நீண்ட நாட்கள் கழித்து என்னை பாதித்த ஓர் இத்தாலிய சினிமா சினிமா பேரடிசோ ('Cinema Paradiso').
சிறுவயதில் நமக்குப் பிடித்த இடங்களை எண்ணிப்பார்த்தால் வரும் விளையாட்டு மைதானம், அங்காடி, பள்ளி முதலியவற்றோடு தானாகவே ஒட்டிக்கொண்டு வந்துவிடும் அவரவர் ஊர்களில் உள்ள சினிமா தியேட்டர்.
இக்கதையும் 'Cinema Paradiso' எனும் திரையரங்கைப் பற்றியது. மற்றும் அத்திரையரங்கில் பண்புறியும் சிறுவனான 'டோடோ'விற்கும் திரையரங்க உரிமையாளருமான 'ஆல்ப்ரடோ'விற்கும் நடுவில் உள்ள அழகான உறவைப் பற்றியது.
ஒரு மழை இரவில் வீட்டிற்கு வரும் ஓர் இத்தாலிய இயக்குனரிடம் அவரது மனைவி, ”உனது அம்மாதொலைப்பேசியில் பேசினார், யாரோ அல்ப்ரடோ என்பவர் இறந்துவிட்டார் என்ற.செய்தியை உன்னிடம் தெரிவிக்கும் படி கூறினார்” என்று கூறுகிறாள். அதன் பிறகு அந்த இரவு முழுவதும் அவர் தன் சிறுவயது நினைவுகளை எண்ணிப் பார்த்து நெகிழ்வதே மீதமுள்ள திரைப்படம்.
கனவு, காதல்,நேசம், பிரிவு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக அத்திரையரங்கம், அதிலுள்ள மனிதர்கள், அந்த இடத்தின் வாழ்வியல் தன்மைகள், திரையரங்கில் எச்சில் துப்புபவர், ஓயாமல் படத்தோடு சேர்ந்து கதைசெல்பவர், தூங்குபவர் என ஒரு இத்தாலிய பயணம் மேற்கொண்ட உணர்வை மனதிற்குள் அறுவடைசெய்கிறது இத்திரைப்படம்.
இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளைப் பதிவிடுகிறேன். ஆல்ப்ரடோ சிறுவயது டோடோவிடம் பல வசனங்கள் பேசிவிட்டு இது அந்த நடிகர் பேசியது எனக் குறிப்பிடுவார். ஆனால் இறுதியில் டோடோ விடைபெறும் பொழுது "வாழ்க்கை சினிமாவை போல் அல்ல அது கடினமானது, நீ உன்னைப் பற்றிப்பேசுவதை விட மற்றவர் உன்னைப் பற்றி பேசுவதையே விரும்புகிறேன்" என அல்பரதோ கூறுவார். "இதுயார் பேசிய வசனம் " என டோடோ கேட்கையில் "நான் தான் பேசினேன் " என அல்பரதோ கூறும் காட்சி நெருடலானது.
அடுத்து நீண்ட நாட்களாகக் காணாத தன் மகன்.டோடோவை காண்பதற்காக எம்பிராய்டரி செய்தபடி காத்திருப்பாள் அவனது தாய். அப்போது டோடோ வருவதை வெறும் காட்டசியாக காட்டிவிடாமல், எம்பிராய்டரிலிருந்து நூல் பிரிந்து கொண்டே சென்று ஒரு நிலையில் நூல் பிரிவது நின்றதும் அவள் டோடோவை காண்கிற காட்சி கவிதை.
இப்படத்திற்குப் பின்னணி இசையமைத்தவர் 'Ennio Morricone'. இவர் மற்றுமோர் இத்தாலிய உலகதிரைப்படமான The Good, Bad & The Ugly' படத்திற்கும் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி இசை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக எனக்கு அமைந்தது. தனியாக நடக்கையில், புத்தகம் படிக்கையில் எனத் தானாக மனது திரையிசையை ஒலியெழுப்பிக்கொண்டே இருந்தது.
'Guiseppe Tornatore' இயக்கி 1988இல் வெளிவந்த இப்படம், அந்த வருடத்திற்கான சிறந்த வெளிநாட்டுத்திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதையும், 'கேன்னஸ் திரைப்பட விழாவில் 'சிறந்த படத்திற்கானவிருதையும் வென்றது.
தமிழில் இதுபோன்ற படம் ஏதாவது வந்திருக்கின்றதா என ஆராய்ந்து பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நமது கிராமங்களில் மணலை ஓரிடத்தில் குவித்து நிலவோடு சேர்ந்து பனியோடு பனியாக, டென்ட கொட்டாயில் பார்த்த பல நினைவுகள், இங்குள்ள மனிதர்களின் மனதில் மட்டுமே படமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.