Loading...

Articles.

Enjoy your read!

அச்சு-1 எழுத்து

ஒரு மொழிக்கு என்னைப் பொருத்தவரை மூன்று முக்கியக் கட்டமைப்புகள் உள்ளன. உதாரணத்திற்குத் தமிழ் மொழி; “நான் காகிதத்தில் எழுதுகிறேன்”.

இதில் உள்ள “காகிதம்” என்ற சொல் “கா”, “கி”, “த”, “ம்” என்ற ஒலிகளால் ஆன சொல். இது தட்டையான வெள்ளையான எழுதப் பயன்படுகிற ஒரு பொருளைக் குறிக்கும். ஆனால் “காகிதம்” என்ற சொல் எந்த வகையிலும் காகிதத்தின் தோற்றக்குணங்களைக் குறிக்கவில்லை. அதாவது காகிதம் தட்டையாக உள்ளதால் இச்சொல் ஏனைய சொற்களைவிடத் தட்டையான ஒலியோடு சொல்லப்படுவதில்லை. ஆனால் “காகிதம்” என்ற சொல் காகித்தைக் குறிக்கிறது. இதுதான் முதல் கட்டுமானம்.

ஒரு சொல் எந்தவிதத்திலும் தான் விளக்கும் பொருளை ஒத்திருப்பதில்லை. மாறாக அச்சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் இடையே ஒரு மாறாத தொடர்பை ஏற்படுத்தி அப்பொருளைக் குறிக்கிறது. இத்தொடர்பே மானுடமொழிவழி தொடர்புக்கு ஆணிவேர்; இதுவே “காகிதம்” என்ற சொல்லைச் சொல்லாமல் எழுதினால் அப்பொழுதும் அது காகிதத்தைக் குறிக்கிறது. ஆனால் “கா” என்ற எழுத்திற்கும் “கா” என்று ஒலிக்கும் சொல்லுக்கும் எந்த ஒற்றுமையும் இராது. இதுதான் இரண்டாவது கட்டுமானம். எப்படி ஒரு சொல் பொருளோடு தொடர்புபடுத்தப்பட்டதோ அவ்வாறே ஒரு எழுத்தும் ஒரு சப்தத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் இக்கட்டமைப்பு ஆணிவேர் அல்ல; ஒர் உதாரணத்தோடு விளக்குகிறேன். தமிழ் தெரியாத ஒரு நபருக்குச் சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பைக் கற்பிக்காமல் தமிழின் 247 எழுத்துக்களை மட்டுமே கற்பிப்போமாயின் அவரால் “காகிதம்” என்ற சொல்லை எழுத முடியும். ஆனால் காகிதம் என்றால் என்னவென்று அவருக்குத் தெரியாது. ஏனெனில் அவர் கற்றது எழுத்துக்களை மட்டுமே. ஆகையால் இக்கட்டமைப்பு ஆணிவேரல்ல.

காகிதம்” என்ற சொல்லை மேலே உள்ள வாக்கியத்தில் அவ்வாறே எழுதியிருக்கலாம். ஆனால் ஏன் “காகிதத்தில்” என்று மாற்றவேண்டும்? இதுவே மூன்றாவது கட்டமைப்பு. ஒரு சொல் எவ்விடத்தில் எவ்வாறு உருப்பெறவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே இந்தக் கட்டமைப்பு.

இவ்விதம் விரிவாக இவற்றை விவரிப்பது ஏனெனில்? சற்று உற்று நோக்கினால், இக்கட்டுரையைப் படிக்கும்பொழுதே ஒவ்வொரு எழுத்திற்கும் இணையான சப்தம் அனிச்சையாகவே மூளையுள் ஒலிக்கும் (கேட்கும் திறனற்றவர்களுக்கு இது பொருந்தாது. ஏனெனில் அவர்களுக்கு இரண்டாம் கட்டமைப்புப் பொருளோடு இணைக்கப்படுகிறது). ஆகையால் இரண்டாம் கட்டமைப்பு அனிச்சையாகவே முதல் கட்டமைப்போடு இணைந்துவிடுகிறது. அவ்வாறு இணையும்பொழுது முதல் கட்டமைப்பின் மூலம் எழுதிய சொல்லின் பொருள் பெறப்படுகிறது. சுருக்கமாக இரண்டாம் கட்டமைப்புப் பெரும்பாலும் முதல் கட்டமைப்பின்றி இயங்கவியலாது. அப்பொழுது இரண்டாம் கட்டமைப்பின் அஃதாவது எழுத்தின் முக்கியத்துவம் என்ன? இரண்டாம் கட்டமைப்பு முதலாம் கட்டமைப்பை நிலைநிறுத்த, அதை சாசுவதமாக்க இன்றியமையாத ஒன்று.

உதாரணமாக நான் ஒரு சொல்லைச் சொல்கிறேன் என்றால் அது சொல்லியவுடன் மறைந்துவிடும், மனத்தில் பதிந்தாலும் அது ஸ்தூலமாக இருப்பதில்லை. அதுவே நான் அச்சொல்லை எழுதுவானாயின் அச்சொல் நித்தியமாக நிற்கும் (எல்லாம் அழிவனதான் ஆனால் உதாரணத்திற்காக). நான் எழுதியது ஒருபொழுதும் அதன் பொருளை மாற்றப்போவதில்லை. அது வெவ்வேறு விதமாகக் கற்பிதம் செய்யப்பட்டால் அதற்கு எழுத்து பொறுப்பன்று; எழுத்து, தான் எழுதப்படும் பொழுது கொண்ட பொருளை இழப்பதில்லை. அதைப் படித்துணர்கையில் வெவ்வேறு பொருள் பெறுவது மனதின் விளையாட்டு.

ஏன் எழுத்து என்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எழுத்து நிலைமாற்றப்படுவதும், திரிக்கப்படுவதும் சொல்லுடன் (ஒலி) ஒப்பிடுகையில் குறைவு (அறவே இல்லை என்று நான் சொல்லவில்லை).

உதாரணமாக “சம்மணம் போட்டு உட்கார்” என்பது “சமணர் போல் உட்கார்” என்பதன் மரூஉ அதாவது சமண முனிவர் போல் கால் மடித்து உட்கார் என்பதே பொருள். இதில் “சமணர்” என்பது “சிரமணர்” (பிரமாணம் அல்லாத மதங்கள் சிரமணம்) என்பதன் மரூஉ. ஆக “சிரமணர் போல் உட்கார்” என்பது தற்பொழுது இப்படி மருவி உள்ளது. இது மருவி வரக் காரணம் இவ்வாக்கியம் எழுதப்பட்டதைவிடச் சொல்லப்பட்டதே அதிகம். சொல்லும்பொழுது ஒரு சொல் மருவுவது தவிர்க்க முடியாதது. ஆனால் தற்பொழுது “சம்மணம் போட்டு உட்கார்” என்பது கணிசமாக எழுதப்படுவதாகையால் இதன் பின் வேறுருபெறுவதென்பது கடினம்.

இதன்பொருட்டே எழுத்து இன்றியமையாததாக உள்ளது. சுருங்கச்சொன்னால் எழுத்து சொல்லின் நித்யக் குறியீடு. எழுத்து ஒரு பிரதிநிதி. எனது எழுத்து என்பது என்னை முன்னிறுத்துகிறது. அது எனது பிரதிநிதி. அது வாசிக்கப்படும்பொழுது அது நானல்ல; அது நீங்கள்தான், உங்களாலான நான். எழுத்து வாசிக்கப்படாதவரை அது நான். நான் வாசிக்கும்பொழுதுகூட அது என்னாலான நான்.

எழுத்து சாசுவதம். எழுத்து நிர்குணப் பிரம்மம்”. இத்தொடர் அச்சைப் (printing press) பற்றியது. இதன் வரலாறு, புனைவை மீறியது, அளப்பரியது, பெரிதும் சொல்லப்படாதது. அதுபோக மிகவும் நீண்டது. ஆதலால் அளவுரீதியாகவும், கருத்துரீதியாகவும் இதை ஒரு கட்டுரையில் அடக்கலாகாது. இஃது அச்சு மட்டும் தொடர்புடையதன்று அதன் பின் ரத்தமும் சதையுமாய் உலாவிய உலாவிக்கொண்டிருக்கிற மனிதர்கள் தொடர்புடையதும்தான். அச்சின் அச்சாய் உள்ள எழுத்தை இக்கட்டுரைச் சொற்பளவு விளக்கியிருக்கும் என்ற நம்பிக்கையுடன் முடிக்கிறேன்.

 

இந்த எழுதுகோல் தெய்வம். இந்த எழுத்தும் தெய்வம்”

-பாரதியார்

Tagged in : PRINT, history, LETTER,

   

Similar Articles.