Loading...

Articles.

Enjoy your read!

கஜா புயல் - உதவுவது எப்படி?

கஜா...

கடந்த ஒரு வாரமாக தமிழக நாளிதழ்களின் தலைப்பு செய்தி மட்டுமல்ல, பல குடும்பங்களின் தலையெழுத்தையும் புரட்டி போட்டது.

சேதங்களைப்  பார்த்து மனம் கரையும் நம் ஒவ்வொருவருக்கும் கல்லூரி மாணவராய்  நாம் எப்படி பங்களிப்பது எனத் தோன்றலாம்.

1. பருவத்தேர்வுகள் முடிந்த நிலையில் நம்மில் பலரும் விடுமுறையில் தான் இருப்போம்.பாதிக்கப்பட்ட இடங்கள் நம் ஊரோ அல்லது நம் ஊரின் பக்கத்தில் உள்ள கிராமமாகவோ இருக்கும் பட்சத்தில் அரசு மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் செய்யும் மீட்புப்பணிகளில் நாமும் நம் பங்களிப்பை தரலாம்.பலர் ஒரு வேலையை செய்யும் பொழுது துரிதமான முறையில் அது செய்து முடிக்கப்படும்.

2. சீரமைப்பு பணிகள் நடப்பது பெரும்பாலும் பிரதான இடங்களில் மட்டுமே.கிராமங்களுக்கு அந்த உதவி பெரும்பாலும் போய்  சேர்வதில்லை.மீட்புப்பணிகளில் ஈடுபடும் குழுக்களுக்கு பாதிக்கப்பட்ட கிராமங்களை பற்றிய செய்தியைக் கொண்டு சேர்ப்பது நம் கடமையே.புயலால் பாதிக்கப்பட்டு இதுவரை எந்த வித உதவியும் கிடைத்திராத கிராமங்கள் நமக்கு தெரியுமானால் அதை பற்றிய செய்தியை உரிய விவரங்களுடன் நமக்கு தெரிந்த அரசு சாரா தன்னார்வ அமைப்புகளைத் தொடர்புகொண்டு  சொல்லலாம்.

3. புயல்,வெள்ளம் போன்ற நேரங்களில் தனியே உதவ முயல்வதை விட அப்பணிகளில் ஈடுபடும் ஏதேனும் குழுவுடன் இணைந்து உதவ முயல்வதே சிறந்தது.எனவே அத்தகைய குழுக்களைக்  கண்டறிந்து இணைந்து கொள்ளலாமே.

4. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவைகள்

  • இருப்பிடம் - தற்காலிக கூரையாக தார்ப்பாய் (Tarpaulins)

  • தண்ணீர்

  • உணவு

  • உடை

  • மெழுகுவர்த்திகள்,கொசுவர்த்திகள்

  • அணையாடைகள் (Sanitary Napkins)

அவர்களிடம் இவற்றை கொண்டு சேர்க்க நம்மால் முடிந்தவற்றை செய்யலாம்.இவற்றை சந்தை  விலைக்கு அல்லது நன்கொடையாக கொடுக்க முன்வரும் கடைகளைத் தொடர்புகொண்டு மொத்த விலைக்கு வாங்கி தன்னார்வ அமைப்புகளுக்கோ, அரசின் மீட்புப்பணி  குழுக்களுக்கோ அனுப்பி வைக்கலாம்.

5. பல அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் இந்த பணியில் ஏற்கனவே ஈடுபட்டு கொண்டிருக்கின்றன.அவர்களின் மிக முக்கியமான தேவை  அப்பொருட்களை வாங்குவதற்கான தொகை. எனவே நம்மால் இயன்ற தொகையை நம் நண்பர்களிடம் உறவினர்களிடம் நன்கொடையாகப் பெற்று அந்நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

6. சரி பணமாக அனுப்புவதா அல்லது பொருளாக அனுப்புவதா?!

நான் தொடர்புகொண்ட ஒரு தன்னார்வ அமைப்பு நாம் பொருளாக அனுப்பும் பொழுது  அவற்றை ஒருங்கிணைப்பதை விட, பணமாக தரும்பொழுது தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி அனுப்பவும் அது மட்டுமின்றி மொத்தமாக வாங்கும்பொழுது அந்த கடைகளிலேயே போக்குவரத்து செலவுகளையும் பார்த்து கொள்வதாக கூறினார்கள். எனினும் உங்கள் மனத்திருப்திக்காக பொருளாக அனுப்பினாலும் வாங்கிக்கொள்கிறார்கள்.

7. யாரிடம் கொடுப்பது?

பலரின் கேள்வி இதுவே.

நான் முன் கூறியது போலவே அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் பல செயல்படுகின்றன.அவற்றை கண்டறிந்து அவர்களிடம் கொண்டு சேர்க்கலாம்.நான் செலுத்தும் நிதி கொண்டுசேர்க்கப்படுமா என்ற ஐயம் உடையவர்கள் அதை அரசிடமும் ஒப்படைக்கலாம். திரட்டிய நிதி மற்றும் பொருட்களை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செலுத்தலாம்.அதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

8. நான் செலுத்தும் நிதி கொண்டு சேர்க்கப்படுமா?

உங்களுடன் சேர்த்து எனக்கும் எழும் ஓர் ஐயம் தான்  இது.அதற்கு எவ்வித உத்தரவாதமும் நம்மால் தர இயலாது.நாம் நிதி கொடுத்தது அரசிடமோ அல்லது தன்னார்வ  நிறுவனத்திடமோ அதை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது அவர்கள் கையில் தான் உள்ளது.கொண்டு சேர்க்கப்படும் என்றே  சேவையை செய்வோம்.நாம் அளிக்கும் நூறு ரூபாயில் வாங்கப்படும் ஒரு சின்ன தீப்பட்டி கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு விலைமதிப்பற்றதுதான்.எனவே நம்மால் இயன்றதை நம்பிக்கையுடன் செய்வோம்.

"இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்"

                                               - அன்னை தெரசா

Tagged in : கஜா,

   

Similar Articles.