Loading...

Articles.

Enjoy your read!

Movie Review: Pugazh

மெட்ராஸ் படத்தில் இருக்கும் சுவற்றுக்கு பதிலாக விளையாட்டு மைதானத்தை வைத்து, அதே திரைக்கதையில் கொஞ்சம் பட்டி டிங்கரி வேலை பார்த்து முடித்தால்.. அட! நம்ம ஜெய், சுரபி நடித்து, விவேக்-மெர்வின் இசையமைக்க, மணிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும்  ‘புகழ்’ படம் ரெடி!

     கதையை பழசு.  திரைக்கதை அதை விடப் பழசு.  படத்தின் முதல் இருபது நிமிடங்களில் விளையாட்டு மைதானத்தையும், உள்ளூர் அரசியலையும் சுற்றியே வசனங்களும் காட்சிகளும் நகர்வதால், திரைக்கதையை எளிதாகக் கணித்து விட முடிகின்றது. ஏற்கனவே மெதுவாக, விறுவிறுப்பின்றி நகரும் திரைக்கதையில், தேவையற்ற இடங்களில் பாடல்களைத் திணிப்பதால், அது மேலும் பலவீனமாகிப் போகின்றது.

     நண்பனுக்காக எதையும் செய்யத் துணிந்த, ஏரியாவில் செல்வாக்கு மிகுந்த, ஊர் பிரச்சனையைத் தன் பிரச்சனையாக எண்ணி அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் ’அதே’ நாயகன், இதனால் நாயகனுக்கு ஏதேனும் பிரச்சனை வரக்கூடுமோ என்று பயப்படும் ‘அதே’ நாயகனின் உறவுகள், கதைக்கு சற்றும் அவசியமில்லாத ‘அதே’ நாயகி, நாயகியுடன் சகஜமாகப் பழகும் ‘அதே’ நாயகனின் தங்கை, சூழ்ச்சி நிறைந்த ‘அதே’ அரசியல்வாதி வில்லன்....  தமிழ் சினிமாவில் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன பல ‘அதே’க்கள் படத்தில் இருக்கின்றன. போதாதற்கு விவேக்-மெர்வின் வேறு பின்னணி இசையின் மூலம் தங்கள் பங்கிற்கு ஒரு ‘அதே’வைக் கொடுத்திருக்கின்றனர்.

      நாயகனுக்கும் அவனுடைய நண்பனுக்கும் இடையே உள்ள நட்பு, நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே மலரும் காதல்.. இவை எதுவுமே அழுத்தமாக சித்தரிக்கப்படவில்லை. காமெடிக்கு RJ பாலஜி இருக்கிறார் என்று நம்பிப் படத்திற்குப் போனீர்கள் என்றால், நீங்கள் காமெடியனாகிப் போவீர்கள்.  வசனங்களும் ஏதும் பெரிதாகக் கவரவில்லை. பாடல்கள்  எல்லாம் ‘சுமார்’ ரகம்.

     கருணை மதிப்பெண்களின் அடிப்படையில் ஐந்திற்கு ஒன்றரை மதிப்பெண்கள் கொடுக்கலாம்.  எப்படியிருப்பினும் புதுமையான திரைக்கதையைக் கையாளத் தவறிய, ரசிகர்களைக் கவரத் தவறிய ‘புகழ்’, மக்களிடையே ஒரு நல்ல படத்திற்கான புகழையும் பெறத் தவறும் என்பதில் ஐயமில்லை.  

Tagged in : Reviews, Aishwarya Valliappan, My space, AKSHARA VISWANATHAN, சுபாஷ் வெங்கட்,

   

Similar Articles.