சொர்க்கத்தை அடைய இன்னுயிரைத் தியாகம் செய்ய வேண்டிய அவசியமேதுமில்லை. குழப்பமாக உள்ளதா?
தென்னிந்தியாவின் நுழைவு வாயில், வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைநகரம், அழகும் ஆற்றலும் நிறைந்த “ஆசியாவின் டெட்ராய்ட்டில்”(சென்னையில்) அமைந்துள்ளது இந்தச் சிவப்பு சொர்க்கம். ஆம், 227 ஆண்டுகள் பழமையும், பல மாமனிதர்களை உருவாக்கிய பெருமையும் கொண்ட எமது "கிண்டி பொறியியல் கல்லூரி"யே இந்த அடைமொழிக்கு உரியது.
மனமே .......
உன்னைக் காணாது காதல் கொண்டு
உன்னிடம் தஞ்சம் அடைந்தேன்
உன்னோடு சேர வாய்ப்பளித்த இறைவன்
30 நாட்களில் பறித்துக்கொண்டான்
மனதில் பல வருத்தங்களின் தேக்கம்
சேரும் நாள் குறித்த ஏக்கம்…
வளாகத்தின் தொடக்கத்திலுள்ள கம்பீரமான சிவப்பு கோபுரத்தைக் கண்டு மயங்காத மனிதன் இல்லை. இரவின் நிலவொளியில் தென்னிந்தியாவின் “தாஜ் மஹாலாய்” மின்னும் சிவப்பு கோபுரத்தைக் குருடனும் உணர்ந்து ரசிக்கின்றான்!!
நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுடன் இருக்கையில் துன்பங்கள் துரும்பாகவும் இன்பங்கள் இரும்பாகவும் மாறி அளவற்ற ஆனந்தத்தை அள்ளித்தருகின்றது. வகுப்பறையில் அமர்ந்து ஓராண்டு காலம் சென்றுவிட்டது. வகுப்பறையில் நாங்கள் என்பது “கலைக்களஞ்சியத்தில் ஒரு பூங்கா" போன்றது. வகுப்பறையைத் தாண்டி, பல சங்கங்கள் மற்றும் சமூகங்கள் மூலம் கிட்டும் மூத்த சகோதர சகோதரிகளின் நட்பு, நம் தமிழ்மொழியைப் போல அழியா வரம் பெற்றது.
நட்சத்திரங்களைக் கூட எண்ணிவிடலாம்; இந்நான்காண்டுகால ஆனந்தமும், கிடைக்கவிருக்கும் அனுபவமும் எண்ணிலடங்காதவை!!!
இயற்கை ஒரு கண்ணாடி; நாம் பல கழிவுகளால் அதை மூட, இன்று இயற்கை நம் முகத்தை மூடிவிட்டது. எந்த ஒரு பிரிவும் நிரந்தரமல்ல என்பது அறிஞர் வாக்கு. பல வண்ணங்களாய் தனித்து இருக்கும் நாம் விரைவில் வானவில்லாய் சிவப்பு சொர்க்கத்தில் ஒன்றிணைவோம்.
கதிரவன் அஸ்தமிப்பது, மீண்டும் உதிப்பதற்கே
இலைகள் உதிர்வது, மீண்டும் துளிர்வதற்கே
நீர் ஆவியாவது, மழை பொழிவதற்கே
நம் பிரிவும், விரைவில் புத்துணர்ச்சியுடன் சேர்வதற்கே!!!
சிவப்பு சொர்க்கத்தில் அனைவரின் சந்திப்பை நோக்கி.....