உலகின் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ். தமிழகம் 400 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசிக்கும் பகுதியாகவும் 5500 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான பண்பாட்டு வரலாற்றையும் கொண்டுள்ளது. தமிழ் பண்பாடு மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியல் போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. இப்படிப்பட்ட பண்பாட்டு வழக்கத்தை நாம் இன்றும் பின்பற்றுகிறோமா என்பது ஒரு கேள்விக்குறியே. இதற்கான விடையை இக்கட்டுரையில் காண்போம்.
நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் பொதிந்துள்ள உண்மைகள் இந்த உலகத்தினரையே அவ்வப்போது ஆச்சரியப்பட வைத்துக் கொண்டு தான் இன்றளவும் உள்ளன. நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திவந்த பண்பாட்டு வழக்கங்கள் என்ன, அவற்றை இன்றும் நாம் பயன்படுத்தி வருகிறோமா என்பதைக் காண்போம். முந்தய தமிழர்கள் ஏரி, குளங்களில் குளிப்பது வழக்கம். ஏரி, குளங்களில் குளிக்கும் பொழுது முதலில் காலை வைத்து தான் இறங்குவார்கள். கால் நனைந்த பின்பு தான் ஒவ்வொரு பகுதியாக தண்ணீரில் நனைந்து இறுதியாக தலை வழியே உஷ்ணம் வெளியேறும். ஆனால் இன்றோ நம்மில் ஏராளமானோர் ஷவரில் குளிப்பது வழக்கமாகிவிட்டது. இன்று உஷ்ணத்தால் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். நவீன நோய்களுக்கு இந்த உடல் உஷ்ணமும் ஒரு காரணமாகும்.
அடுத்து, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடு தோறும் மஞ்சள் தண்ணீரைத் தெளிப்பது வழக்கம். இதற்கு ஓர் அறிவியல் காரணம் உள்ளது. மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாக பயன்பட்டு வீடுகளில் இருக்கும் பாக்டீரியா, மற்றும் மற்ற நுண் கிருமிகளையும் அழித்துவிடும். இன்று எல்லோரும் இதை பின்பற்றுகின்றோமா என்று கேட்டால், அதற்கு பதில் நமக்கே நன்றாக தெரியும்.
கோலம் போடும் வழக்கத்தை நாம் கருதாமல் இருக்க முடியாது. காலையில் எழுந்ததும் பெண்கள் வாசல் தெளித்து கோலம் போடுவர். இவ்வாறு குனிந்து நிமிர்ந்து வாசல் தெளித்து கோலம் போடும் பொழுது அவர்களுக்கு இயல்பாக உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கும். புள்ளி கோலம் போடும் பொழுது மனநிலை ஒருமுகப்படுகிறது. கோலம் போடுவதிலும் இப்படிப்பட்ட ஒரு பயன் உள்ளது.
மேற்கூறிய வழக்கங்களை தற்போதைய சூழலில் எல்லோரும் கடைபிடிப்பதில்லை. குறிப்பாக நகரங்களில் இவற்றைக் கடைபிடிப்பவர்கள் மிகவும் குறைவு தான். ஆயினும், தமிழர்களின் பாரம்பரிய நடைமுறை பழக்கவழக்கங்கள் ஒரு சில இடங்களில் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பழமையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒன்றிணைந்தால் இன்று இருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு கிடைத்துவிடும். எனவே, பண்டைய பண்பாட்டு வழக்கங்களை நாம் மறக்காமல் வளர்க்க வேண்டும்!