The Guindy Times

The campus magazine of CEG, AC Tech and SAP

சிகரத்தைத் தொட... பாகம் 2

Angeline Renita

April 07, 2017

(முதல் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்)

(தொடர்கிறது)

சுகந்தி சென்னையில் உள்ள பிரபல கலை அறிவியல்  கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. வெளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்தாள்.

மலைகிராமத்து அழகு தேவதை, மனதளவிலும்!

ஆங்கில வாடையே இல்லாமல் வளர்ந்த அவள், முதலில் தடுமாறினாலும், ஒரு வருடத்தில் ஆங்கிலம் மெதுவாக அவளுக்குச் சரளமாகப் பிடிபடத் தொடங்கி இருந்தது. அவளின் பழக்கவழக்கம் அங்குள்ளவர்களுக்கும், அங்குள்ளவர்களின் பழக்கவழக்கம் இவளுக்கும் முதலில் புரியாப் புதிராக இருந்தாலும், அவளின் இயல்பான பண்பு அவளை மற்றவர்களுடன் நெருக்கமாக்கியது. மலைவாழ் பெண்ணாக இருப்பினும் அவளது முயற்சி கண்டு முழு ஒத்துழைப்பு தந்தனர்.

ஆரம்பத்தில் அம்மா அப்பாவின் பிரிவு மிகவும் வருத்தினாலும், தன் இனத்திற்கு - குறிப்பாகத் தன் இனப் பெண்களுக்கு - உதாரணமாக இருக்க வேண்டும் எனும் தன் அப்பாவின் ஆசை அவளுக்கு உறுதி தந்தது.

அது மட்டுமின்றி பிறந்தபோதே அவளுக்கென்று பேசி முடிக்கப்பட்ட தன் மாமன் மகன் சின்ராசுவின் ஆசையும் அதுவாக இருந்தபோது சொல்லவா வேண்டும்?

” ஏய்சுகந்தி, இன்னிக்கு என்னடி புது ட்ரெஸ் போல?” என்றாள் மீனு.

”ஆமாம் மீனு, எங்க தனபாலு மாமா எடுத்து கொடுத்தாங்க.”

”நடத்து, நடத்து.”

”ஏய், நீ யாரையாவது காதலிச்சிருக்கியா? இப்படி அழகா இருக்க, காதலிக்காமலா இருப்ப?”

”ஹேய் நீ வேற மீனு, சும்மா இரு.”

”நீ ஃபேஸ்புக் பயன்படுத்துவியாடி?”

”அய்யய்யோ, அதெல்லாம் எனக்கு வேணாம்ப்பா, எங்க மாமா  இங்க காலேஜ் சேர்த்து விடும் போதே அதெல்லாம் வச்சுக்க கூடாதுனு தெளிவா சொல்லிட்டாங்க.”

”அடிப்போடீ, எந்த காலத்துல இருக்க? அதுல எனக்கு ரகுன்னு ஒரு பையன் பழக்கம்.”

”எப்படி தெரியும் அவன உனக்கு?”

”அவனைத் தெரியாது. ஆனா அவன்தான்  நண்பனானான் முதல்ல இணையத்துல. ஃபேஸ்புக்ல பார்த்தேன், நல்ல பையனாத் தெரிஞ்சான்; அதான் அப்படியே நண்பர்களாயிட்டோம்.”

”அது எப்படி நேர்ல பாக்காமலே நல்ல பையன்னு தெரியும் ?”

”ஃபோட்டோ எல்லாம் பாத்தேனே.”

”சரி சரி. பாத்து ஜாக்கிரதையா இருந்துக்கோ.”

மீனுவும் சுகந்தியும் ஒரே வகுப்பில் பயிலும் மாணவிகள். நெருங்கிய நட்பு எனுமளவிற்கு இல்லாவிட்டாலும் சுகந்தி எல்லோருடனும் நட்புடன் பழகுவது போன்றே இவளுடனும் பழகினாள் .

                                          .........................................

“மாமா கையெழுத்து போடாதிங்க” - சன்னமாக ஒலித்தது அக்குரல். அது தனபாலு பொன்னையாவின் மைத்துனன், சுகந்தியின் தாய்மாமனின் குரல்.அந்த ஊரில் சொல்லிகொள்ளும் அளவிற்கு 10 ஆம் வகுப்பு படித்திருந்தான். மேட்டுப்பட்டி எஸ்டேட்டில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தான்.

ஏய்யா!!தனபாலு நம்ம புள்ளைய பத்தி என்ன என்னவோ சொல்றங்கயா ...என்னனு கேளுய்யா ...

”மாமா, விஷயத்தை இப்போ தான் கேள்விப்பட்டேன்; எதையும் தெளிவாத் தெரிஞ்சுக்காம எதுவும் பண்ண வேணாம்.”

”சார், நாங்க எங்க பொண்ணு உடம்ப பாக்கணும். முடியாதுன்னு சொன்னீங்கன்னா இந்த மாவட்ட கலெக்டர்ட்ட  மனு கொடுப்போம்.”

”சார், இவன் என்ன விவகாரம் பிடிச்சவனா இருக்கான்? நமக்கு என்ன, சென்னையில போய் பாக்கட்டுமே?” என்றார் கான்ஸ்டபிள்.

”யோவ், விஷயம் புரியாமப் பேசாதய்யா. இப்படிச் சொல்லச்சொல்லித்தான் மேலிடத்து உத்தரவு. ஒண்ணும் தெரியாதவங்கன்னு நெனச்சு சரின்னுட்டேன். சரி, இரு வர்றேன்.”

”ஐயா, நான் மேட்டுப்பட்டி  இன்ஸ்பெக்டர்  பேசுறேன். இங்க செத்துப்போன பொண்ணோட மாமான்னு ஒருத்தன்  பொண்ணோட உடம்பைக் காட்டலன்னா கலெக்டர்கிட்ட மனு கொடுப்பேன்னு பேசுறான்.”

“என்ன பண்ணலாம்?அவனை ரெண்டு நாளைக்கு உள்ள தூக்கி வை, மத்தவங்கள மிரட்டி அனுப்பு. ‘உங்க பொண்ணோட உடம்பு துண்டு துண்டா போயிட்டு; அதுனால உடம்பைக் கொண்டு வர முடியாது.அஸ்தி கிடைக்கச் செய்றேன்’னு சொல்லி அனுப்பிடு. இங்க நாங்க அது அநாதப் பொணம்னு எழுதிடுறோம்.”

ஆனால் அவர்கள் திட்டம் பலிக்கவில்லை. அதற்குள் தனபால் காணமல் போய் இருந்தான், கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக.

                                                                           ………………………………………….

கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான் தனபால்.

தன்னையும் , சுகந்தியையும் அறிமுகப்படுத்திகொண்டு  நிகழ்ந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான். தன் அக்கா மாமாவையும் அவர்களிடம் இருந்து மீட்டுத் தரவும் , சுகந்தி கொலைக்கான காரணம் கண்டுபிடிக்க உதவுமாறும் கெஞ்சினான்.

”ஹலோ, நான் நீலகிரி மாவட்ட கலெக்டர் பேசுறேன். என்ன சார் பண்றீங்க? எதையும் முழுசா விசாரிக்காம எப்படி நீங்களே ஒண்ணு முடிவு பண்ணிப்பிங்க. சார், நீங்க பிடிச்சு வெச்சிருக்க பொன்னையாவையும் அவங்க மிஸ்ஸசையும் இங்க முதல்ல கூட்டிட்டு வாங்க.”

கலெக்டர் அலுவலகத்தை போலீஸ் ஜீப் நெருங்கும் முன் தகவல் பறந்து இருந்தது சென்னைக்கு. பின்னாலே பறந்தது மற்றொரு வாகனம் சுகந்தியின் அம்மா, அப்பா, தனபாலோடு கலெக்டரால் அனுப்பப்பட்ட சிறப்பு குழுவோடு, இறப்பின் மர்மம் அறிய...

(தொடரும்)