அன்பு, பாசம், நட்பு, நன்னெறி, சகோதரத்தன்மை, கருணை இவை அனைத்திற்கும் பொருள் புதைந்த இக்காலத்தில் எதிர்பார்ப்பில்லாமல் இவற்றை நான் கண்ட இடத்தைப்பற்றிய கதை.
செயற்கை அருவிகளும், சூழும் வெண்புகையும் கொண்ட தீம்பார்க்-கள், மக்களைச் சோம்பல் படுத்தும் வசதி விடுதிகளும், நவீன திரையரங்கங்களும் மட்டுமே இன்று களிப்பூட்டும் கருவியாக இருக்கச் சுத்தமான காற்று, காற்றில் நஞ்சு இல்லை. சுவாசிக்கலாம் என்ற நம்பிக்கை, நல்லுறவு, உள்ளத்தெளிவு, எண்ணத்தில் எழுச்சி, நேர்மறை அலைகள் இவை அனைத்தும் என்னுள் களிப்பை ஏற்படுத்திய இடம், உதகமண்டல அடிவாரமான மேட்டுப்பாளயத்தில் இருந்து சுமார் 2 மணி நேரப் பயண தொலைவில் உள்ளது.
இயற்கையுடன் ஒன்றுவதாய் அக்னியில் இருந்து விலகிய எனக்குச் சில்லென்ற காற்றும் குறிஞ்சி நிலங்களுமே என்னவளை அடைய எனக்குத் துணையாக நின்றன. சுற்றிலும் என் குடும்பத்தினர் இருப்பிலும் என்னுள்ளம் தனிமையில் இயற்கையை ரசித்தது. நான் உயர உயர அடிவாரத்தில் இருக்கும் வீடுகளும் வாகனங்களும் சிறுத்ததைக் கண்டேன். தேயிலைத் தோட்டங்களும் யுகாலிப்டஸ் மரங்களும் போட்டியிட்டுக்கொண்டு என்னுள் தன் வாசனையைத் துளைத்தன. பூக்களின் வண்ண வடிவமைப்புகளும், பழ வடிவ உருவங்களும் கண்களுக்கு விருந்தளித்தன. கடிகார முட்கள் நகர, சூடான தேநீருடன் குந்தா எங்களை வரவேற்றது. குந்தாவிலிருந்து மைஞ்சூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது என்னிடம்.
மலையுச்சியில் இயற்கையாய் அமைந்த மேடை, புட்தரை, பல வண்ணப் பூக்கள், குளிர்ந்த வானிலை, மழைத் துளிகள், குகைக் கோவில், சிற்பங்கள், கொட்டும் அருவிகள், பாயும் ஓடைகள் மற்றும் அழகிய தமிழ் கடவுள் முருகன் கோவில், வரசித்தி விநாயகர் ஆலயம் இவை எல்லாம் அவ்விடத்தின் இரண்டாம் கட்டச் சிறப்பம்சங்களாய் இருக்க முதல் இடத்தைப் பிடித்தது மக்களின் அன்பு மட்டுமே. முகமறிந்தவர்களையும் மறுக்கும் இக்காலத்தில் முகமறியாதவர்களையும் வரவேற்றுக் கனிவாய் பேசி இன்முகம் காட்டும் குருமார்களும், கோவிலுக்கு வருபவர்களை மனமாற வாழ்த்தி இல்லத்திற்கு அழைத்துச்சென்று உணவளித்து, நல்லுரை போதிக்கும் அர்ச்சகர்களும் என்னை வியப்பில் ஆழ்த்தினர். வந்தவர்களிடம் முகம் சுழிக்காமல் சிரித்தபடி வரவேற்ற அவர்களின் விருந்தோம்பலை மிகக் கூற சொற்கள் குறைவு.
கண்களுடன் சென்ற எனக்குப் பார்வையளித்து மேற்கூறிய அம்சங்களை உடைய இடமான அன்னமலையே இக்கதையின் என்னவள்...