Articles வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் – முண்டாசுக் கவிஞனை நினைவுகூர்ந்த ‘மாதவம்’

வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் – முண்டாசுக் கவிஞனை நினைவுகூர்ந்த ‘மாதவம்’

Posted by Giridharan Raghu 6 months ago, listed under Events

செப்டம்பர் 11-ஆம் திகதி இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட தினம் மட்டுமன்று; தமிழ்மொழி தன் தவப்புதல்வனை இழந்து கதறிய தினமுமாகும். ஆம், ‘முறுக்குமீசைக் கவிஞன்’ சுப்பிரமணிய பாரதியின் நினைவு தினமும் இந்நாளேயாகும்.

கவிஞராக, பெண் விடுதலைக்குப் போராடியவராக, விடுதலைப் போராட்ட வீரராக, இன்னும் பல்வேறு விதங்களில் அறியப்பட்டவரான எட்டயபுர மண்ணின் மைந்தனை நினைவுகூறும் விதமாக ‘மாணவர் தமிழ் வளர் மன்றம்’, கூடல் எனும் நிகழ்வை நடத்தியது.

மாலை 5 மணியளவில் மாதவம் அறையில் தொடங்கிய நிகழ்வு, வழக்கமான அஞ்சலிக் கூட்டமாக இல்லாமல், பாரதியைப் பற்றிய மாணவர்களின் புரிதலையும், அவரது கவிதைகளும், வாழ்க்கையும் அவர்களை எங்ஙனம் பாதித்துள்ளது என்பதை விளக்கும் ஒரு பேச்சுச் சங்கிலியாக அமைந்தது.

நிகழ்வைத் துவக்கிப் பேசிய மாணவர் ஹரிபாரதி, மகத்தான காரியங்கள் பல செய்த மகாகவியின் இறுதி ஊர்வலத்தில் இருபது பேர் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது தமிழினத்தின் கரும்புள்ளி என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மாணவர்கள் பலர் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். அவை பின்வருமாறு:

ஜெயஸ்ரீ எனும் மாணவி, பாரதியின் தைரியமே தனக்கு மிகவும் பிடித்த குணம் என்று சொல்லி, “தேடிச்சோறு தினம் தின்று….. வீழ்வேன் என்று நினைத்தாயோ?’” என்ற கவிதையை மேற்கோள் காட்டினார்.

தொடர்ந்து பேசிய அமரபாரதி, “ஞானப்பாடல், தத்துவப்பாடல்கள் போன்ற இலக்கியங்களுக்காகப் பெரிதும் அறியப்பட்ட பாரதியார், உலக நாடுகள் பலவற்றிலும் நடந்த நிகழ்வுகள் தொடர்பான கவிதைகளையும் படைத்துள்ளார் என்பதைப் பலரும் அறிவதில்லை” என்று விளக்கி, அதற்குச் சான்றாய், ‘கரும்புத் தோட்டத்திலே’ எனும் பாடலை விளம்பினார். அப்பாடலுக்கான கரு, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த கருப்பின மக்கள், ஃபிஜி, கியூபா போன்ற நாடுகளின் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்துச் செல்லப்பட்டபோது நேர்ந்த கொடுமைகளே என்று விவரித்தார்.

சிவா எனும் மாணவர் பேசுகையில், “ரௌத்திரமும், முரட்டுத்தனமுமே பாரதியிடம் எனக்கு மிகவும் பிடித்த பண்புகள்” என்றார். கோபம் என்பது புரட்சிக்கும், மாற்றங்களுக்கும் உதவுவதாக இருந்த காலங்கள் மாறி, உணர்ச்சி மிகுதியால் கோபப்பட்டுப் பிரிவினைகளை உருவாக்கும் நிலை இன்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ”பாரதி இன்று உயிரோடிருந்தால், ‘அக்கிரமங்கள் செய்வதற்கு அச்சமென்பதில்லையே’ என்றுதான் பாடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்” என்று சொன்னபோது, நையாண்டியாக எடுத்துக்கொண்டு சிரிப்பதா, சமூக நிலை கண்டு வருந்துவதா என்ற குழப்பமே ஏற்பட்டது.

அடுத்து பேசிய பாலாஜி, பாரதியாருக்குப் பெண் விடுதலையின்பால் ஏற்பட்ட நாட்டத்திற்கான காரணங்களைக் கூறினார். வெளியூரில் விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதையைச் சந்திக்க நேர்ந்தபோது, “வெளியூருக்கு மனைவியைக் கூட்டிச்செல்ல முடியாத அளவுக்குப் பெண்களுக்குக் கட்டுப்பாடு இருக்கும் ஒரு சமூகத்திலிருந்துகொண்டு, நீங்கள் நாட்டின் விடுதலைக்கு எப்படிப் பாடுபடுவீர்கள்?” என்று அவர் கேட்ட கேள்வியே பாரதியின் பெண்ணியம் சார்ந்த புரட்சிகளுக்கு வித்திட்டதாய் விவரித்தார்.

ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட ஹரிபாரதி, இயற்கையைப் பாரதி நேசித்ததையும், ‘கணக்கு பிணக்கு ஆமணக்கு’ என்று கூறிப் பாடம் படிப்பதைப் பால்ய காலத்தில் வெறுத்ததையும் எடுத்துரைத்தார். மேலும், “விடுதலை என்பது சாவியைக் கைமாற்றி விடுவதைப் போன்ற காரியமன்று; மக்களிடம் சமத்துவத்தை ஏற்படுத்துவதே” என்ற பாரதியின் கொள்கையை முழங்கினார்,

மீண்டும் பேசிய அமரபாரதி, பாஞ்சாலி சபதத்தில் வரும் திரௌபதி, பாரதியால் பாரத மாதாவை மனத்தில் கொண்டே விவரிக்கப் பட்டிருப்பாள் என்று கூறினார்; தருமர் திரௌபதியைப் பகடையாக்கியதைப் போலவே, பாரதத்தாயை நம் குறுநில மன்னர்கள் பகடையாக்கினர் என்று பொருளுணர்த்தினார்.

தலையில் பஞ்சாபியைப் போன்ற டர்பனும் (முண்டாசு), ஆடையாகக் கோட்டும், வேட்டியும், கம்பீரமான முறுக்கு மீசையுமெனப் பாரதியின் தோற்றமே அவரை ஒரு முழுமையான இந்தியனாக்கியது” என்ற பார்வையை முன்வைத்தார் பிரகதீஷ்வர்.

மேலும் பலர் பேசிய நிகழ்வின் இறுதியில் ஹரிபாரதி கூறிய கருத்துக்கள் முத்தாய்ப்பாக அமைந்தன. “ஆசுகவிகளாய், பண்டிதர்களுக்கு மட்டுமே புரியும்படியாய் இருந்த தமிழிலக்கியம், பாரதியின் வருகைக்குப் பின்னரே பாமரரும் படிக்கும்படியாய் மாறியது. தமிழிலக்கியத்தையே, பாரதிக்கு முன், பாரதிக்குப் பின் என்று இருவகைப்படுத்தலாம்” என்றார். மேலும், தாழ்த்தப்படவர்களாக அறியப்பட்டவர்களை, உயர்குடியினராகக் கருதப்பட்டவர்களுக்குச் சமமாக உயர்த்த வேண்டும் என்ற மையப்புள்ளியில் பாரதியார், பெரியாரிலிருந்து சற்றே மாறுபடுவதாகத் தெரிவித்தார்.

பூணூலால் தான் எதையும் சாதிக்கவில்லை என்றறிந்தபோது அதைக் கழற்றியெறியத் தயங்காத அதே பாரதிதான், கீழ்சாதியன் என அழைக்கப்பட்ட ஒருவனுக்குப் பூணூல் அணிவித்து, வேற்றுமை எனும் மாயையை உடைத்தார்” என்று மொழிந்து, “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” எனும் அடியுடன் கூட்டம் நிறைவுற்றபோது, பாரதி எனும் மேதையைப் பற்றிய ஒரு புதிய புரிதல் ஏற்பட்டதென்று சொன்னால் மிகையாகாது.

நிகழ்வை ஏற்பாடு செய்து, மகாகவியை நினைவு கூர்வதற்கு வாய்ப்பை அமைத்துத் தந்த மாதவ மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.