Loading...

Articles.

Enjoy your read!

இன்சொல் இனிதீன்றல் காண்பான்

            எல்லா உயிர்க்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள் உண்டு. அதில் மனிதன் மட்டுமே வாய் மூலம் உண்பதைத் தவிர பேசுவதற்கும், சிரிப்பதற்கும் பயன்படுத்துகிறான்.நம் மனதில் தோன்றும் சிந்தனைகளையும், எண்ணங்களையும், உணர்வுகளையும் வாய்வழியாக சொல் வடிவில் வெளிப்படுத்துகிறான்.

            ஒரு மனிதர் ஒரு சூழலில் எப்படிப்பட்ட சொற்களை பயன்படுத்துகிறார் என்பது அவரது பண்பும், பட்டறிவும், படிப்பறிவும் வெளிப்படுத்தும். பண்பான சொற்களை எப்போதும் பயன்படுத்துவது மற்றும் அன்பான, கனிவான சொற்களை பேசுவது போன்றவை நல்ல மனிதரின் குணங்கள். அதைத்தான் திருவள்ளுவரும்,

        நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் 

        குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.(959)

அதாவது நிலத்தின் தன்மையை முளை காட்டும், குலத்தின் தன்மையைச் சொல்காட்டும்.

           நெல்லும் சொல்லும் ஒன்று என்பார்கள். நல்ல நெல் விதையை விதைத்தால், அது பலமடங்கு பயன் தரும்.வாயிலிருந்து வெளிப்படாத சொல்லுக்கு நீ தலைவன், வெளிப்பட்டுவிட்ட சொல், உனக்கு தலைவன் என்ற முதுமொழி உண்டு.பேசும்போது சிந்தித்து நிதானமாக பேசுதல் அனைவருக்கும் நன்று. உயர் பதவிகளில் உள்ளவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதும் ஒன்று.

           ஞானியிடம் ஒரு மனிதன் சென்று, நான் சொற்களால் ஒருவரை காயப்படுத்திவிட்டேன். அவரிடம் மன்னிப்பும் கேட்டு விட்டேன். என்னை அவர் மன்னிப்பார் அல்லவா என்று கேட்டார். ஞானி அந்த மனிதரிடம் சில ஆணிகளைக் கொடுத்து மரத்தில் அடிக்கச் சொன்னார். பின்னர் அடித்த ஆணிகளை பிடுங்கச்சொன்னார். பிடுங்கிய இடத்தைத் தொட்டு பார்க்கச் சொன்னார் ஞானி.பிடுங்கிய இடம் தழும்புடன் மரத்தில் புண்ணாக இருந்தது. அப்படித்தான் மனிதர்களிடம் வீசப்பட்ட சொற்களும். என்னதான் மன்னிப்புக் கேட்டாலும் சொல்லால் அடித்த தழும்பு மாறாது என்றார். வள்ளுவரும் அதனையே,

            தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே

            நாவினாற் சுட்ட வடு. (129)

தீச்சுட்ட புண்ணோ ஆறிப்போகும். சுடுசொல்லோ வடுவாகி என்றும் ஆறாது.

          நல்ல எண்ணத்தில் உள்ளவர்கள் மனதில் இருந்து வெளிப்படும் சொற்கள் நேர்மறையாகவும்,நல்ல அதிர்வுகளையும், நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும். பண்பலை வானொலி ஆத்திச்சூடி நிகழ்ச்சியில், நல்லது நடக்கும், நல்லதே நடக்கும் ஆனந்தமாய் இருப்போம் நண்பர்களே என்று சொல்லும் திரு. ஜெயராம். வாழ்க வளமுடன் என்று கூறும் வேதாத்திரி மகரிஷி போன்றோரின் சொற்களை கேட்கும் போது மகிழ்ச்சியை தருகிறது. வள்ளுவரும் அதனையே வலியுறுத்துகிறார்,

   இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

   வன்சொல் வழங்கு வது.(99)

        இன்சொல் தனக்கு நலந்தருவதைக் கண்டவன், ஏன் பிறரிடம் கடுஞ்சொற்களை கூறுகிறான்?

        ஆதலால் வன்சொற்களை தவிர்த்து மென்சொற்களைப் பயன்படுத்துவோம்.

Tagged in : positive words, Thirukural,