உலகைக் கலை எத்தனையோ வடிவில் இயக்கிக்கொண்டிருக்கிறது. அதில் இசையும் நடனமும் என் வாழ்வின் ஒரு பெரும் அங்கம். இசைக்கு மயங்காதவர் இந்த உலகில் உண்டோ? அத்தகைய இசைக்கு நானும் ஒரு அடிமை தான். பயணத்தின் போது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து நமக்கு பிடித்த இசையைக் கேட்டு ரசித்து மயங்கும் அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமோ? அந்த மயக்கத்தில் நம்மை அறியாமல் இசையின் மெட்டுக்கு நமது கையும் காலும் மகுடி இசைக்கு மயங்கி ஆடும் பாம்பு போல் ஆடுவதை தடுக்க தான் முடியுமோ? வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகின் போக்கில் சிக்கி நம்மை நாமே இழந்து கொண்டிருக்கும் போது, அனைவரும் நினைப்பது “இந்த உலகை விட்டு வேறு எங்காவது சென்று கொஞ்சம் நிம்மதியா இருக்கனும்” என்பது தான். அந்த சமயத்தில் ஹெட்போன்ஸ் அணிந்து இசையில் மூழ்கி வேறு உலகில் ஆடி மகிழ்ந்து சிறு குழந்தை போல் தன்னை அறியாமல் சிரித்து கவலைகளை மறப்பது யாருக்கு தான் பிடிக்காது? இசையை ரசிக்க மொழி தேவை இல்லை என்பதை டெஸ்பாஸிடோ உணர்த்தியதை தான் மறக்க முடியுமா? மயில் பார்ப்பதற்கு அழகு என்றாலும் மழை பெய்யும்போது அது மழையின் இசைக்கு மயங்கி தன் தோகையை விரித்து ஆடுவது பார்ப்பவர் கண்ணிற்கு விருந்தாவது போல இசை அழகாயினும் அதிலிருந்து பிறக்கும் நடனம் அதன் அழகை மென்மேலும் மெருகேற்றுகிறது. நடனம் என்றால் பரதம், குச்சுப்பிடி, வெஸ்டர்ன், பாங்க்ரா மட்டுமி ல்லை. தொலைக்காட்சியில் வரும் ஒரு பாடலுக்கு நம் வீட்டில் இருக்கும் வாண்டு கையை ஆட்டிக்கொண்டு குதிப்பது கூட நடனம் தான்!
நடனம் பார்க்க அழகாக இருக்க வேண்டியது அவசியமில்லை. மெட்டுக்கு ஏற்றபடி கை காலை அசைக்கும்போது நம்மை அறியாமல் உள்ளே தோன்றும் ஒரு உணர்வு நம் முகத்தில் ஒரு சிரிப்பை உண்டாக்குமென்றால் அதுவே நடனம்.“எனக்கு டான்ஸ் ஆட தெரியாது" என்று சொன்னவர்கள் கூட ரவுடிபேபிக்கு ஒரு குத்தாட்டம் போட்டிருப்பார்கள். பூமியே இந்த பிரபஞ்சத்தின் இசைக்கு தானே அசைந்து கொண்டிருக்கிறது!
இசை ஒரு மனிதனின் கற்பனையை வளர்த்துக்கொண்டே இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? காதலை வர்ணிக்க வார்த்தை இல்லை தான். ஆனால் அந்த காதலை இசையால் உணராதவர் இருக்க முடியுமா? முன்பே வா என் அன்பே வா நம்மில் எத்தனை பேரைக் கட்டி போட்டு மயக்கியது. ஒன்றா ரெண்டா சொல்லிக்கொண்டே போகலாம் இசையைப்பற்றி. மனிதன் வாழ்வில் இசையும் நடனமும் இல்லையேல் கொண்டாட்டம் ஏது? கொண்டாட்டம் இல்லையேல் வாழ்வேது?
காற்றின் மொழியே ஒரு அற்புதமான இசையல்லவா! உலகம் முழுதும் சுற்றித்திரியும் காற்று புல்லாங்குழலின் உள்சென்று இசையாக காதிற்கு சுவை அளிப்பதே மிகப்பெரிய அதிசயமல்லவா! நான் சமீபத்தில் என் குடும்பத்துடன் கேரளாவில் உள்ள மலம்புழா அணைக்கு சென்றிருந்தபோது கண்ட ஒரு காட்சி.....அங்கே இருந்த ரோப் காரில் பயணித்தபோது கீழே பார்த்தேன், அணையிலிருந்து பாய்ந்த தண்ணீர் சலசலத்துக்கொண்டு வளைந்து வளைந்து ஓடியது பார்ப்பதற்கு பரதம் ஆடும் பெண் வளைந்து ஆடுவது போல தோன்றியது! கீழே இருந்த மரங்களில் உள்ள பறவைகளின் பாடலுக்கு மரங்கள் ஆடியது என்னை மெய்சிலிர்க்க வைத்தது! இயற்கையில் இயற்கையாகவே இசையும் நடனமும் ஒன்றிணைந்துள்ளதை நாம் கவனிக்க தவறுகிறோம். மௌன மொழியை விரும்பி நான் அமர்ந்திருக்கும்போதுகூட காற்றில் வரும் கீதம் என் உள்ளத்தை மகரந்த காட்டில் துள்ளி குதிக்கும் மான்குட்டி போல மாற்றுகிறதே நான் என்ன செய்வேன்! அமுதும் தமிழும், அலையும் கடலும், தவமும் அருளும், வேரும் மரமும் போல இசையும் நானும்...