ந்த சோகத்துடன் இவர்களது வாகனத்திற்கு அருகில் நிற்கிறார். முகக்கவசம் அணிந்ததால் யார் எனத் தெரியவில்லை. ஜேம்ஸ் வாகனத்திற்கு அருகில் சென்றவுடன் , அங்கு நிற்பவர் தன் கணக்காசிரியர் என்றறிந்தான்.

"சார், நீங்க இங்க என்ன சார் பண்றீங்க?" என்று ஆசிரியரை நோக்கி வினவினான் ஜேம்ஸ். தனது கண்ணாடியை அகற்றி கண்ணீரைத் துடைத்தார் ஆசிரியர். "மனைவிக்குத் திடீரென மூச்சுத் திணறல், இந்த மருத்துவமனையில பெட் கிடைச்சிருச்சு, ஆனால் ஆக்ஸிஜன் தான் இல்லன்னு சொல்றாங்க பா", என்றார் ஆசிரியர். "என்னை மன்னித்து விடுங்க சார்", என்றான் ஜேம்ஸ். "இதெல்லாம் எப்ப சார் முடியும்? " என்று கேட்டான் ஜேம்ஸ். ஆசிரியர், பெரு மூச்சுவிட்டு வானத்தைப் பார்த்தார், அவரது கண்ணத்தில் ஒரு துளி மழைநீர், இருவரும் அருகிலுள்ள கூடாரத்திற்குச் சென்றார்கள். "ஜேம்ஸ் போகலாமா? " , என்று தந்தை கேட்டார். "அப்பா இவர் தான் என் கணக்காசிரியர்", என்றான் ஜேம்ஸ். " ! வணக்கம் சார்", என்றார் தந்தை. பிறகு, ஜேம்ஸின் தந்தை, கணக்காசிரியரின் மனைவிக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்தார். "ரொம்ப நன்றிங்க சார்", என்றார் ஆசிரியர். "நாங்க புறப்படுறோம் சார், உங்க உடலையும் பாத்துக்குங்க! கவலைப்படாதீங்க மனைவி விரைவில் குணமாகிறுவாங்க" என்றார் தந்தை. "ஜேம்ஸ் நீயும் வெளிய சுத்தாத, உங்க அப்பா சொல்றத கேளு, ஒழுங்கா படி, நாளைக்கு வகுப்பில் பாப்போம்", என்று கூறினார் ஆசிரியர். "கண்டிப்பா சார், நாங்க கிளம்புறோம்", என்றான் ஜேம்ஸ். இருவரும் வீட்டிற்கு வந்தனர். தனக்கு மட்டும் துன்பம் இல்லை, தன்னைச் சுற்றியுள்ள பலரும் இத்துன்பப்படகில் மிதந்து கொண்டிருக்கிறார்கள், என எண்ணினான் ஜேம்ஸ்.

ஜேம்ஸின் தாய் மற்றும் ஆசிரியரின் மனைவி இல்லத்திற்குத் திரும்பினார்களா? தெரியவில்லை. இக்கதை, கோடியில் ஒரு சிறுதுளி ஆகவே திகழ்கிறது. இந்நோய் எங்கிருந்துத் தோன்றியதோ? எவ்வாறு பரவியதோ? தெரியவில்லை, ஆனால் இது மக்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறது. என் குழந்தை இத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், இந்த வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற தாய்மார்களின் எண்ணம் மறைந்து, நான் உயிரோடு இருக்கும் வரை, எனது குழந்தை என்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடையே பரவியுள்ளது. ஆனால் மனிதம் இன்னும் விழவில்லை என நம்புகிறேன். இக்கஷ்ட காலங்களிலும் உதவி தேவைப்பட்டோருக்கு உதவி செய்த நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

இதுவும் கடந்து போகும். தற்பொழுது அனைவரும் செய்ய வேண்டியது, வீட்டில் அடைவதே. "எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி பெருகும், உனக்கும் கீழே உள்ளவர் கோடி ,நினைத்துப் பாரு, நிம்மதி நாடு". உலா வர விடுமுறை அல்ல, உயிர் வாழவே விடுமுறை.

கோவிட்- 19ஆல் உயிர் நீத்த நமது நண்பர்களுக்கு இது சமர்ப்பணம். பாதுகாப்பாக இருங்கள் , நன்றி. வாழ்க நம்நாடு, வாழ்க நம் மக்கள்.

Tagged in : covid, STAY SAFE, STAY HOME,

   

Similar Articles.