இன்றைய தினம் அன்று...
கோவில் மேசையில் பொருத்தப்பட்ட இசைக்கருவிகளின் சத்தம் என் செவிகளைப் பிளக்க, ஒரு நிமிடம் இந்தச் சத்தம் நிறுத்தப்பட்டுத் தொலைக்காட்சியில் படம் பார்க்க முடியுமா? என எண்ணிய தருணங்கள் பல!
தெருவெங்கும் ஒளிரும் சீரியல் பல்புகளும், வீடேங்கும் கட்டிய மாயிலை தோரணங்களும், கோவில் அருகில் விடப்பட்ட சிறு வேற்றிடமும் எம்மைப் போன்ற வானரக்கூட்டங்களை ஈர்க்க, நானோ வீட்டின் கதவை திறக்க, மெல்ல தவழ்ந்து சென்றேன். அம்மாவிடம் மாட்டி காதுகள் திருகியும் திருகாமையும், அவளிடம் பிடிபடாமல் ஓடி கோவிலில் அரங்கேற்றிய ஆரவாரங்களுக்கு இணைத்தான் உண்டோ..? அங்கிருக்கும் அப்பாவின் தோளில் ஏறி வீடு திரும்பிய நான் உண்ணவும் இல்லை, உறங்கவும் இல்லை! விரைந்தேன் என் அறைக்கு! மதில் எனக் கிடந்த என் துணிகளைக் களைத்தேன், புதிதும் பிடிக்கவில்லை, பிடித்தவைப் பொருந்தவில்லை! அம்மாவை அழைத்தேன், திட்டினாள்! இருப்பினும் ஓர் அழகிய புத்தாடையை என் கையில் வைத்தாள். நாளை அணியும் புத்தாடையின் கணவுகளில் தாயின் விரல் பிடித்தப்படி தூங்க துவங்கினேன்..!
பொழுதும் விடிந்தது! தூக்கமும் களைந்தது! வானொலி பெட்டிகள் இசைக்க நானும் விழித்தேன்! சோம்பல் முறித்து; குளித்து முடித்து; புத்தாடை உடுத்தி; தொடங்கிய ஓமத்தில் புகை இல்லாத இடம் பார்த்து பழைய செய்தித்தாள்களைத் தரையில் விரித்துப் புத்தாடைக் கறைப்படாது, ஓமத்தைப் பார்க்காமல் பிள்ளையார் பக்கம் சென்று அங்கு வைத்த சுண்டல், கொழுக்கட்டை , சக்கரப்பொங்கல், வாழைப்பழம், காட்டுக்கலகாய் அனைத்தயும் எடுத்து யாரிடமும் பிடிபடாமல் கோவில் பின்புறத்தில் உள்ள கூடாரத்தில் என் வானரக்கூட்டத்துடன் பங்கிட்டு உண்டு மகிழ்ந்தேன்! ஓமம் முடிந்தது! பக்தர்கள் களையும் நேரம், நெய் மணக்கும் கேசரி பிரசாதம். அடடா... என்ன சுவை..! அதையும் உண்டோம்!
உண்ட களைப்பு நீங்கவில்லை அதற்குள் பிள்ளையார் சிலை விற்பனை..! அடித்துப் பிடித்துச் சமயத்தில் மாமா, தாத்தா, அக்காவை இடித்துத்தள்ளி, மனையில் பிள்ளையாரை அமர்த்தி வரும் உற்சாகம். அது ஏனோ ஓர் இணைப்பிரியா ஆனந்தம்! பின், வீட்டில் படைத்த எல்லுருண்டை யாவும் மணக்க, உண்டதும் உறக்கம். விழித்தேன்! பொழுதும் சாய்ந்தது! மாட்டு வண்டியில் பூமாலைகள் கட்டப்பட்டு ராஜக்கலையில் எங்க ஊரு பிள்ளையாரு பவணி வர ஏற்பாடு முடிந்தது! வெடி வெடிக்க! மேளம் கொட்ட! ஊரார் மாட்டு வண்டியை இழுக்க, ஊரே விழாக்கோலம் பூண்டது! வீட்டுக்கு ஒருவர் அர்ச்சனை தர பிரசாதமாய் லட்டு கிடைத்ததே! உண்டு கொண்டே வண்டியை இழுத்தோம்! மணியோ பன்னிரண்டு! ஊர்வலமும் முடிந்தது! ஐந்து வகை பிரசாதம், பஞ்சாமிருத்தம், பாயாசம், கொழுக்கட்டை , மேலும் பல திண்பண்டங்கள். அனைத்தையும் வாங்கிப் பையில் வைத்து விரைந்தேன் வீட்டிற்கு. "அம்மா.....!" என்றேன் கதவை திறந்தாள்! கொண்டுவந்த அனைத்தயும் அவளிடம் தந்து உறக்கத்தில் தலையனையைத் தேடி சென்றேன். பொழுது விடிந்ததும் வானொலி ஆரவாரம் இல்லை, என் அன்னையின் அதட்டல் குரல் செவிகளைப் பிளந்தது.... மீண்டும் பள்ளிக்குச் செல்லும் ஆர்ப்பாட்டம்..! ஆனால், இன்று களையாத நினைவுகளைம் மனதில் கொண்டு, வரப்போகும் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கும் நான்.....