அம்மா,
நான் புகழ்வாய்ந்த அண்ணாவின் அரண்மனையில் வேலைக்கு சேர்ந்த நாளை நீ ஊர் முழுக்க சொல்லி கொண்டாடினாய்; நானும் கூட தான். நல்ல வேலை, மன நிறைவான சம்பளம் நம் வாழ்க்கை இனி மாறப் போகிறது என கனவு கண்டேன். ஆனால் மாறியது என்னவோ என் வாழ்க்கை மட்டும் தான். ஆம், பல வேலைகளில் திறன்பெற்ற நான் இங்கே நேரம்கடக்கும் யுக்தி அறியாமல் தவிக்கிறேன். வாழ்க்கை சக்கரத்தின் தரை தொடும் புள்ளிக்கு வந்த நான் எப்படி மேலெழுவது எனத் தெரியாமல் விழிக்கின்றேன்.
இங்கே எங்களுக்கோர் முதலாளி இருக்கிறார் அந்த முதலாளியையும் ஆட்டிப்படைக்கும் அரண்மனை வாழ்கையில் அனுபவம் நிறைந்த ஒருவரும் இருக்கிறார். எனக்கு பலமுறை சந்தேகம் ஒன்று மனத்தில் உதிக்கிறது ‘இங்கு நான் வந்தது வேலை பார்ப்பதற்கா அல்லது நடிகை ஆவதற்கா?’ என்று ஏனெனில் இங்குள்ள அனைவரும் நடிப்பவர்களையே முக்கியத்துவப்படுதுகிரார்கள் சகத் தொழிலாளிகளும் நல்ல நடிகர்களாகவே இருக்கிறார்கள். இங்கே எனக்கு செய்வதற்கு நிறைய வேலை உண்டு ஆனால் சொல்லித்தரத்தான் ஆளிருந்தும் ஆளில்லை. நானே கற்றுக்கொண்ட வேலையை செய்தேன் ‘ நீ வேலையின் போது நடிக்கவும் செய்ய வேண்டும் ‘ என சொல்லி சம்பளம் குறைத்தார்கள். உடல் மட்டும் அமர்ந்திருக்கும் தொழிற்கூடத்தில் வருகைப் பதிவு முக்கியம் என்றார்கள் மனதை வாசலோடு கழற்றிவிட்டு உள்ளே வரும் நான் ஒருநாள் எதிர்த்து கேள்வி கேட்டேன் சம்பளம் குறைத்தார்கள். காரணம் இல்லாமல் காத்திருக்க வைத்தார்கள் பயனறியாமல் வேலை வாங்கினார்கள் இம்முறை நான் எதிர்த்து கேட்கவில்லை காரணம், ‘நம் வாழ்க்கையை மாற்றும் வல்லமை அவர்களுக்கு உள்ளது’ என்பதால். அதை புரிந்த கொண்ட நான் மௌனம் காக்கும் கட்டாயத்தில் உள்ளேன். இனியும் அப்படித்தான் விலகி நிற்க நேரிடும் ஒரு நடிகையாக...
ஆனால் எத்தனை காலம்? கண்டிப்பாக இறுதிவரை இல்லை.
இப்படிக்கு,
மதிப்பெண் கூலி பெரும் மாணவத்தொழிலாளி.