Loading...

Articles.

Enjoy your read!

நாடகக்கலையும் அங்கீகாரமின்மையும்

       “முத்தமிழுள் ஒன்றாய் கலைகளுள் சிறந்த                                          
       மக்கள் உள்ளத்தினைத் தட்டி எழுப்பி
       உணர்ச்சியுடன் கூடிய ஊக்கத்தினைத் தந்து
       சிந்தனை வளரும் வண்ணம் அறிவுச்சுரங்கமாய்
       அமைவதே நம் பாரம்பரிய நாடகக்கலையாம்!!!”       

மூவாயிரம் ஆண்டுகளாய் தமிழில் எழிலும், ஏற்றமும் மிக்கதாக விளங்கி மலர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் களனாக விளங்குவது,  நம் தொன்மையும் பெருமையும் வாய்ந்த நாடகக்கலை.  தம் நடிப்பினில் மட்டுமின்றி, உரத்த குரலெடுத்து இசை முழக்கி மக்களின் மனதைக் கவர்ந்தனர் நாடகக்கலைஞர்கள்.

கி.பி.18ஆம் நூற்றாண்டிலிருந்தே,  நாடகம் மிகுந்த வளர்ச்சிபெறத் தொடங்கியது.  முதலில்,  கவிதை நாடகங்கள் பல எழுந்தன. பிறகு, உரைநடை உரையாடல்களைக் கொண்ட நாடகங்கள் பலவும் தோன்றின. பிற்காலத்திய திரைப்படத் தோற்றத்திற்கு வழிவகுத்தது நாடகமே ! 

காசி விசுவநாத முதலியார், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், சுந்தரம் பிள்ளை, பம்மல் சம்பந்தம், ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் உட்படப் பலரும் நாடகத்துறையின் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றினர்.

சமூக நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், புராண இதிகாச நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், இலக்கிய நாடகங்கள் உட்படப் பல்வேறு வகையுடன் திகழ்கிறது நாடகம். வார இதழ், மாத இதழ்களில் தொடர்ந்து தொடர் நாடகங்களாக வெளிவரும் நாடகங்களும் இக்காலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

      “ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே...
       இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே.....
      ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே.....
      கூத்தில் பிறந்தது நாட்டியக்கோப்பே......
      நாட்டியம் பிறந்தது நாடக வகையே.........”
                      
இவ்வாறு தோன்றிய நாடகக்கலை கடைச்சங்க காலத்தில் செழுமைப் பெற்று விளங்கியதும் குறிப்பிடத்தக்கது. பின்பு,  நாடகக்கலை படிப்படியாகத் தனது எழிலை இழக்கத் தொடங்கியது. கி.பி.3ம் நூற்றாண்டில் நாடகக்கலை எவ்விதச் செழிப்பும் செல்வாக்குமின்றிக் காணப்பட்டது. பலரும் நாடகக்கலையினை மீண்டும் இம்மண்ணில் நிலைநாட்டப் போராடினர். அப்போராட்டத்தின் வெற்றியாய் நாடகக்கலைக்கு மறுமலர்ச்சிக்காலம் வந்தது. சங்ககாலத்து நாடகங்கள் போலவே பதினேழாம் நூற்றாண்டுக் கால நாடகங்களும் மக்களின் கலையாக வளர்ந்தது. பின்னர் ‘தெருக்கூத்து’ என்ற நாடக வடிவம் தோன்றியது. இவ்வாறு நாடகக்கலை பெரும் வளர்ச்சி பெற்றுத் திகழ்ந்து. ஆனால் இக்காலத்திலோ நாடகக்கலை தன் பீடும் நடையை இழந்து ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டுக் கிடக்கிறது.

நமது தமிழ் மண்ணுக்கென்று பாரம்பரியங்களும், பண்பாட்டுக் கலாச்சாரங்களும் பல இருக்கின்றது. ஆனால்,  அவற்றை எல்லாம் மக்கள் மறந்து விடும் அவல நிலைக்குத் தமிழர்களைத் தள்ளுகிறது மேல்நாட்டுக் கலாச்சாரங்கள்.  இன்றைய தலைமுறையினர் பலருக்கு நாட்டுப்புறக் கலைகளைப் பற்றியும் நம் பாரம்பரிய கலைகளைப் பற்றியும் தெரிவதில்லை, தெரிந்துக்கொள்ள விரும்புவதுமில்லை.

நாகரீகப் பாதையில் பழையது மறைந்து விடுகிறது. இதனைத் தடுக்க வேண்டும். தமிழகத்தில் பழங்காலக்  கலையாகவும் பண்பாட்டின் இலக்கணமாகவும் திகழும் ‘இயல், இசை, நாடகம்’ என்னும் முத்தமிழின் சுவையையும் ஒருங்கே கொண்டது,  நாடகக்கலை. இத்தகு பெருமையும் பழமையும் வாய்ந்த நம் பண்டைய கலையினைக் காக்க அரசும் சமூக அமைப்புகளும் சமூகத்தின் அங்கமான நாமும் இக்கலைகளுக்கும் கலை வல்லுநர்களுக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.

இக்காலகட்டத்தில்,
                 “உயிரோடு இருக்கும் கலைகளும் குறைவு.
            உயிர்ப்போடு இருக்கும் கலைகளும் குறைவு!”.
நாம் தரும் ஊக்கமும் ஆக்கமும் தான் கலையையும் கலைஞர்களையும் மேம்படுத்தும். நலிவுற்ற நாடகக்கலையினைத்  தூக்கி நிறுத்த நம்மாலான முயற்சிகளைச் சிரம் மேல் சுமப்போம்!

Tagged in : Tamil, Theatre, Therukoothu, Art,