"என்ன வாழ்க்கைடா இது? எதற்கு நாம் பிறந்தோம்? ஏன் நமக்கு மட்டும் வாழ்க்கையில் இப்படி நடக்கிறது?"போன்ற
எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் வந்துகொண்டிருக்கும். ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள உயிரினங்களுக்கும்
உயிரற்ற பொருட்களும் வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கின்றது. சரி, வாழ்க்கை என்றால் என்ன?
என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் நமது செயல்கள் தான் வாழ்க்கை என்று கருதுகிறேன். நம் செயல்களால்
சிலருக்கு நன்மையும் சிலருக்கு தீமையும் உண்டாகின்றது. வாழ்க்கையை அறிஞர்கள் பலவித பொருட்களோடு
உவமைப்படுத்திக் கூறுவார்கள்.என்கற்பனைக் குதிரையைக் காற்றைவிட வேகமாகச் செலுத்தி ஒரு உவமையைக்
கண்டுபிடித்தேன். அது அறுசுவை உணவாகும். நம் வாழ்க்கையும் அறுசுவை உணவைப் போன்றதாகும். அதாவது நம்
வாழ்க்கையில் மகிழ்ச்சி (இனிப்பு), துன்பம் (கசப்பு,உவர்ப்பு), கோபம்(காரம்), வெறுப்பு(புளிப்பு), பயம்(துவர்ப்பு)
ஆகியவை ஏற்படுகின்றன.
நாம் எவ்வாறு அறுசுவை உணவை வெறுக்காமல் புறக்கணிக்காமல் உண்கிறோமோ, அதுபோன்று வாழ்க்கையின்
அனைத்துச் செயல்பாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ‘’துன்பத்திலிருந்து தான் இன்பம் பிறக்கின்றது;
கஷ்டத்தில் இருந்து தான் சுகம் பிறக்கின்றது’’ என்பது அறிஞர் வாக்கு. நம் வாழ்வில் ஒரு துன்பம் வருகிறது என்று
வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மன உறுதியாலும் விடாமுயற்சியாலும் அத்துன்பத்தை வெற்றிக் கொள்கிறீர்கள்.
பிறகு சில காலம் கழித்தோ ஆண்டுகள் கழித்தோ வேறொரு துன்பம் வருகிறது. இப்பொழுது நம் மனதில் முந்தைய
துன்பத்தினால் ஏற்பட்ட பக்குவம் இத்துன்பத்தையும் போக்குகின்றது. உங்கள் மனம் இன்பத்தாலும் சுகத்தாலும்
கட்டுண்டு இப்பொழுது கிடக்கின்றது. ஏனென்றால், அத்துன்பத்தை நீங்கள் வென்று விட்டீர்கள்.இரண்டு முறை நாம்
துன்பங்களை வென்று விட்டோம் என்ற மனநிறைவு நமக்குக் கிடைக்கின்றது. இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்து
கொள்ள வேண்டும். அதாவது, இன்பமும் துன்பமும் உடன் பிறந்த சகோதரர்கள் என்று நாம் உணர வேண்டும்.
‘’துன்பத்தில் இன்பம்,இன்பத்தில் துன்பம்,கடவுள் வகுத்த நியதி’’ என்று கவியரசு கண்ணதாசன் தன் பாடலில்
கூறியிருக்கிறார். ஆனால் நாம் இக்காலகட்டத்தில் கவரிமான் போன்று வாழ்ந்து வருகின்றோம். கவரிமான் மிகவும் அழகாக இருக்கும். ஆனால், தன் உடலிலிருந்து ஒரு உரோமம்(முடி) விழுந்தால் அது தன்னுயிரை நீத்துவிடும். நம் வாழ்வும் அழகாகத் தான் இருக்கின்றது. ஆனால், சிறு
துன்பம் வந்தாலும் மிகவும் மனமுடைந்து போய் விடுகிறோம்.
ஒருவருக்குத் துன்பம் வந்தால் அவருக்குத்தான் அந்த வலி தெரியும். ஆனால், நாம் மனம் உடைந்து போகக் கூடாது
என்பது என் பணிவான வேண்டுகோள். ‘’உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை’’ என்று மகாகவி
பாரதியார் முழங்கினார். ஆகையால், எத்தகைய துன்பங்களால் நம் வாழ்க்கை வீழுகின்றப் போதிலும், நாம் மலைப் போல்
உறுதியாய் இருக்க வேண்டும். முன்பு நாம் செய்யும் செயல்களே வாழ்க்கை என்று கூறியிருந்தேன். நாம் நல்ல
செயல்களைச் செய்தாலும் மனத்தால் நினைத்தாலும் நம் வாழ்வில் மகிழ்ச்சிப் பால் போல் பொங்கும்.
‘’வாழ்க்கை ஒரு விளையாட்டு-விளையாடி பாருங்கள்; வாழ்க்கை ஒரு போர்க்களம்-போராடி பாருங்கள்’’ என்பார்கள்.
நான் இதற்கு இணையாக ஒரு கருத்தைக் கூற விழைகிறேன்.‘’வாழ்க்கை ஒரு மாயாஜாலம்-அனுபவித்துப் பாருங்கள்’’
என்பதே. மாய மந்திரங்கள் நம்மை எவ்வாறு நிமிடத்திற்கு நிமிடம் ஆச்சரியப்பட வைக்கின்றதோ அதுபோலத்தான் நம்
வாழ்க்கையும் ஆகும். முன்பு வாழ்க்கையில் பல உணர்வுகள் ஏற்படும் என்றேன். இதில் பொறாமை என்னும்
உணர்வை நான் வெளிக்கொணரவில்லை. ஏனெனில், பொறாமை அதைச்சார்ந்தவரையே படுகுழிக்குள் தள்ளிவிடும்.
கோபம் சிறிது காலத்திலோ அல்லது வேறு முறைகளினாலோ சென்றுவிடும். ஆனால், பொறாமை கோபத்தை விட
மிகக் கொடியது. பாம்பின் நஞ்சுக்கு கூட மருந்து இருக்கின்றது; ஆனால், பொறாமை என்னும் நஞ்சுக்கு இதுவரை
மருந்து அறியப்படவில்லை.
சரி,வாழ்க்கையைப் பற்றி இவ்வளவு கூறினாயே, பிறகு ஏன் சிலர் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்?
இதற்கான காரணத்தை உன்னால் கூற முடியுமா? என்று உங்கள் மனதில் தோன்றும் கேள்வியினை என்னால்
உணர்ந்து கொள்ள முடிகின்றது.வாழ்க்கை வெறுத்து விட்டது என்று சிலர் புலம்புவார்கள்.நாமும் வாழ்க்கையும்
ஒன்றுதானே. நமது செயல்கள் தானே வாழ்க்கை. வாழ்க்கையை வெறுக்கிறோம் என்றால் அதற்கு நம் செயல்கள் தானே
காரணம். அதன் மீது பழி போட நமக்கு உரிமை இல்லை. சிலர் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டால், வாழ்வை
வெறுக்கிறார்கள். ஏன் வெறுக்க வேண்டும்? மனதில் உறுதியும் அசையாத இறைபக்தியும் நம்மை காக்கும் அல்லவா!
ஆனால் நாம் இதை உணர தவறுகிறோம். நாம் பார்த்த அனைத்து சரித்திர மனிதர்களும் வாழ்க்கையை நேசித்தார்கள்.
அவர்களும் பல துன்பங்களைக் கடந்து வந்தவர்கள்தான்.
இதைப்பற்றி விரிவாக இன்னும் கூறவேண்டுமானால் அதற்காக ஒரு புத்தகமே நாம் வெளியிடலாம். அவ்வளவு
பெரியது நம் வாழ்க்கை. ‘’வானத்தில் உள்ள நட்சத்திரங்களைக் கூட எண்ணிவிடலாம்; கடலில் உள்ள தண்ணீரையும்
அளந்து விடலாம்; ஆனால், நம் வாழ்வின் பக்கங்களை நம்மால் எண்ணவும் முடியாது; அளக்கவும் முடியாது. ஆகவே,
நம் வாழ்க்கையை மலைபோல் மிகப்பெரியதாக நினைத்து, வரும் துன்பங்களை எல்லாம் மடுவைப் போல் எண்ணி
அதை மிதித்து நாம் உயர வேண்டும்.’’
எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் இன்று நெறிமுறைப்படுத்தப்பட்ட
வாழ்க்கை நம் வாழ்க்கை. நாம் நிறைய புத்தகங்களை வாசிப்பதால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும். நம் வாழ்வில்
யார் நம்மை ஏமாற்றினாலும் பிரிந்து சென்றாலும் நம்முடைய புத்தகங்கள் நம்மைக்கைவிடா. நம் வள்ளுவப்
பெருந்தகை ‘’இடுக்கண்அழியாமை’’ என்னும் அதிகாரத்தில் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை எவ்வாறு களைய
வேண்டும் என்று எடுத்தியம்புகிறார்.வாழ்க்கையை ரசிப்போம், நேசிப்போம், ருசிப்போம் என்று இக்கருத்துக்களின்
வாயிலாக தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.’’எண்ணம் போல் வாழ்க்கை’’ஆகவே,
‘’ எண்ணங்கள் உயர்வாக இருக்கட்டும் !
வாழ்க்கை சிறப்பாக இருக்கட்டும் !!’’