பூ. கோ. சரவணன் இந்திய வருவாய்த் துறையில் பணிபுரியும் குடிமைப் பணி அதிகாரி ஆவார். அவர் UPSC பொதுத் தேர்வில் தான் சந்தித்த சவால்களைப் பற்றிச் சில கேள்விகள் மூலம் பதிலளிக்கிறார்.
1. நீங்கள் IRS அதிகாரி ஆக உங்களை ஊக்குவித்தது எது ?
நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், சிவில் சர்வீசஸ் எனது குறிக்கோள் அல்ல. நானும் பிற மாணவர்களைப் போன்று கல்லூரி முடித்த பிறகு என்ன செய்யலாம் என்ற குழப்பத்திலிருந்தேன். கல்லூரியில் சேர்ந்த பிறகு, தேர்வுகள் சரியாக எழுத முடியவில்லை. இதனால் அரியர்கள் பெற வேண்டிய சூழலானது. அப்போது விகடனில் மாணவர் நிருபராகப் பணிபுரியத் தேர்வு எழுதினேன். எனது இரண்டாவது முயற்சியில் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. மாணவர் நிருபராக ஓராண்டு நிறைவு பெற்றது, அப்பொழுது எனது புகைப்படக்கார நண்பரோடு பயணம் செய்து கொண்டிருந்தேன்.அவர் "அடுத்து என்ன குறிக்கோள்?" என்று கேட்டார். அதற்கு நான் விகடனில் பத்திரிகையாளராகத் தொடரப் போகிறேன் என்றேன். அதற்கு அவர் கூறிய பதில் என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது "இது கேள்வி கேட்கிற இடம் நீ பதில் சொல்ற இடத்திற்குப் போக முயற்சி செய் " என்று கூறியது என்னைப் பொதுத் தேர்வு எழுதத் தூண்டியது.
2. உங்கள் வாழ்க்கையில் சிறந்த தருணங்கள் மற்றும் உங்கள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிய தருணங்கள் பற்றிக் கூறுங்கள்?
நான் கல்லூரியில் படித்த பொழுது நௌரஸ் மேடம் தொழில்நுட்ப ஆங்கிலம் கற்பித்தார். எனக்கு அப்பொழுது ஆங்கிலம் சரளமாக உரையாட வராது. ஆனால், அவர் என்னை ஊக்குவித்து உரையாடச் செய்தது எனக்குத் தன்னம்பிக்கையை வரவழைத்தது. மற்றும் பேராசிரியர் பாஸ்கர் பாபுஜி வகுப்பறை மற்றும் வாழ்க்கை அல்ல என்று கற்பித்தார். பின் கல்லூரியில் கல்ச்சரல்ஸின் போது (culturals) நண்பர்களோடு செய்த குறும்புகள், கல்லூரி விடுதியில் நண்பர்களோடு சேர்ந்து மகிழ்ந்த தருணங்கள். இறுதி ஆண்டு படிக்கும் பொழுது போராட்டம் செய்தது பின் டீன் (Dean) எங்களை அழைத்துக் கண்டித்தது. இவ்வாறாகப் பல்வேறு தருணங்களை எனது நண்பர்களும் ஆசிரியர்களும் எனக்குப் பரிசளித்தனர். நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு பயின்றப் பொழுது ஒரு நிகழ்வுக்கு என்னை நடுவராக எனது சீனியர் அமர வைத்தார். அது ஒரு சாதாரணமான விஷயம் தான் ஆனால், என்னுள் ஒரு பொறுப்பு உணர்ச்சியை அந்நிகழ்வு தூண்டியது.
3.நீங்கள் UPSC தேர்வில் வெற்றி பெறப் பயன்படுத்திய யுக்திகள் என்ன?
UPSC பாடத்திட்டம், NCERT புத்தகங்கள் மற்றும் அடிப்படையான புத்தகங்களைப் படிக்க வேண்டும். பயிற்சி! பயிற்சி! மற்றும் கடின உழைப்பால் தேர்வில் வெற்றி பெறலாம். எழுதுவதை வழக்கமாகப் பழக்கிக் கொள்ள வேண்டும். UPSC தேர்வு என்பது உமக்கு எவ்வளவு அறிந்திருக்கிறது என்பதைச் சார்ந்து மட்டும் அல்ல. நமக்கு அறியாதவற்றையும் எப்படி நிர்வகிக்கிறோம் என்பதும் முக்கியம். இன்னொரு தலையான விஷயம் என்னவென்றால் தினசரி செய்தித்தாள் படிப்பது. நான் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தைக் கல்லூரி முதலாம் ஆண்டிலிருந்து தொடங்கிவிட்டேன். அப்பொழுதே இரண்டு அல்லது மூன்று நாளிதழ்களை வாசிப்பேன்.நான் கல்லூரியில் நூலகத்திற்குச் சென்ற ஒரே காரணம் நாளிதழ்களை வாசிப்பதற்காக மட்டுமே. நீங்கள் செய்தித்தாளைத் தினசரி படிக்கத் தொடங்கிவிட்டால் அதை மகிழ்ந்து செய்வீர்கள்.
4. உங்களுடைய UPSC புத்தகப் பட்டியல் பற்றிக் கூறுங்கள்?
மிகவும் அடிப்படையான புத்தகங்கள் தான். அரசியலுக்கு (polity) லக்ஷ்மி காந்த், பொருளாதத்திற்கு (economy) சங்கர் கணேஷ் மற்றும் ரமேஷின் புத்தகங்கள், UPSC மெய்ன்ஸிற்கு உமா கபிலா, வரலாற்றுக்கு ஸ்பெக்ட்ரம் மற்றும் பிபின் சந்திரா நூல்கள். நான் வி சேகர் பண்டோபார்த்தியாவின் "ப்ளாஸ்ஸி டு பார்டிஷன்" (Plassey to partition) படித்தேன். இப்புத்தகத்தை நீங்கள் நேரம் இருந்தால் படிக்கலாம். பண்டைய மற்றும் இடைக்கால இந்தியாவிற்கு ஏ எல் போஷின் "ஒண்டெர் தட் வாஸ் இந்தியா"( wonder that was India). இந்தப் புத்தகத்தில் சமண மற்றும் புத்த மதம் பற்றிப் படித்தேன். இது இணையத்திலேயே கிடைக்கும். புவியியலிற்கு NCERT புத்தகங்கள் மற்றும் கொ செங் லியொங்யின் "செர்டஃபிகேட் பிஸிக்கல் அண்ட் ஹியூமன் ஜாகரஃபி" (certificate physical and Human geography) படித்தேன். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்குச் செய்தித்தாள் வாசித்துவிட்டு இணையத்தில் படிப்பது உதவும். பண்டைய மற்றும் இடைக்காலக் கலை கலாச்சாரத்திற்குப் பூனம் தாக்கியாவின் புத்தகத்தைப் படித்தேன். சுற்றுச்சூழலுக்குச் சங்கர் பயிற்சி நிறுவனம் புத்தகத்தைப் படித்தேன். தற்போதைய நிகழ்வுகள், அரசாங்கத் திட்டங்கள் மற்றும் பிரஸ் இன்பர்மேஷன் பீருயூவில் (Press Information Bureau) செய்திகளைப் படிப்பது UPSC தேர்விற்கு உதவின. சஷி தரூரின் இந்திய சாஸ்த்ராவில் (India sastra) பல்வேறு கட்டுரைகள் உள்ளன. அதை வாசிப்பது, தேர்வின் போது எவ்வாறு விடைகளை அணுகலாம் என்பது தெரிய வரும்.நெறிமுறைகளுக்கு (ethics) லெக்சிகன் (lexicon), உள் பாதுகாப்பிற்கு (internal security) "எவரி மேன்ஸ் வார்" (Every man's war), விவசாயம் மற்றும் பிற தலைப்புகளுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் லைவ்மிண்டின் (Indian express and Livemint) கருத்துக்களைப் படிப்பது உதவிப் புரியும்.
5. நீங்கள் ஒரு IRS அதிகாரியாகச் சந்தித்த சவால்கள் பற்றிக் கூறுங்கள்
எனக்கும் கணக்கிற்கும் ஒரே பிணக்கு தான். IRS அதிகாரியாகப் பணியில் நுழைந்தபோது நேரடி வரிவிதிப்பு, மறைமுக வரிவிதிப்பு (direct and indirect taxation), கணக்கியல்(accounting),தணிக்கை(auditing) மற்றும் வருவாய்(revenue) என்று முதலில் சிறிது பயமாகவே இருந்தது. ஆனால் போகப் போக எனக்குப் புரியத் தொடங்கியது. அதனுடைய தர்க்கத்தைப் (logic)புரிந்து கொண்டதால் எளிமையானது. இரண்டாவது விஷயம் என்னவென்றால், கையூட்டு வாங்க நிறையச் சூழல்கள் இருக்கிறது.சில நேரம் வர்த்தகத்திலிருந்தே அழுத்தம் வரலாம் .ஆனால் நீங்கள் எதற்கும் அசையாமல், இங்கு கையூட்டு வாங்காமலிருந்து பழகிவிட்டால், உங்களுக்கு யாரிடமிருந்தும் தொந்தரவு வராது. அடுத்தச் சவால் யாதென்றால் ஒரு பக்கம் வர்த்தகத்தைச் சுமுகமாக நடத்த வேண்டும். மற்றொரு பக்கம் விதிமுறைகளை மீறாதுப் பார்த்துக் கொள்ள வேண்டும். இது ஒரு அற்புதமான சவால்.சபிக்க விஷ்வாஸ் (Sabka Vishwas) என்ற திட்டம் வந்த போது, சில நேரம் இரவு 11,12 மணி வரை பணிபுரிய வேண்டியதிருந்தது.ஒரு நாளுக்கு முப்பது வேறுபட்ட வழக்குகளைப் படித்துத் தீர்ப்பை முடிவு செய்ய வேண்டியதிருந்தது.அதாவது ஒரு நீதிபதியோடு அரசியலமைப்பு அதிகாரத்தில் பாதி அதிகாரம் எங்களுக்கு உண்டு. விசாரித்துத் தீர்ப்பு எழுத உரிமை உண்டு. ஆனால் கைது செய்யும் உரிமை கிடையாது. இப்படிப்பட்ட பணியில் பொறுப்போடிருப்பது அவசியம் ஆகும். ஒரு தப்பான முடிவு வருவாய் இழப்பை ஏற்படுத்தலாம்.ஒரு முடிவைச் சரியாகவும் துரிதமாகவும் எடுக்க வேண்டும். அதுதான் இங்குள்ள சவால்.
6. IRS அதிகாரியின் வாழ்க்கை எப்படி இருக்கும் ?
ஒரு சாதாரணமான மனிதரைப் போல் நாங்களும் அலுவலகத்திற்குத் தயாராகி வருவோம். வர்த்தகத்தைச் சார்ந்த ஆளுமைகளைச் சந்திக்க நேரிடும். புதுப்புது சவால்களைக் கையாள வேண்டும். இங்கு எல்லாமே நடைமுறை தான். சவால்களுக்குத் தீர்வுகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். தீர்வுகளை நாம் சில நேரம் சீனியர்ஸிடம் கேட்கலாம்.இடையில் 30-40 நிமிடங்கள் இடைவேளை இருக்கும். IRS அதிகாரிகள் பொருட்கள் சேவை வரி (GST), விமான நிலையம், கடல் துறைமுகம், போதைப்பொருள் ஆய்வு முதலிய துறைகளிலும் பணியாற்ற நேரிடும்.நான் முதலில் GSTயில் பணிபுரிந்தேன். தற்பொழுது கடல் துறைமுகம் சார்ந்த பணியில் உள்ளேன். IRS பணியில் சுயவிவரத்திற்கு ஏற்ப சவால்களும் மாறுபடும்.
7. UPSC தேர்வு என்றாலே நிறையப் படிக்க வேண்டும், ஒரே முயற்சியில் வெற்றி பெற முடியாது என்ற கருத்து நிலவி வருகிறது. அதைப் பற்றிக் கூறுங்கள்?
நிறையப் படிப்பதைக் காட்டிலும் நிறைவாகக் கற்க வேண்டும். படிப்பதை மீண்டும் மீண்டும் படிப்பது நன்று (revision). நீங்கள் தேர்வு எழுத attempts கொடுப்பது அது பல்வேறு காரணிகளைக் கொண்டது.ஏனென்றால், இத்தேர்வு மூன்று சுற்றுகளைக் கொண்டது. அதனால் யார் வேண்டுமானாலும் எந்தச் சுற்றிலாவது வெளியேறலாம். நாள் முடிவில் UPSC என்பது ஒரு தேர்வுதான், இதில் முதல் முயற்சியில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் கற்றுக் கொள்வது அவசியமாகும்.நமது கல்லூரியிலே ஆண்டுதோறும் மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.படிப்பதை உள்வாங்கிப் பகுப்பாய்வு செய்து அதைப் புரியும் வகையில் எளிமையாக எழுதுபவர்கள் தான் தேர்வாகின்றனர். நீங்கள் இப்பொழுதிருந்தே உங்கள் கருத்துகளைக் கிண்டி டைம்ஸ் போன்ற குழுவிலோ அல்லது வலைப்பதிவுகளிலோ எழுதத் தொடங்கலாம். அயராது உழையுங்கள்! உங்களுடைய மனம், மெய், மொழி ,எல்லாம் செலுத்தி உழையுங்கள் உங்களுக்கு மகத்தான வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது. எல்லோரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.