Loading...

Articles.

Enjoy your read!

நாடகம் - அங்கீகரிக்கப்படாதக் கலை

திரையரங்குகளில்  நடிகர்களின்  நடிப்பைப்  பார்த்து  மெய்சிலிர்த்து  சில்லறையைச் சிதறிவிடும்  நாம்  அதே  நடிப்பை  மேடைகளிலும்  தெருக்களிலும்  பார்த்தால்  பெரிதாகக்  கண்டு கொள்வதில்லை.  முத்தமிழ்  எனப்  பெயர்  வர  காரணம்,  இயல், இசை,  நாடகம்.  அப்பேர்ப்பெற்ற  நாடகக்  கலைக்குத்  தகுந்த  அங்கீகாரம்  கிடைக்காதது வருத்தத்திற்குரியது. 

பழந்தமிழ்  நாட்டிலே  நாடகக்   கலை  மக்களுக்குப்   பொழுதுபோக்காகவும்,  நல் கருத்துக்களைப்   போதிப்பதாகவும்,  சில  மக்களுக்குப்   பிழைப்பாகவும்  இருந்து  வந்தது.   இன்றோ  சினிமா,  தொலைக்காட்சி,  யூடியூப்,  நெட்பிலிக்ஸ்  என ஏராளமானவை  நம்  கண்ணை  மறைத்து விட்டதால்  நாடகக்  கலையை  நாம் பார்ப்பதேயில்லை.  அதில்  உள்ளவர்களின்  திறனையும்  அக்கலையின் தனித்தன்மையையும்  நாம்  பார்க்கத்  தவறுகிறோம். 

ஒரு காட்சியில்  சரியாக  நடிக்கவில்லை  என்றால்  ரீடேக்  எடுக்க முடியாது.  ஒரு காட்சியை  நூறு  முறை  நடித்துப்  பார்த்துப்  பயம்,  கூச்சம் இல்லாமல் பல பேர் முன்னிலையில்  ஸ்ருதி  பிசகாமல்  சொந்த குரலில் பேசிப் பாட அக்கலைஞர்கள் எடுக்கும் சிரத்தை நாம் கவனிப்பதில்லை. 

இன்றும்  கிராமங்களில்  தெருக்கூத்து  எனப்படும்  நாடகக்  கலை   பிரபலமாக காணப்படுகிறது.  பெரும்பாலும்  திருவிழா  காலங்களில்  இரவு  நேரங்களில் நடைபெரும்  இக்கூத்து  சிலப்பதிகாரம்,  ராமாயணம், மகாபாரதக்  கதைகளைக்  களமாகக்  கொண்டு  நடத்தப்படும்.  இந்தக்  கூத்தர்களால்  நாடகத்தில்  இருந்து  வரும் வருமானத்தை  வைத்து  மட்டுமே  வயிற்றை  நிரப்ப  முடியாது.  விவசாயம்,  கூலி வேலை, கொத்தனார்  வேலை  என  இரவில்  இராஜ வேஷமும்  பகலில் கடன்காரர்களாகவும்  வாழும்  அவல  நிலையில்  உள்ளனர்.  மேலை  நாடுகளில் நாடகங்களுக்கு  இது  போன்ற  நிலை  இல்லை.  அங்கு   'Broadway Theatre'  எனப்படும் அரங்குகளில்  நாடகங்கள்  மட்டுமே  அரங்கேற்றப்பட்டுக்  கொண்டாடப்படுகிறது.

நாடகங்கள்  வெறும்  பொழுதுபோக்காக  மட்டும்  இன்றிச்  சுதந்திர  போராட்டக் காலகட்டத்தில்  மிக முக்கிய  பங்கு  வகித்தன. ஆங்கிலேயர்களை  எதிர்த்து  மக்களைச்  சுதந்திர  போராட்டத்தில்  ஈடுபட  ஊக்குவித்த  பல  நாடகங்கள்  தெருக்களிலும் மேடைகளிலும் அரங்கேற்றப்பட்டன.  அந்த  நாடகங்களை  ஆங்கிலேயர்கள்  கண்டு மிரண்டு  தடை விதிக்கும்  அளவிற்கு  இருந்துள்ளன.

தமிழ்  சினிமா  துறையில்,  இன்று  வினோதினி (எங்கேயும் எப்போதும்),  சோமசுந்தரம் (ஜோக்கர்)  போன்ற  பல  நாடகக் கலைஞர்கள்  பணியாற்றுகிறார்கள்.  திரையில் அவர்கள்  நடிப்பை  மெச்சும்  நாம்  அதே  போல்  பலர்  நாடகக் கலையில்  சிறந்த  நடிப்பை  வெளிக்காட்டினாலும்  கண்டு  கொள்வதில்லை.  இந்தச்  சினிமா,  நடிகருக்கு நடிக்கத்   தெரியவில்லை  எனச்  சொல்லிவிட்டு  அவர்கள்  படத்தின்  காட்சிகளைப்  பார்க்க  செல்வோம்.  ஆனால்,  நாடகங்களில்  சிறந்த  நடிப்பைக்  கொடுத்தாலும்  அங்குக்  கூட்டம்  கூடுவதில்லை.  தம்  வேலையைச்  செம்மையாகச்  செய்தாலும் அவர்களுக்கான  அங்கீகாரம்  கிடைக்கவில்லை  என்பதை  விட  நாம்  கொடுக்கவில்லை  என்பதே  சரியாகயிருக்கும்.
 

Tagged in : Tamil, Theatre, Therukoothu, Art,