The Guindy Times

The campus magazine of CEG, AC Tech and SAP

அதிகாரம் 134: உணவுடைமை

Giridharan Raghu

April 07, 2017

உணவு, உடை, இருப்பிடம் எனும் மூன்று அத்தியாவசியத் தேவைகளில் இரண்டாவதும், மூன்றாவதும் எவ்விதப் பிரச்சினையுமின்றி கிடைத்தாலும், முதலாவது தேவையைப் பூர்த்தி செய்ய மனிதன் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. ருசியான சமையல் செய்வதற்குக் குடும்ப உறுப்பினர்கள் உடனில்லாத விடுதி மாணவர்களுக்கு இது சாலப் பொருந்தும்.

  1. 200 பக்கங்கள் ஒரே நாளில் எழுத வேண்டுமா?
  2. ஒரு பக்கக் காதலுக்குத் தூது அனுப்ப வேண்டுமா?
  3. கறாரான வாத்தியாரிடம் கையெழுத்து வாங்க வேண்டுமா?

அனைத்திற்கும் ஒரே வழி;

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  1. நடப்பன, ஊர்வன, பறப்பன போன்ற அனைத்து வகையான ஜீவராசிகளையும் உண்ணும் ஆசை இருக்கும் – ஆனால் வாய்ப்புக் கிட்டாத – ஒரு இனாவானாவைப் பிடிக்கவும்.
  2. சாப்பாடு வாங்கித் தருவதாக வாக்களிக்கவும் (பின்பு அதை நிறைவேற்றுவதும், ஏமாற்றுவதும் அவரவர் சாமர்த்தியத்தைப் பொறுத்தது).

”நீ சொன்னா பில்டிங் மேலேயிருந்து கூட குதிப்பேன்டா” என்று நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் விஜய் சேதுபதி போல, கட்டளைக்குக் கட்டுப்படும் பல்லாயிரக்கணக்கான 'ஒப்பந்த ஊழியர்கள்’ இங்குண்டு.

கிளைக்கதைகளை விட்டுக் கருவுக்கு வருவோம். இவ்வாறு உணவுக்காக அல்லாடும் – ஆனால் ஒப்பந்தங்களுக்குக் கட்டுப்படாத – ஒரு சைவ உணவு விரும்பியின் கதையே இது. இதில் வரும் பல்வேறு சம்பவங்கள் பலருக்கும் நடந்திருக்க வாய்ப்புண்டு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சம்பவம் 1:

பிறந்த நாள் ‘ட்ரீட்’ என்பது எழுதப்படாத ஒரு கட்டாயச் சடங்கு. பள்ளி மேல்நிலை வகுப்பில் தமிழ்த் துணைப்பாடத்தில் படித்த ‘மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து’ எனும் கதை போல இங்கும் நண்பர்களை அழைப்பதற்கென்று வழிமுறை இருக்கிறது.

  1. செலவினங்களுக்கேற்ப எத்தனை பேருக்கு விருந்து என்பதை முடிவு செய்ய வேண்டும். இது பெரும்பாலும் உபசரிப்பவரின் பெற்றோரது மனநிலையைப் பொறுத்தது. “அக்கவுண்ட்ல எவ்ளோ போடட்டும்?” என்று கேட்கும் செழிப்பான குடும்பங்களும் உண்டு; “சனியனே, இருக்குற பிரச்சனைல இது வேற உனக்கு ஒரு கேடா?” என்று திருவாய் மலரும் பெற்றோர்களும் உண்டு.
  2. எதிர்பார்க்கப்படும் அனைத்து நண்பர்களையும், உபசரிக்கப்போகும் நபர் விடுதியறைக்குச் சென்று அழைக்க வேண்டும். போகும் நேரத்தில் அந்நண்பர் அறையில் இல்லாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அத்தகைய சமயங்களில் பக்கத்து அறையில் உள்ள மற்றொரு மனிதரிடம் விஷயத்தைச் சொல்லாமல் “வந்தா ஃபோன் பண்ணச் சொல்லு” என்று கூற வேண்டும். ‘ஏன்?’, ‘எதற்கு?’ என்று துருவும் ‘ரூல்ஸ்’ ராமானுஜர்களை இக்கட்டத்தில் சந்திக்கும் வாய்ப்புண்டு. எனினும், இக்கட்டம் தவிர்க்க முடியாத அங்கம் வகிக்கிறது.
  3. கூடுமானவரை ஒரு ’வாட்ஸ்அப்  குரூப்’ துவக்கி, விருந்துக்கு ஒரு மூன்று நாள் முன்பிருந்து நினைவூட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். “ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லல?”, “நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டா?” போன்ற குத்தீட்டிக் கேள்விகளிலிருந்து தப்பிக்க இது உதவும்.

 

 

 

 

 

 

 

சைவப்பிரியர்களுக்கு இங்குதான் சிக்கலே. ‘டூயல் கிச்சன்’ என்றழைக்கப்படும் ’சைவம் & அசைவம்’ அறிவிப்புள்ள உணவகங்களுக்குச் செல்ல அசூயைப்படும் ஆட்கள் கருட புராணத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று ’அந்நியன்’ கூறிவிட்டபடியால், அப்பாவி அம்மாஞ்சிகள் மாட்டிக்கொண்டு முழிப்பார்கள்.

வழிமுறையைப் பின்பற்றி, “போய்த் தொலையுது” என்று அத்தகைய உணவகங்களுக்குச் சென்றால் அங்கு சைவ உணவுகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுதான் இருக்கும். ஏற்கனவே ’வெஜிடேரியன் மெனு’வில் உள்ள சிறப்பான பெயர்கள் நான்கே நான்குதான்.

 

 

 

 

 

 

 

 

 

பனீர், காளான், உருளைக்கிழங்கு மற்றும் கோபி (எ) காலிஃபிளவர் ஆகியவையே அந்த ‘ஃபண்டாஸ்டிக் ஃபோர்’ அணி. ராகுகாலத்திலோ, எமகண்டத்திலோ சென்றால் நான்கும் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். நல்ல நேரங்களில் இரண்டேனும் இருக்கும்.

இவற்றைச் சகித்துக்கொண்டு ஏதேனும் ஒரு சைவ உணவை ‘ஆர்டர்’ செய்தால், அங்கு வேலை செய்யும் ‘சர்வர்’களுக்கு அந்த சைவ அம்மாஞ்சி (சை.அ) ‘பண்டாரம்’ போலத் தோன்றிவிடுவார் போலும்! தொடர்ந்து பரிமாறப்படும் அசைவ வகையறாக்களுக்கிடையில் சை.அ-வின் இடத்தில் தண்ணீர் மட்டும் மீண்டும் மீண்டும் நிரப்பப்படும்.

பொறுமையிழந்து அரைமணிநேரம் கழித்து, “சார், அந்த பனீர் பட்டர் மசாலா…” என்று ‘ரெண்டம்பது’ வடிவேலு போல இழுத்தால், “கொஞ்சம் பொறுமையா இருங்க சார். அதுக்குதான் நான் ஆர்டர் எடுக்கும்போதே சொன்னேன், சிக்கன் க்ரேவி எடுத்துட்டு வரவான்னு. நீங்கதான் பிடிவாதமா வேணாம்னுட்டீங்க” என்று முகத்திலறைந்தாற்போல் சொல்லிவிட்டுச் செல்வார் சர்வர்.

‘என்னக் கொடும சார் இது?’ என்று சுமார் 10 தம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, நாவில் நீர் சுரக்க, சுவையறியாத அசைவ உணவுகளைக் காமக்கண்கொண்டு பார்க்கத் தொடங்குவார் நம் சை.அ. கடைசியாக, உடன்வந்த அனைவரும் உண்டுமுடித்து, ‘மவுண்டெயின் டியூ’ குடித்துக்கொண்டும், சோம்பு மென்றுகொண்டும் இருக்கும்போது ஆவி பறக்க வந்திறங்கும் பனீர் பட்டர் மசாலா.

ஆனால் சாப்பிட்டு முடித்த பலரும் கிளம்பும் மனநிலையில் இருப்பர்; எனவே, “வந்ததற்கு நன்றி” என்று வழியனுப்பிவிட்டு வந்து பார்த்தால், பனீர் பட்டர் மசாலா ஆறிக் குளிர்ந்து போயிருக்கும்.

பனீர் சூடாரு முன்னால்உண்அல்லால்

 கண்ணீர் மல்கி விடும்

என்று திருவள்ளுவரின் வழிவந்த ஒரு சை.அ., ’உணவுடைமை’ எனும் அதிகாரத்தில் ஈரடி பாடிச்சென்ற வரலாறுண்டு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சம்பவம் 2:

சை.அ.வைக் கலாய்த்துக் குதறும் ஒரு கோஷ்டி, நண்பர்கள் வட்டாரத்தில் எப்போதும் இருக்கும். திட்டமிட்டு வேண்டுமென்றே சர்வரைக் ‘கரெக்ட்’ செய்து, ‘கோபி மஞ்சூரியன்’ என்ற பெயரில் ‘சிக்கன் மசாலா’ தரச்செய்யும் சதித்திட்டங்கள் அரங்கேறும். இதிலும் இரு வகையான கிளை நிகழ்வுகள் உண்டு.

  1. சை.அ. ஆர்வத்துடன் தனக்குத் தரப்பட்ட ‘சைவ’ உணவை வாயருகே கொண்டுசெல்லும்போது, “ஐய்யோ… தப்பு நடந்துபோச்சே” என்று நீலிக்கண்ணீர் வடித்துவிட்டு, “வேஸ்ட் ஆயிடுமே! என்ன பண்றது? சரி விடு, நானே சாப்படறேன்” என்று பதறிச் சிதறிச் சமாளிக்கும் கடோத்கஜர்கள் ஒரு கூட்டத்தில் இருவராவது இருப்பார்கள்.

 

 

 

 

 

 

 

 

      2. சை.அ. ஆர்வத்துடன் தனக்குத் தரப்பட்ட ‘சைவ’ உணவை ரசித்து, ருசித்து உண்டு முடித்த பின்பு, “இப்போ நீ சாப்பிட்டது சிக்கன்” என்று போட்டுடைப்பார்கள். தர்மத்துக்கும், நடப்புக்குமான இடைவெளியை எண்ணி சை.அ. தடுமாறும் நேரத்தில், அவரது மூளைக்குள் ‘கைக்கொட்டிச் சிரிப்பார்கள்’ என்று ‘அபூர்வ ராகங்கள்’ பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.

        “சிக்கனும் செரித்த சைவனின் வயிறோ

       அக்கணம் சிரித்து விடும்

சம்பவம் 3;

கூட்டமாகச் சென்றால் குழப்படியாகிறது என்று முடிவு செய்து, சை.அ. தனியாகச் சைவ உணவகம் செல்ல முடிவெடுக்கிறார்.

வழக்கமான பதார்த்தங்களை எடுத்துவரப் பணிக்கும் நேரத்தில், பெண் வீட்டுக்குச் சீர் கொடுக்கும் தாம்பாளம் போன்ற ஒரு தட்டை வைத்துக்கொண்டு சர்வர் ஒருவர் புன்னகைத்து, “சார், இது எங்க ஸ்பெஷல்; ட்ரை பண்றீங்களா?” என்று ஒரு சிறிய கிண்ணத்தில் பாசந்தி வைத்துவிட்டுப் போவார். அரைநொடியில் அதை அரைத்து முடிக்கும் சை.அ.வின் பற்களின் அலகிலா விளையாட்டையறிந்த சர்வர், மீண்டும் மீண்டும் அதைத் தந்துகொண்டேயிருப்பார்.

இறுதியாகப் ‘பில்’ வரும்போதுதான் தெரியும் சாப்பிட்ட எதுவுமே ‘காம்பிளிமெண்ட்’ இல்லையென்று. நான்கிலக்கத் தொகையைப் பார்த்ததும் தலைசுற்றித் தடுமாறும் சை.அ., சர்வரை முறைக்கும்போது, ‘எவன் அடிச்சா பொறி கலங்கி, பூமி அதிர்வு தெரியுதோ அவன்தான் தமிழ்” என்று சர்வரின் பார்வை விஜய் வசனம் பேசும்.

கோபத்தில் கத்த எத்தனிக்கும் நேரத்தில்தான் எதிர் வரிசையில் அமர்ந்து பொடி இட்லி உண்ணும் அழகான பெண் கண்ணில் படுவாள். ”வரலாறு முக்கியம் அமைச்சரே” என்று தனக்குத்தானே கூறியபடி, பணத்தைக் கட்டிவிட்டுப் பந்தாவாக்க் கிளம்புவார் சை.அ. வெளியில் ‘நானும் ரெவுடிதான்’ எனும் அளவுக்குப் படாடோபமாய்த் தெரிந்தாலும், மனதுக்குள் ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ எனும் வரிதான் ஓடிக்கொண்டிருக்கும்.

         ”பந்தியில் .சி.க்கு அலையும் மனிதர்

          சந்தி சிரித்து விடும்

இவையும் இன்ன பிற இன்னல்களும் இருந்தாலும், சைவப்பிரியர் என்பதற்குப் பெருமைப்படும் சை.அ, “நான் தனி ஆளு இல்ல. என் பின்னால ஒரு கூட்டமே இருக்கு” என்று பீலா விட்டுச் சுற்றிக்கொண்டுதானிருக்கிறார். ஒவ்வொரு நண்பர்கள் குழாமிலும் இவர் இருப்பார், என்றும், எப்போதும்.