Loading...

Articles.

Enjoy your read!

அரிமா நோக்கு கூவம்


1700,

தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்

வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்

மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்

செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே

வாடைக் காற்றில் ஈசல் உதிர் இறக்கைகளிடையே காந்தார பஞ்சமம் பத்திச்சுருளாய் விரிந்து கரைய, ஆலமர்ந்தார் அடுத்த வரி பாடாமல் “கோலமே...” என்று ஸ்தாயை மாற்றி நடந்தார். திருமஞ்சன மண்டபத்தின் கடைசித் தூண் தாண்டுகையில் முடிந்தால் தான் ‘பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே’ குடத்துள் தண்ணீர் சுழிக்கும் ஓசையுடன் லயித்து அடங்கும் இருபது வருட நியமம்; திருமஞ்சன மண்டபத்தைத் தாண்டினால்தான் நெடிய பாம்பு போன்ற அதன் இருப்பு கண்ணில் படும். தலை ஓர்தேசம் வால் ஓர் தேசம் வைத்த சுழித்த சயனம்; அந்தச் சுழிப்பையே உணரமுடியாதபடி அதன் நீளம். யுகத்திற்கான இரையை உதரத்தில் தேக்கிய நிம்மதி, யாரையும் எதற்காகவும் எதிர்பாராது யாருக்காகவோ எதற்கோ தடையராத நித்ய கர்மம். சூரியஒளிக் கீற்றுகள் அதன் செதில்களில் பட்டுத் தெறித்துத் தெரிவிப்பது அதன் உயிரியகத்தை. ஆழ் மௌனத்தின் நிச்சலனம் அதன் விளைவான நித்யம் அதன் உபவிளைவாக அமலம். பருவாகியும் மாசில்லா பூரணம். அந்த மொத்த பிரவாகத்தின் காஷ்ய மௌனத்தைக் குலைப்பது ஆலமர்ந்தாரின் நிவதி. ஆலமர்ந்தார் நாணல்களை விலக்கி, குனிந்து கூவத்தின் மூன்று துளிகளைத் தன் தலையில் விட்டுக்கொண்டார். அவரது ஸ்பரிசத்திற்குக் காத்திருந்தது போல் கூவம் உயிர்பெற்று மீண்டது. ஆலமர்ந்தாரின் காலருகே கடுகாய் மீன்குஞ்சுகள் பொரிந்தன. கூவத்தின் மௌனம் கீழ்ஸ்வர மீட்டல்களாக மாறின. பேசியபடியே மேல்பரப்பிற்கு வரும் கெண்டை மீன்கள் தேடுவது எதை? மீண்டும் புதைகையில் கண்களில் அது கிடைக்காத மிரட்சி. ஆலமர்ந்தார் மிகுந்த கவனத்துடன் குடத்தில் நீர் நிரப்பினார். கூவம் பலமுறை சுழித்துத் தன்னை அதற்குள் நிரப்பிற்று. குடத்தைத் தலைமேல் வைத்தபடி திருவிற்கோலநாதரின் உஷக்காலப் பூஜைக்குக் கோவில் நோக்கி நடந்தார். தூரம் தெரியாமலிருக்க மீண்டும் திருப்பதிகத்தை எடுத்தார். மூன்றாவது முறை பாராயணம் முடிக்கையில் கோவில் வரும், இருபது வருட நியமம்; கூவ நீரல்லாத வேறு நீர் பட்டால் திருமேனியில் எறும்பு மொய்க்கும்; இது திருவிற்கோலநாதரின் அகால நியமம். ஆலமர்ந்தாரின் பாதம் படாமல் சூரிய ஒளி நிலத்திற்குக் குடைக் கவிழ்த்த படி நகர்ந்தது.

தோமஸ் பிட் கூவத்தின் குளிர்ந்த அரவணைப்பிற்குள் நிற்கிறார். தீவின் எதிர் விளிம்பில் எழும்பூர் ஆறு நுரைத்துச் செல்லும் என்ற எண்ணமே அவரைக் களிப்படையச் செய்தது. இங்கு நிற்கும் போது தோமஸ் பிட் உணர்வது இவ்விடத்தை மட்டும் தான், காலரேகையே இரு நதியாகி தன்னைச் சூழ்ந்து ஓடும் உணர்வு. அவர் காலருகே இந்தியாவின் தேம்ஸ் நதி அசைவின்றி நகர்ந்து கொண்டிருந்தது. அதன் நகர்வு, கண்ணிகள் அசையாது இழுத்துச்செல்லப்படும் ஒரு நீண்ட சங்கிலியின் நகர்வு, சிறகடிக்காமல் பறக்கும் பறவையின் நகர்வு. கூவம் தனது சப்பாத்துக்களைத் தாவிப் பிடிக்க அனுமதித்தபடி தாமஸ் பிட் நிற்கிறார். கடலின் அருகாமை உணர்ந்த மீன்கள் பரபரப்புடன் கரையில் மோதி நீந்தின. பிட் மெல்லத் திரும்புகையில் கோப்பையிலிருந்து சிந்திய வைன் துளிகளைக் கவனிக்காமல் நடந்து சென்றார். கூவத்துள் சிந்திய வைன் துளிகள் அடையாளமின்றிக் கூவத்துள் புதைந்து கரைந்தன.

திருவிற்கோலநாதர் திருமேனியில் ஏறிய ஒரு சிற்றெறும்பை யாரும் கவனித்திருக்க முடியாது.
 

Tagged in : history, chennai, COOVAM,

   

Similar Articles.