முன்னுரை:
2016 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 8ஆம் நாள் காலை, ஒரு இந்திய பிச்சைக்காரருக்கு நான் எனது சட்டை பையிலிருந்து ஒரு ஆயிரம் ருபாய் தாளை தானம் செய்திருந்தால் , அவர் அடையும் களிப்பு அளவற்றது . அதே பிச்சைக்காரருக்கு அடுத்த நாள் நவம்பர் 9ஆம் தேதி அதே ஆயிரம் ருபாய் தாளை தரும்போது அவர் அதே களிப்பை அடைவரா? என்பது கேள்விக்குறியே
ஒரே நாளில் ஒரே ஒரு அறிவுப்பு எவ்வாறு அத்துனை பணத்தாட்களையும் செல்லாக்காசாக்குமெனில்,அதன் மதிப்பு எங்குள்ளது. ஒரு நம்பிக்கையில் மட்டும் உயிர் பெற்றுள்ள இப்பொருட்களுக்கு நம் வாழ்வையே மாற்றியமைக்கும் சக்தி எங்கிருந்து கிடைத்தது?
ஒரு தனி மனிதனால் ஒரு புலியினை என்றும் வலிமையில், வேகத்தில் மற்றும் வேட்டையாடும் யுக்தியில் வென்று விட முடியாது , ஆனால் மனித இனத்தால் புலிகளின் இனத்தையே அழியும் தருவாய்க்கு இட்டு சென்று ,மீண்டும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்யமுடிகிறது. மனித ஒருங்கிணைப்பே இதற்கு காரணம் எனில் இத்துணை கோடி மனிதர்களை ஒன்றிணைய செய்யும் அடி நாதம் எது?
மனிதன் உணவு சங்கிலியின் உச்சத்தை அடைந்தது எவ்வாறு? என்பன பற்றி "சேப்பியன்ஸ் - அறிவார்ந்த மனிதன் " எனும் இப்புத்தகத்தின் மூலம் யுவால் நோவா ஹராரி கூறும் விடயங்களை காண்போம்.
குறை பிரசவம்:
மனித இனம் இருகால்களால் நடை பழக முற்பட்ட போது, பெண்களின் பிறப்பு பாதை குறுகியதின் காரணமாக குழந்தை நீண்ட நாட்கள் தாயின் வயிற்றிலே கழிப்பது இயலாத காரியமாகிற்று .
இதன் விளைவால் பிரசவித்த முழுதும் வளர்ச்சியடையாத குழந்தைகளுக்கு தங்களின் சமூகம், மொழி, சுற்றுச்சூழல், வாழ்வியலை புரிந்து அறிந்துக்கொள்ள இயற்கை வாய்ப்பபளித்தது.
கதைச்சொல்லிகள்:
நெருப்பு மற்றும் கற்கருவிகளின் கண்டுபிடிப்பானது வேட்டையாடுவதற்கான மற்றும் செரிமானத்திற்கு தேவையான ஆற்றலையும் நேரத்தையும் குறைத்து மூளையின் திறனை அதிகரிக்க வழிவகுத்தது, சிந்திக்கும் திறனானது வேட்டையடிகளை ஆன்மவாதிகளாகியது. இயற்கை, விலங்குகள், முன்னோர்களின் ஆவிகள் பற்றிய கதைகள் உருவாக்கப்பட்டு மறுஉருவாக்கத்திற்கு உட்பட்டு கதைகளும் வேட்டையாடிகளும் ஒரு சேர பரிணமித்தனர்.
வேளாண்ப்புரட்சியின்போது, விவசாயிகளின் எதிர்கால விளைச்சல் குறித்த பயமானது, நம்பிக்கை தரக்கூடிய தங்கள் கடவுள்கள், முன்னோர்கள் பற்றிய கதைகளுடன் இணக்கமடைய செய்தது. மேலும் அதிக உழைப்பின் மூலம் அதிக விளைச்சலை கையகபடுத்தி எதிர்கால தேவையை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என, உழைப்பை அதிகரிக்க அதிக குழந்தைகளை விவசாயிகள் பெற்றெடுத்தனர்.விளைச்சலும் அதிகரித்தது தேவைக்கதிகமான உபரி உணவு விவசாயிகளிடம் இருந்தது. இந்த உபரி உணவானது அடுத்த வருட விளைச்சலை அதிகரிக்க கோரி கடவுளுடனான உடன்படிக்கையின் பேரில் கடவுளுக்கு படைக்கப்பட்டது.
காலபோக்கில் உழைப்பிற்காக பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது, ஆனால் விளைச்சல் நிலங்களின் அளவோ மாறவில்லை, நிலத்தையும் நீரையும் எவ்வாறு பிரித்து கொள்வது, வறட்சி காலங்களில் எவ்வாறு செயல் படுவது போன்ற காரணிகள் மக்களிடையே அரசியல் கட்டமைப்பின் தேவையை ஏற்படுத்தியது.
மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக கடவுளின் தூதுவராக மன்னர்கள் சித்தரிக்கப்பட்டனர். மக்களின் உபரி உணவானது கடவுளால் தேர்ந்தெடுக்கபட்ட மன்னனின் ஆட்சிக்கு கடவுளின் கோபத்திற்கு ஆளாகாமலிருக்க பரிசளிக்கப்பட்டது. மன்னன் மக்களுக்கு நிலத்தையும் நீரையும் பிரித்து கொடுத்து பரிசளித்தார்.கடவுளின் ஆணை பேரில் பல போர்களை மேற்கொண்டு மக்கள் ஒரு குடையின் கீழ் ஆளப்பட்டனர்.
இவ்வாறு கடவுளின் பேரில் பல கிளை கதைகள் உருவாக்கப்பட்டு விவசாயிகளின் உபரி உணவானது கலை,அரசியல் ,போர் என்பனவாக மாற்றப்பட்டது .
எழுதும் குரங்குகள்:
பேரரசுகளின் உருவகத்தின் பிறகு, நாட்டுமக்களின் எண்ணிக்கையை போன்றே அவர்களை பற்றிய தகவல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது , சாதாரண மனித மூளையால் அவ்வளவு தகவல்களையும் கையாள்வது என்பது எளிதான காரியமல்ல, இச்சூழல் எண்கணிதம் தோன்ற வழிவகுத்தது. காலபோக்கில் எழுத்துக்கள்(கியூனிபார்ம்- சுமேரியர்கள் எழுத்து முறை ) தோன்றின.
தேனீக்கள் தம் இனத்திற்குள்ளே நிலவும் பாகுபாட்டிற்கு ஏற்றவாறு வேலைக்காரதேனீ , ஆண் தேனீ , இராணி தேனீ என்ற ஏதேனும் ஒன்றின் DNA வை பெற்றிருக்கும் இது போன்ற எந்த DNA வின் தேவையும் இன்றி, மனிதர்களால் ஒரு நிறுவனத்தின் முதலாளி முதல் அடிமட்ட தொழிலாளி வரை பல்வேறு பொறுப்புகளை ஒரு காகிதத்தில் எழுதி இருக்கும் சில வார்த்தைகள் மற்றும் முத்திரையின் அடிப்படையில் ஏற்று பணி புரிய முடியும். இவ்வாறு எழுத்துக்கள் நம் DNA வரிசையை நாமே எழுதும் வல்லமையை நமக்களிக்கின்றது.
கற்பனை யதார்த்தம்:
மனித ஒருங்கிணைப்பில் பெரும் பங்கு வகிப்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட புனைவு கதைகளும் அதன் மீதான நம்பிக்கைதான்.
நிஜ உலகில் அல்லாத கற்பனையானவற்றினை நம்பும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே உள்ளதாகும்,
உதாரணத்திற்கு, நான் "உதாரணத்திற்கு" என்று எழுதும் தமிழ்ச்சொல்லின் பொருள் இதுதான் என உங்கள் பெற்றோரோ ஆசிரியரோ கூறியதை நீங்ககளும் நானும் நம்பியதன் காரணமாகவே இதுபோன்ற பல தமிழ் சொற்கள் நிறைந்த இந்த கட்டுரையினால் நம்மை ஒரே சிந்தையில் ஒருங்கிணைக்க முடிகிறது.
மனிதர்களின் கற்பனையில் மட்டுமே உயிர் பெற்றிருபவற்றை நம்பும் திறனே நம் மாபெரும் ஒருங்கிணைப்பிற்கு காரணமாகும். இதுபோன்ற பல கற்பனை யதார்த்தங்களின்(மதங்கள், பணம், அரசியலமைப்பு )கூட்டிணைப்பாலே நம் நிஜ உலகம் சீராக இயங்கி வருகிறது.
மதங்கள்:
எழுத்துக்களின் கண்டுபிடிப்பானது மனிதர்களின் கதைகளின் அளவையும், ஆயுளையும் அதன்மீதான நம்பிக்கையையும் அதிகரிக்க செய்தது.
அவ்வாறு எழுதப்பட்டு, பல இடங்களுக்கு பரவி மீண்டும் எழுதப்பட்ட புனித நூல்களாலே பல்வேறுப்பட்ட மக்களை ஒருமித்த நம்பிக்கையினால் ஒன்றிணைக்க முடிந்தது.
பணம்:
ஆக, இப்போது உங்களுக்கு இக்கட்டுரையின் முன்னுரையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடைதெரிந்திருக்கும். பணம் என்பதும் இக்கற்பனை யதார்த்த உலகில் மனித கற்பனையில் மட்டுமே உயிர் வாழும் ஒரு கற்பனையான பொருளாகும்.
நீங்களும் நானும் நம்மை சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கையில் மட்டுமே பணமானது அம்மதிப்பை பெற்றுள்ளது
"பணத்தின் பயனறிய பிஞ்சுக்குழந்தையிடம் பணத்தாளை கொடுப்பின் அக்குழந்தை அத்தாளிலும் கத்தி கப்பல் செய்யவே முயலும்."
அரசியலமைப்பு:
மேற்கூறிய இரு விசயங்களை போன்றதே அரசியலமைப்பும் நம் நம்பிக்கையிலே நம் கற்பனையில் மட்டுமே உயிர்ப்பெற்ற கற்பனையான யதார்த்த விஷயங்களில் ஒன்றாகும்.
சுற்றுலா பயணிகளை கொன்றதற்காக நம்மால் என்றும் நார்த் சென்டினல் பழங்குடியினர்க்கு மரண தண்டனை விதிக்க இயலாது.
கலச்சாரரீதியான வளர்ச்சி:
மனித இனத்தின் இப்பெரும் வளர்ச்சிக்கு மனித ஒருங்கிணைப்பை போலவே கலச்சார ரீதியான வளர்ச்சியும் ஒரு காரணமாகும்.
ஒரு உயிரினமானது தனது சுற்றுசூழலுக்கேற்றவாறு பரிணமிப்பது என்பது பல மில்லியன் ஆண்டுகள் தேவைப்படும் மிக மிக மெதுவான செயல்முறையாகும். ஆனால் மனிதர்கள் தங்கள் கலாச்சாரத்தில் சிறு மற்றும் பெரு மாறுபாடுகளை செய்வதன் மூலம் இதனை துரிதமான செயல்முறையாக்கினர்.
இதனால் நாம் ஒவ்வொரு முறையும் நம் கலாச்சாரத்தை மாற்றுவதன் மூலம் கலாச்சார பரிணாமத்திற்கு உட்பட்டே வந்துள்ளோம்.
முடிவுரை:
சீர்குலைக்க முடியாத இக்கற்பனை யதார்த்த ஒழுங்குமுறையிலே நம் மாபெரும் ஒருங்கிணைப்பு சாத்தியப்பட்டுள்ளது. கற்பனையான ஒன்றின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்க ஒவ்வொரு முயற்சிக்கும் செயலானது இன்னொரு கற்பனையான ஒன்றின் மீதான நம்பிக்கைக்கு வழிவகுக்கும்.
கடவுள் நம்பிக்கையால் ஒருங்கிணைக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை மாற்றும் முயற்சியானது கடவுள் மறுப்பாளர்கள் என்ற இன்னொன்றின் மீதான நம்பிக்கைக்கு வழி வகை செய்து இன்னொரு மனித ஒருங்கிணைப்புக்கு வழிவகை செய்யும்...
மனித வளர்ச்சிக்கு காரணமாயிருந்த மனித ஒருங்கிணைப்பு, கற்பனை ஒழுங்குமுறை, கற்பனை கதைகள், கலாச்சாரரீதியான வளர்ச்சி ஆகியவை இந்நூலின் சிறுபகுதி மட்டுமே. இன்னும் பல கேள்விகளுக்கும் புதிய பரிமாணங்களுக்கும் இந்த நூல் உங்களை நிச்சயம் இட்டுச்செல்லும்.