நான் கண்ட மிகச்சிறந்த காணொளியின் உரைநடை வடிவமே இந்த பதிவு. இந்த காணொளியை சில லட்சம் பேர் பார்த்திருக்கலாம், ஆனால் பலர் உண்மையாக கண்டு ரசித்திருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இந்த பதிவை எழுதுகிறேன்.
ஒரு அறையில் நான்கு நபர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். அங்கே ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளரும் அமர்ந்திருக்கிறார். இவர்களில் நால்வருக்கும் முன்பாக அவர்களின் பெயர் பலகை உள்ளது. அதில் முதல் நபரின் முன் கேப்டன் தியாகராஜன் என்றும்,இரண்டாவது நபரின் முன் வழக்கறிஞர் சரவணன் என்றும் அதேபோல் மூன்றாவது நபரின் டாக்டர் அருந்ததி என்றும் மற்ற பெண்ணின் முன் திருமதி கலைவானி என்று இருந்தது.
அந்த அறைக்குள் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தனர். அவர்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் முதல் கேள்வி, “இந்த நால்வரில் யார் இந்த நாட்டிற்க்கு மிக முக்கியமானவராக இருப்பார்கள்?” என்று. பெரும்பாலானோர் “கேப்டன் தியாகராஜன்” என்று கூறினார்கள், ஏனெனில் அவர் இந்த நாட்டை எல்லையில் இருந்து பாதுகாக்கிறார். சிலர் “டாக்டர் அருந்ததி” என்றார்கள், ஏனெனில் அவர் மக்களை நோயிலிருந்து காக்கிறார். கொரோனா காலத்தில் அவர்களின் பணி மிகவும் முக்கியமானதாக இருந்தது. சிலர் “வழக்கறிஞர் சரவணன்” என்று கூறினார்கள், ஏனெனில் அவர் சட்டத்தை ஒழுங்காக செயல்பட செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
அனைவரிடமும் இரண்டாவது கேள்வியாக, “இந்த நால்வரில் யார் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்?” என்று கேட்டபோது பெரும்பாலானோரின் பதில் “திருமதி கலைவானி” என்று இருந்தது.
தொகுப்பாளர் கேப்டன் தியாகராஜனின் சாதனைகளை பட்டியலிட்டார். பின்னர் டாக்டர் அருந்ததியின் வெற்றிகளைச் சுட்டிக்காட்டினார். அதேபோல் வழக்கறிஞர் சரவணனின் சாதனைகளையும் குறிப்பிட்டார். பின்னர் திருமதி கலைவாணியை அழைத்து, “இவர்கள் திருமதி கலைவானி.இந்த மூவருக்கு அதாவதுகேப்டன், டாக்டர், வழக்கறிஞர் இவர் தான் ஆசிரியர்” என்று தொகுப்பாளர் சொல்லிக்கொண்டிருக்கும் போது, அந்த மூவரும் ஆசிரியர் கலைவானி காலில் விழுந்து, ஆசிர்வாதம் வாங்கினர்.இதை சற்றும் எதிர்பாராத கலைவானியின் கண்கள் கலங்கின. இதை பார்த்திருந்த அனைவரின் கண்களும் கலங்கின.
அந்த தொகுப்பாளர், “இந்த நால்வரில் யார் சமூகத்திற்கும் நாட்டிற்கும் மிக முக்கியமானவர்?” என்று கேட்டபோது, அங்கு இருந்த அனைவரும் ஒருமித்துக் கூறினார்கள்: “ஆசிரியர் கலைவாணி” என்று. இந்தக் காணொளியை நான் பார்த்தபோது, ஒரு ஆசிரியராக என் கண்களும் கலங்கின.
பின்னர் அந்த தொகுப்பாளர், “ஏன் முதலில் ஆசிரியர் என்று கூறவில்லை?” என்று கேட்டார். அனைவரும் “ஆசிரியருக்கு Dr., Er., Adv. போன்ற அடைமொழிகள் இல்லை” என்றனர். உடனே, தொகுப்பாளர், “இனி ஆசிரியருக்கு Teacher என்பதன் சுருக்கமாக Tr. என்ற அடைமொழியை பயன்படுத்தலாமா?” என்று கேட்டார், அனைவரும் சம்மதித்தனர்.
இந்த காணொளியை பார்த்தபின், எனக்கு ஒன்று மனதில் தோன்றியது ‘ ஏன் இதை உடனே நடைமுறை படுத்தக் கூடாது என்று !
என்னுடைய அம்மா கலைவானி ஒரு தலைமை ஆசிரியை அவர்களுக்கு T r. K கலைவானி தலைமை ஆசிரியர் என்ற பெயர் பலகை செய்து அவர்களின் பிறந்தநாள் அன்று பரிசாக கொடுதேன். அவற்றை பெருமை படுத்தும் விதமாகத்தான் இந்த பதிவில் ஆசிரியின் பெயராக என் அம்மாவின் பெயரை உபயோதித்தேன்.
இந்த பதிவிற்கு நான் தலைப்பு தேவை இல்லை என்று தலைப்பு வைத்தேன். உண்மையில், “ஆசிரியர் தினம்” என்பதே சரியான தலைப்பாக இருக்கும். ஆனால் அதை தலைப்பாக வைத்திருந்தால், பதிவின் சுவை குறைந்திருக்கும். உண்மையில், ஆசிரியர் பணி என்பதே உலகின் மிகச் சிறந்த பணி.
மெர்சல் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் தமிழ் மொழியை “மொழிகளின் தாய்” என்று கூறுவது போல, “ஆசிரியர் பணி என்பது அனைத்து பணிகளின் தாய்” என்று நினைக்கிறேன்.ஆசிரியர்கள் ஏணிகளைப் போன்றவர்கள்.அவர்களூக்கு ஏற்றிவிடத்தான் தெரியும். தங்கள் மாணவர்களை உயர்த்துவதற்கான வழியை கற்றுத்தருவார்கள், தங்கள் மாணவர்கள் பெரிய இடத்தை அடைந்தாலும், அதை நினைத்து சந்தோஷப்படுவார்கள். “அவர் என்னுடைய மாணவன்” என்று பெருமையுடன் கூறுவார்கள்.