காதல் படங்களின் நகர்வு என்பது பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பொறுத்தே அமையும். “காதலனும், காதலியும் ஒன்று சேர்வார்களா?” என்ற ஏக்கமும், “இவர்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றதே?” என்னும் பதைபதைப்புமே இம்மாதிரியான திரைப்படங்களை உயிர்ப்புடன் கொண்டுசெல்லும். ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘ரோமியோ ஜூலியட்’ இப்படியான எந்த உணர்வையுமே ஏற்படுத்தவில்லை. “இவங்க சேர்ந்தா என்ன, சேரலைன்னா என்ன? சீக்கிரம் படத்தை முடிங்கடா சாமி!” என்னும் வெறுப்பையே தோற்றுவிக்கிறது.
தலைப்பை வைக்கும்போது மட்டும்தான் இயக்குனர் கலையுணர்வுடன் யோசித்திருக்கிறார் போல. பட்டித்தொட்டியெங்கும் ஒலிக்கும் ‘டண்டனக்கா’ பாடலும் முதல் 10 நிமிடங்களுக்குள்ளாகவே வந்து விடுகிறது; அதுவும் அடித்தட்டு மக்களைத் திரையரங்கிற்கு இழுக்கும் நோக்குடனே சேர்க்கப்பட்டிருக்கிறது.
தலைப்பை வைக்கும்போது மட்டும்தான் இயக்குனர் கலையுணர்வுடன் யோசித்திருக்கிறார் போல.
படத்தில் வரும் ஒரு நடிகர் கூட நடிப்பில் மெனக்கெடவில்லை. ‘எங்கேயும் காதல்’ சொதப்பியதற்குப் பின்பும் ஜெயம் ரவி திருந்தியதாகத் தெரியவில்லை. ‘ஜிம் கோச்’சாக வரும் இவரைப் பணக்காரர் என நினைத்துக் காதலிக்கிறார் ஹன்சிகா. பின்னர் உண்மை தெரியவர அவராகவே பிரிந்து செல்கிறார். கவனிக்க: தான் பணக்காரன் என்றோ, ஏழை என்றோ ஜெயம் ரவி தன் வாயால் கூறுவதேயில்லை.
முதல் பாதி முழுவதும் நாயகன் அழுது வடிந்து, நாயகியான ஹன்சிகாவைத் தொடர்வதிலேயே ஊர்கிறது. “நான் உனக்கு வேணுமில்ல?” என்ற ஒற்றைக் கேள்வியில் நாயகனை மிரட்டி, ‘ஷாப்பிங்’ செய்தே சொத்தை அழிக்கிறார். பணமும், பகட்டும்தான் தனது எதிர்பார்ப்பு என்று கூறி, அதற்கு ஹைதர் காலத்து முன்கதை ஒன்றைச் சொல்கிறார்.
பிற்பாதியில் வசதியான மாப்பிள்ளை ஒருவருடன் திருமணம் நிச்சயமாகியிருக்கும் ஹன்சிகாவை “நான் உனக்கு வேணாமில்ல?” என்ற ரீதியில் ஜெயம் ரவி மிரட்டுகிறார். உப்புச்சப்பே இல்லாத இப்படத்தின் முடிவில் எதிர்பார்த்தபடியே இருவரும் இணைகின்றனர்.
வம்சி கிருஷ்ணா, ’அப்பாஸின் திரையுலக வாரிசு’ என்னும் பட்டத்திற்காகக் காத்திருக்கிறார் போல. நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாக வரும் இவர், தமிழ் சினிமா மரபுக்கேற்ப ஹன்சிகாவை விட்டுவிடுகிறார். ஹன்சிகாவிற்குத் தன் சுயத்தின் மேலும், சுதந்திரத்தின் மேலும் ஆசை வருகிறது என்பதை விளக்கும் காட்சிகள் அபத்தமானவை.
இமானின் பின்னணி இசை சப்தமாக மட்டுமே ஒலிக்கிறது. ‘தூவானம்’ பாடல், ஜில்லாவில் இடம்பெற்ற ‘வெரசா போகையிலே’ என்னும் பாடலை நினைவுபடுத்தினாலும், ரசிக்கும்படியாய் உள்ளது.
வி.டி.வி. கணேஷுடன் ஜெயம் ரவி உரையாடும் சில நகைச்சுவைக் காட்சிகள், ‘விண்ணைத் தாண்டி வருவாயா?’வை ஒத்திருப்பினும், அவற்றை நீக்கிவிட்டால் இத்திரைப்படத்தை முழுமையாகப் பார்க்க முடியாது என்பது உறுதி.
வி.டி.வி. கணேஷுடன் ஜெயம் ரவி உரையாடும் சில நகைச்சுவைக் காட்சிகள், ‘விண்ணைத் தாண்டி வருவாயா?’வை ஒத்திருப்பினும், அவற்றை நீக்கிவிட்டால் இத்திரைப்படத்தை முழுமையாகப் பார்க்க முடியாது என்பது உறுதி.
முடிவு: ‘டண்டனக்கா’ பாடலுக்காக 120 ரூபாயை அழிக்கலாம் என்ற எண்ணம் கொண்ட செல்வந்தர்கள் மட்டும் இப்படத்தைப் பார்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். ஏதாவது படம் பார்க்க வேண்டும் என்ற முடிவில் இருப்பவர்கள், தயவு செய்து ‘காக்கா முட்டை’க்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (ஏற்கனவே பார்த்திருந்தாலும் பரவாயில்லை; தரமான படங்களை 3 – 4 முறை கூடப் பார்க்கலாம்).