The Guindy Times

The campus magazine of CEG, AC Tech and SAP

சிகரத்தைத் தொட... பாகம் 3

Angeline Renita

April 07, 2017

(முதல் மற்றும் இரண்டாம் பாகத்தைப் படித்தபின் தொடரவும்)

(தொடர்கிறது)

துண்டு துண்டாக கிடந்த தன் மகளின் உடல் கண்டு கதறியது பாமர மலைவாசி தம்பதி.

”ஐயோ, உன்ன இதுக்கா புள்ள இவ்ளோ தூரம் அனுப்பிப் படிக்க வச்சோம்? ஆம்பிளப் புள்ளைய கூட நம்பலையே? உன்ன சின்ராசுக்குக் கட்டிக்கொடுத்து உன் கூடவே கடைசி மூச்ச விட்ரலாம்னு நினைச்சா, எங்களுக்கு முன்னாடி நீ மூச்ச விட்டுட்டியே?”

”அழாதிங்க! என் பேரு சிவராமன். கலெக்டர் சார்  என்னத்தான் இந்தக் கேசுக்கு நியமிச்சு இருக்காரு. உங்க பொண்ணு சாவுல உள்ள மர்மத்தை கண்டுபிடிக்காம விடமாட்டேன். உங்க பொண்ணு உடம்புல நிறைய இடத்துல காயம் இருக்குனு ரிப்போர்ட் வந்து இருக்கு. அது மட்டும் இல்லாம அவ உடம்புல உள்ள ரேகையும் பதிவு செஞ்சு இருக்கோம்; பாப்போம்.”

 

 

“இந்த பொண்ணு உடம்புல உள்ள கைரேகையை வெச்சுப் பார்த்தா, பதினெட்டுலேந்து இருவத்தஞ்சு வயசுள்ள யாரோ ஒருத்தன் தான் கொன்னு இருக்கணும்னு தெரியுது. ஆனா இந்தப் பொண்ணு பசங்க கூடவே பேசாதுன்னு, சுத்தி உள்ள எல்லா பொண்ணுங்களும் சொல்றாங்க. அது மட்டும் இல்லாம, இந்தப் பொண்ணுக்கு அதோட மாமா பையனை, பொறந்தப்பவே பேசி முடிச்சுட்டோம்னு அவங்க அம்மா அப்பா சொல்றாங்க. தோழிங்க எல்லாருமே அவ அவங்க மாமா பையனைக் காதலிச்சதாச் சொல்றாங்க. அப்போ காதல் விவகாரமாவும் இருக்காது; புரியலயே? ஆனா, இதுக்குப் பின்னாடி ஏதோ சதி இருக்குது. அது தெரியனும்னா அந்த கைரேக யாருதுன்னு தெரியணும். அதுக்கு அப்புறம் தான் எல்லா உண்மையும் விளங்கும்.” - கணக்கு போட்டது சிவராமனின் போலீஸ் மூளை. ‘அவங்க கிளாஸ் பசங்க கைரேகைய சோதிச்சு பாத்தா என்ன?’ - யோசிப்பதோடு இல்லாமல் கமிஷனரிடமும் அனுமதி பெறக் கிளம்பினார் சிவராமன்.

 

”சிவராமன், நீங்க சொல்றது எல்லாம் சரி; ஆனா, இது ஸ்டுடன்ஸ் மேட்டர். டூ சென்சிடிவ், சோ பீ கேர்புல்.”

”சார், ஐ வில் டேக் கேர் ஆப் இட். தாங்க் யூ சார்.”

                                                                                                                                                                                

 

”சார், நான் அவங்க கிளாஸ்ல உள்ளவங்க  கைரேகையைச் சோதிக்கலாமா?”

”தாராளமா சார் .”

“சார், எல்லோரடதும் பாத்தாச்சு; எதுவுமே பொருந்தல” என்றார்  கைரேகை நிபுணர் மூர்த்தி.

”என்ன பண்ணலாம்? சார், இன்னிக்கு வசந்தியோட கிளாஸ்ல யார்லாம் லீவு?”

”இன்னிக்குன்னு இல்ல, ஒரு வாரமா ரகுன்னு ஒரு பையன்  லீவு. அம்மைன்னு சொல்லி விடுப்பு எடுத்திருக்கான்.”

 ”சரியா எந்த தேதினு சொல்ல முடியுமா?”

”சார், அது வந்து… சுகந்தி இறந்த அடுத்த நாள்!”

”அந்தப் பையன் வீட்டு முகவரி கொடுங்க.”

 

 

ரகு சுகந்தியுடன் ஒன்றாகப் படிக்கும் பையன்; வசதிபடைத்த ஆள். பெரிய இடம் என்பதால் முகமும் அதனை அழகாக பரைசாற்றியது. அவன் அப்பா உயர்நீதிமன்ற வக்கீல். வீட்டிற்க்கு ஒரே  வாரிசு என்பதால் செல்லம் அதிகம்; பிடிவாதமும் கூட.

”இது ரகு வீடா? உங்க பையன் கிட்டக் கொஞ்சம் விசாரிக்கணும்; கொஞ்சம் கூப்பிடுங்க.”

”அவன் அவன் வீட்டுல இல்ல, சார். உங்களுக்கு என்ன வேணும்?”

”அம்மைன்னு காலேஜ்ல சொன்னாங்க! எங்க போனான் உங்க பையன்?

”அது வந்து…”

”ம்மா, யாரு?” - உள்ளிருந்து ஒலித்தது ரகுவின் குரல்.

”வாப்பா ரகு. எங்க… அம்மை எல்லாம் சரி ஆகிட்டு போல?”

“இல்ல இல்ல.”

”உன் வகுப்புல எல்லார் கைரேகையும் பரிசோதனை பண்ணிட்டோம். நீ மட்டும் தான் பாக்கி. உன் கைரேகையைக் கொஞ்சம் பரிசோதிக்கணும் தம்பி.”

 

 

அடுத்த பத்து நிமிடங்கள் ரகுவிற்கு எப்படி நகர்ந்தது என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

“சார், இதே கைரேகை தான் சார்” என்று சொன்னார் கைரேகை நிபுணர் மூர்த்தி.

”சொல்லு, சுகந்தியை ஏன் கொலை செஞ்ச?

”யாரு சுகந்தி? எனக்கு அதெல்லாம் தெரியாதே? அம்மா, யாரும்மா இவங்க? என்னென்னவோ கேக்குறாங்க?”

”தம்பி எல்லாம் தெரிஞ்சுருச்சு. உண்மையை மட்டும் சொல்லு. இல்லைன்னா ஜெயில்ல கூட்டிட்டுப் போய் விசாரிக்குற மாறி பண்ணிடாத சொல்லிட்டேன்.”

”அம்மா, அப்பாவை வரச்சொல்லு.”

”தம்பி, கொஞ்சம் பொறு. உங்க அப்பா  மேட்டுப்பட்டி இன்ஸ்பெக்டரிடம்  பேசுனது வச்சு உங்க அப்பா நம்பரைக் கண்டுபிடிச்சிட்டோம். இனிமே உங்களால எதுவும் பண்ண முடியாது. அவங்கள அப்புறம் வர சொல்லலாம். இப்போ என் கிட்ட சொல்லு. சுகந்தியை நீ தானே கொலை பண்ணுன?’

”ஆ... ஆ... ஆமா சார்.”

”எதுக்காக செஞ்ச?”.

”என்னைக் காதலிச்சு ஏமாத்திட்டா.”

”என்ன சொல்ற?”

”நானும் சுகந்தியும் ஃபேஸ்புக் நண்பர்கள் சார். நல்லாப் பேசுனோம். காதலிக்கிறேன்னு சொன்னேன்; அவளும் பிடிச்சிருக்குன்னு சொன்னா. ஃபோன்லயும் பேசுனோம். திடீர்னு பேசுறத நிறுத்திட்டா. நேர்ல போய் கேட்டா, ’நான் எப்போ அப்டி பண்ணேன்? நான் ஃபேஸ்புக்லயே இல்லைன்னு சொல்லி என்னை ஏமாத்தப் பார்த்தா. அதுனால தான் மன்னிப்பு சொல்றேனு சொல்லி, அவளை வரச்சொல்லி கொன்னு, யாருக்கும் தெரியாம இருக்கணும்னு தண்டவாளத்துல வீசிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். நான்  ஒரு மாதிரியா இருக்கறதைப் பார்த்து அப்பா கண்டுபிடிச்சுட்டாங்க. அதுக்கப்புறம் காலேஜ் போக வேணாம்னு அம்மா கிட்ட சொன்னேன். ‘நான் பாத்துக்குறேன்’னு சொல்லிட்டாங்க.

”நேர்ல ரெண்டுபேரும் பேசிக்க மாட்டிங்களா?”

”இப்போதைக்கு வேணாம்னு அவதான் சொல்லிருந்தா சார்.”

சிவராம், கான்ஸ்டபிளிடம், ”இது யாரு பயன்படுத்துனதுன்னு கண்டுபிடிங்க. அதை வெச்சு சிம் கார்டு யார் பேருல இருக்குனு கண்டுபிடிங்க.”

”சார், அது மீனுன்னு இவங்க கிளாஸ்ல படிக்குற ஒரு பொண்ணு பேர்ல இருக்கு.”

”அப்படியா? இது என்ன  புதுக்கதை!”

 

 

மீனு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண். பெண்ணின் இயல்பான ஆழகுடையவள். ஆனால்அவளுக்கும் இக்கொலைக்கும் என்ன தொடர்பு?

”அந்தக் காலேஜுக்கு ஃபோன் பண்ணி அந்தப் பொண்ணு வந்திருக்காளான்னு விசாரிங்க. இல்லைன்னா முகவரி வாங்குங்க.”

“இல்ல சார். அந்தப் பொண்ணு காலேஜுக்கே வர்றதில்லையாம். அந்தப் பொண்ணு அட்ரெஸ் வாங்கிட்டேன்.”

 

 

அடுத்த அரை மணி நேரம்….

ரகுவும் போலீசும் நிற்பதைக் கண்ட அவள், “சார், நான் எல்லாமே சொல்லிடுறேன். நான்தான் ரகுகிட்ட பேசுன பொண்ணு. ஆனா, ரகுக்கு சுகந்தி மேலதான் ஆசைன்னு தெரிஞ்சுது. சுகந்தி ஃபேஸ்புக்ல இல்லைன்னு தெரிஞ்சுக்கிட்டு அவ பேர்ல பதிவு பண்ணேன். பின்னாடி உண்மையைச் சொல்லி காதலிக்கச் சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள விஷயம் வீட்டுக்கு தெரிஞ்சு என் படிப்ப நிப்பாட்டிட்டு என் ஃபோனையும் பறிச்சிட்டாங்க. அதுனால ரகுகிட்ட என்னால எதுவும் சொல்ல முடியல. இப்போ  பேப்பர்ல பார்த்துத்தான் எல்லாமும் தெரிஞ்சுது. நான் தான் எல்லாத்துக்கும் காரணம்; என்ன மன்னிச்சுடுங்க சார்.”

”நான் உங்கள எல்லாம் மன்னிக்க முடியாதும்மா. உங்களால தங்களோட எதிர்காலம்னு நினைச்ச  தன் மகளைப் பறிகொடுத்துட்டு நிக்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்லுவீங்க? கண்ணும் கண்ணும் பேசிய காதல் போய்… நீங்க எல்லாம்… உங்களைச் சொல்லித் தப்பில்ல, வயசுக் கோளாறு.

“காதல் தோல்வியைத் தாங்கிக்க மனசு இல்லாம கொலை செய்யிற அளவுக்கு வக்கிர புத்தியை வளத்துக்குறீங்க. படிப்புல சிறப்பா இருந்து இப்படி வாழ்க்கையில தோத்துப் போயிடுறீங்க. வாழ்க்கைல காதல் பெருசுதான், இல்லன்னு சொல்லல. ஆனா உங்களோட அவசரப்போக்குல  அதுவே இப்பொ வன்முறையா மாறிப்போச்சு.

அந்தப் பொண்ணு கொலைக்கான உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறது மட்டும்தான் என் வேலை. உங்களுக்கான தண்டனையை, கண் மூடிய நீதி தேவதை தரும். வாங்க.”

 

 

அதே நேரம் தன் கிராமத்துக்கு விளக்கேற்றே வந்த மலைக்கிளி, தன் மலைச்சிகரத்தின் மயானத்தை நோக்கி நகரத் தொடங்கி இருந்தது, உயிரற்ற பிணமாய்! கிராமமும் வேறு பெண்ணைத் தேட்த் தொடங்கியது தன் வாழ்வின் விடிவுக்காக.

விடியுமா?

 

(முற்றும்)